Saturday, October 25, 2014

இன்மை எனும் உண்மை




 [ஆகாய கங்கை- பால்வழி- இமையம். பெரிதாக்க படத்தின்மேல் சுட்டவும்]

ஆசிரியருக்கு,

பூஜியத்தை நெருங்க நெருங்க கண பரிமாண பேதங்கள் குறைந்து குறைந்து எண்களே இல்லாமலாகி பூஜ்யத்தில் மூழ்குகிறது. தத்துவம் அதன் உயரத்தை அடைய அடைய உண்மையை நெருங்குகிறது , பின் அதுவகிறது. அதை நோக்கி சுமந்து கொண்டு செல்லும்  மொழி தனது சொற்களின் பேதங்களை எல்லாம் இழக்கிறது , அது சுட்டும் பொருட்களும்  தமது பேதங்களை இழக்கிறது இறுதியில் அதுவாகிறது. பெருநிலை அடைகிறது.  

பிரயாகை -3 இல் இது தான் நிகழ்ந்தது. இந்த அத்தியாயம் முடிந்தபின் ஞானம் என்பதும் நிலைபெயராமை என்பதும் உண்மை என்பதும் ஒன்றுதான் என்கிற தரிசனத்தை அடைந்தேன். துருவத்தை அடைய அடைய ஞானம் தனது மேல் சட்டையை உதிர்த்தது உள்ளே நிலைபெயராமை இருந்ததது மேலும் நெருங்க இரண்டாவது சட்டையை உதிர்த்தது உள்ளே உண்மை இருந்தது. இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள பேதங்கள் பூஜியத்தை அடைந்ததும் இல்லாமலாகிவிட்டது. 

வாழ்வனுபவம் மூலம் நாம் அடைவது லௌகீக ஞானம் ,

ஆராய்ந்தறிதல் மூலம் நாம் அடைவது புறஉலக ஞானம், 

ஆன்மீகமாக நாம் அறிவதே அசல் ஞானம். இலக்கியத்தால் அதை அடைவது மிக அபூர்வம். அது பிரஸ்னர்  அடைந்தது , கூடவே  வாசகர்களும் அடைவது. 

மண்ணில் மானுடர்க்கு எவ்வளவோ இன்பங்கள் இருந்தும் அவற்றில் தலையாயது , தரிசனக் கணத்தில் அடைவது. 

  ( பனிவெளியில் அமர்ந்து விண்ணைநோக்கி கண்ணீருடன் வணங்கினார் பிரஸ்னர். மானுடனுக்கு அளிக்கப்பட்ட அப்பெருங்கருணையை எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழ்ந்து மேலும் மேலும் அழுதார்)

வாயடைக்க சிந்தையடைக்க சித்தமடைக்கச் செய்து விட்டீர்கள்  ஜெ. இன்மையே உண்மை , இன்மையே நிலையானது .  .

கிருஷ்ணன்.