Sunday, October 12, 2014

நீலம் இணையதளம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


நீலப்பித்தில் இருந்து தெளிந்து விட்டீர்களா? உங்கள் இணைய தளமே அந்த பித்தினால் பல நாட்களாக ஆட்கொண்டிருந்தது. சில நேரம், என்ன இது அதீதமான உருக்கமாக இருக்கின்றதே என்று தோன்றியது. பிறகு நினைத்து கொண்டேன், அனைவரும் நீல கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அதை படிக்காமல் அந்த நிலையை புரிந்து கொள்ள முடியாது, அதை விமர்சிக்கலாகாது என்று. இந்த தருணத்தில் அந்த உணர்வு கொந்தளிப்பில் பங்கு கொள்ளாமல் போனது எனக்கு தான் இழப்பு. இனி நான் தனியாக அந்த அனுபவத்தை அடைய வேண்டும். 

மழைப்பாடலை ஒட்டுமொத்தமாக 2 வாரங்களில் படித்து முடித்தேன். ஒரு ஒட்டு மொத்த அனுபவத்துக்காக தான் நாவல் எழுதி முடிக்கப்பட்டவுடன் படிக்க தொடங்குகிறேன்.
நீலம் எழுதும் போது உங்கள் அனுபவங்களை எழுதியிருந்தீர்கள். ஜெயமோகன் தான் இதை எழுதியதா என்று தோன்றியது. schizophrenia, bipolar disorder என்ற வார்த்தைகள் அதில் சாதரனமாக பயன்படுத்தபட்டிருந்தது அதிர்சியை தான் கொடுத்தது. எந்த நேரத்திலும் உங்களை சம நிலையிலிருந்து வழுவாமலேயே கடந்த ஒன்றரை வருடமாக பார்த்த எனக்கு இது வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை ஒவ்வோரு படைப்பிற்கு பிறகும் இப்படி தான் உணர்வீர்கள் போலும். அதில் நீலம் உச்சமாக இருந்திருக்கலாம்.

வெண்முரசு விவாத தளம் ஒரு நல்ல முயற்சி. அத்தோடு மற்ற நாவல்களின் தளங்களையும் எடுத்துவைத்தது மேலும் சிறந்த செயல். என்னை போன்ற புது வாசகருக்கு அது ஒரு பெருச்செல்வம். வெண்முரசு விவாத தளத்தில், ஒவ்வொரு நாவலுக்கும் ஏற்றார் போல் விவாதங்களை மேலும் பிரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அந்த வேலை எல்லாம் நீங்கள் செய்ய கூடிய அளவிற்கு முக்கியமானதல்ல. என்னை போன்ற வாசகர்கள் செய்ய வேண்டிய காரியம். 

இன்னொரு முக்கியமான மாற்றத்தை கவனித்தேன், தேடல் பக்கத்தை சரி செய்துள்ளீர்கள். மிக மிக நன்றி. முன்பு அது மோசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கருத்தையும், ஆளுமையும் நான் அறியும் போது அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்றே தேட முயல்வேன். அப்போதெல்லாம் சரியான கட்டுரைகளை எடுத்து தராது. "Duplicate records" என்று கணினி துறையில் சொல்ல கூடிய, ஒரே கட்டுரை மீண்டும் மீண்டும் காட்டப்படும். அதை பற்றி நானே உங்களுக்கு எழுத நினைத்ததும் உண்டு. இப்போது அது சரி செய்யப்பட்டிருக்கிறது. கச்சிதமாக தேடி தருகிறது. 

அன்றாடம் இரண்டு மூன்று பதிவுகள் உங்கள் தளத்தில் வருகிறது. ஆயிர கணக்கில் பதிவுகள் இருக்கிறது. அதை சரியான முறையில் தொகுக்கவும் தேடவும் வழியமைப்பது மிகவும் முக்கியமானது.


தமிழ் சமுதாயத்திற்கு பெரும் பணி ஆற்றி வருகிறீர்கள். நான் மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறேன். அதை சார்ந்து உங்களுக்கு ஏதும் உதவி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி ஏதும் தேவையிருப்பின் இந்த மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தவும். கல்லெடுத்து கொடுக்க இந்த அணில் காத்திருக்கிறது.

நன்றி,
ஹரீஷ்.அன்புள்ள ஹரீஷ்

ராமச்சந்திர ஷர்மா , ஆனந்தக்கோனார் என்ற இரு நண்பர்கள்தான் இப்போது தளத்தின் பணிகளைக் கவனிக்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால் தளத்தின் வருகையாளர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்வதுதான். முதலில் ஒரு சிறிய தளமாக இருந்தது. அப்போது இந்த விரிவை எதிர்பார்க்கவில்லை. வருகையாளர் எண்ணிக்கைக் கூடக்கூட மேலும் இடம் வாங்கி விரிவுபடுத்திக்கொண்டே சென்றோம். ஆகவே பல தடங்கல்கள்

பின்னர் ஒருவழியாக அந்த தளத்தை தலைமுழுகி இப்போது கிளவுட் என்ற அமைப்பில் இருக்கிறோம். வருகையாளர் பெருகப்பெருக அது விரிவடையும் என்றனர். ஆனால் இப்போதைய வருகையாளர் வெண்முரசு ஆரம்பிப்பதற்கு முன் இருந்தவர்களை விட சிலசமயம் பத்து மடங்கு. இதை எதிர்பார்க்கவில்லை. இப்போது இணையதளத்தின் செலவை ஏற்றுக்கொள்ளவும் கொஞ்சம் திணறிக்கொண்டிருக்கிறோம்.

பழையதளத்தில் இருந்து கிளவுடுக்கு மாற்றியபோது தேடுபொறி சரிவர வேலைசெய்யாமலாகியது. இப்போது சரிசெய்திருக்கிறோம். கூடுமானவரை கட்டுரைகளை பிரித்து ஒழுங்குபடுத்தியும், பழைய கட்டுரைகளுக்கு இணைப்புகொடுத்தும் சீரமைக்கிறோம். பழையகட்டுரைகள் தொடர்ந்து வாசிக்கப்படும் இணையதளம் தமிழில் அனேகமாக இது ஒன்றுதான். சமகாலநிகழ்வுகளுக்கான எதிர்வினைகள் இதில் குறைவு என்பதே காரணம். ஒவ்வொரு முறையும் இந்த பெரிய டேட்டாபேஸ் எழவேண்டியிருப்பதுதான் சுமை என்றனர்

உதவிக்கு நன்றி. நண்பர்களை தொடர்புகொள்ளச் சொல்கிறேன்

எல்லா நாவல்களும் அதற்கான பித்தில் இருந்தே எழும். விஷ்ணுபுரம் இரண்டுமூன்று வருடங்கள் அலைக்கழித்திருக்கிறது. பின் தொடரும் நிழலின் குரல்- அதை வாசித்தாலே தெரியும் - பித்தில் தான் நிகழ்ந்தது. எல்லாம் சேர்ந்து குழப்பியடித்த அந்தப்பித்தையே அதற்குள் ஒரு பைத்தியக்கார நாடகமாக ஆக்கி வெளியே வந்தேன். காடும் அதேபோலத்தான். கொற்றவையில் இருந்து வெளியே வர ஒருவருடம் எழுத்துக்கே இடைவெளிவிட்டேன்

ஆனால் அவை எல்லாமே வலுவான பிரக்ஞையின் இருப்பும் உள்ளவை. செவ்வியல்பண்பு [கிளாஸிஸம்] என்பது அந்தப் பிரக்ஞைதான். நீலம் முழுக்கமுழுக்க புத்தெழுச்சித்தன்மை [ரொமாண்டிக்]கொண்டது. இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. கடிவாளத்தை வீசிவிட்டு குதிரைமேல் அமர்ந்திருப்பது

நீலம் உட்பட நாவல்களை புத்தகமாக வாசிப்பது முற்றிலும் வேறு அனுபவம் . முழுமையாக அதில் மூழ்கியிருக்க முடியும். ஆனால் அத்தியாயம் அத்தியாயமாக வாசிப்பது கூர்ந்து வரிவரியாக வாசிக்கவும், கூட்டுவாசிப்பில் இருக்கவும் உதவும். இரண்டுமே முக்கியம்தான்

ஜெ