Monday, October 20, 2014

நீலம் வடிவம்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்.

நீலத்துக்கு 3 வது அட்டை மிகப்பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். கார்மேக வண்ணனின் நிறமும், மயிற்பீலியும் யாரைக்குறித்து பேசும் நூல் என்பதை அழகாக சொல்கிறது. மற்ற அட்டைகளும் அழகாக இருந்தாலும் இதற்கே என்னளவில் முதல் மதிப்பெண். 

ராதை வயசுக்கு வரும் நிகழ்வை விவரிக்கும் நீலம் 2ம் பகுதி போல விவரனையை இதுவரை எங்குமே வாசித்ததில்லை. பெண்ணியவாதிகள் எனச் சொல்லிக்கொள்வோரோ அல்லது பெண்களோகூட இந்த மாற்றத்தை இப்படி வர்ணித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

தமிழகத்தின் போஸ்டர் கலாச்சாரத்தில் சிக்கி சீரழிந்ததில் இந்த பெண் வயசுக்கு வரும் நிகழ்வும் அடங்கும். நாம் எவ்வளவு நுண்ணுனர்வற்றவர்கள் என்பதற்கு பெண் வயதுக்கு வந்ததை ப்ளக்ஸ் பேனர்களில் அடித்து விளம்பரப்படுத்துதலே சாட்சி.

நேற்று இரவு வாசிக்க ஆரம்பித்து 13 பாகம் படித்திருக்கிறேன். இன்றும் நாளையும் மீதத்தை முடிப்பேன். 

மனித மூளை எத்தனை பிரம்மாண்டத்தையும் சிந்திக்க வல்லது என்பதற்கு முதல் உதாரனமாய் இருந்தது விஷ்ணுபுரம். இப்போது வெண்முரசின் முன்னால் விஷ்ணுபுரம் குறுநாவலைவிட சிறியதாகிவிட்டது. :)

இனிமேல் நீங்கள் அசோக வனம் நாவலை தைரியமாக எழுதலாம். மலைப்பின்றி வாசிக்க மனதளவில் தயாராகிவிட்டோம் என நினைக்கிறேன்.

அன்புடன்,

ஜெயக்குமார்