Saturday, October 18, 2014

வெண்முரசு நாவல்களின் இடைவெளி




அன்புள்ள ஜெ சார்

நீலம் முடிந்த இடைவெளி கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது. நீலம் கொஞ்சநாள் அதே மனநிலையில் வைத்திருந்தது. அதன்பிறகு அதே மனநிலை நீடிக்கட்டும் என்று வெண்முரசின் பழைய பகுதிகளை எடுத்துவாசித்தேன்.

இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன். ஒருநாவல் முடிந்ததும் ஒருமாதமாவது இடைவெளிவிட்டு அதைப்பற்றிய கொஞ்சம் விவாதங்களை வெளியிட்டு அதை மனசுக்குள் தொகுத்துக்கொள்ள இடமளித்தபின்னாடி மீண்டும் அடுத்த நாவலை ஆரம்பிக்கலம் என்று நினைக்கிரேன்

என்ன விஷயம் என்றால் இந்த நாவல்களுக்குள் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நீலம் ஒரு கார்லோஸ் புயன்டஸ், ஜாய்ச்S, ஃபாக்னர் நாவல் வாசித்துமுடித்ததுபோல இருக்கிறது. சொல்லப்போனால் நான் சென்ற வருடம் வாசித்த ராபர்ட்டோ பொலானோவின்  Amulet போல இருந்தது. முற்றிலும் இந்தியத்தன்மை இருந்தாலும் ஒவ்வொருவரியும் தெறித்து வருவதும் தர்க்கத்துக்கு அடங்காமல் கட்டுப்பாடில்லாமல் இருப்பதும் அப்படி இருக்கிறது.

ஆனால் மழைப்பாடல் ஒரு டால்ஸ்டாய் நாவல் போல இருந்தது. விரிவான நிலவிவரணைகள். பெரிய கேன்வாஸின் நுணுக்கமான வாழ்க்கைச்சித்தரிப்பு. அதேசமயம் வண்ணக்கடல் வேறுமாதிரி. தத்துவமும் சித்தரிப்பும் கலந்துள்ளது

இதுவரை நீங்கள் எழுதிய எல்லா பாணியும் இதில் கலந்து வருகிறது. உங்கள் எழுத்தில் டல்ஸ்தாய் உண்டு. அதேசமயம் திமிறும் லிறிஸிஸமும் வரும். இரண்டும் சேர்ந்தும் வரும். அவை ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு வகையில் உள்ளன

நீங்கள் உடனடியாக அடுத்த நாவலுக்கு ஸ்விட்ச் ஆகி விடுகிறீர்கள். வாசகர்கள் வருவது கொஞ்சம் கஷ்டம். அதே மனநிலையில் அடுத்த நாவலை வாசிக்கும்போது முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது

ஆகவே இடைவெளியில் அதைப்பற்றி கொஞ்சம் விவாதிக்கலாமென்றுதான் நினைக்கிறேன்

மகாலிங்கம்