Monday, October 13, 2014

சல்யனும் கர்ணனும்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் நாவல் மூலமாக கர்ணனின் உயிரியல் ரீதியான தந்தை சல்லியன் என்பதை அறிந்து கொண்டேன்.

இது மூல மகாபாரதத்தில் உள்ளதா ?

சல்லியன் குந்தியை மணம் புரிய விரும்புவது இதனால் தானா? அது முடியாத பட்சத்தில் தன் தங்கை மாத்ரியை பாண்டுவிற்கு மணமுடித்து அதன் மூலம் குந்திக்கு இன்னல் விளைவிக்க திட்ட மிடுகிறானா?

அது மட்டுமல்லாமல், யுத்த சமயத்தில் கர்ணனின் தேரோட்டியாக பணி புரிவது தன் மகனுக்காக என்ற அவன் விருப்பத்தால் தானா? என பல பல கேள்விகள்.

தொந்தரவிற்கு மன்னிக்கவும். நேரமிருந்தால் விளக்கவும். பிரயாகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்


அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.


அன்புள்ள கணேஷ்

தொன்மையான இலக்கியமாகிய மகாபாரதம் பாண்டவர்களின் உயிரியல் தந்தைகள் என்ற இடத்தில் மௌனத்தையே கடைப்பிடிக்கிறது. மகாபாரத காலத்தின் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகள் பிற்காலத்தில் முழுமையாக மாறிவிட்டன. மகாபாரதத்திலேயே அதற்கு முன்னாலிருந்த ஒழுக்கமுறைகளைப்பற்றி குறிப்பும் விவாதமும் உள்ளது. இந்திய சமூகம் ஒட்டுமொத்தமாக தயவழிக் குடும்பமுறையைக் கைவிட்டு தந்தைவழிக்கு மாறியபோது குந்தியின் செயல் அவர்களுக்குச் சிக்கலைக் கொடுத்திருக்கலாம். அதை ஒரு புராணம் வழியாகக்கடந்து சென்றனர்

ஆனால் மகாபாரதத்தில் சில இடைவெளிகள் உள்ளன. விளக்கமுடியாத பகுதிகள் என சொல்லலாம். சல்யனுக்கும் கர்ணனுக்குமான உறவு அதிலொன்று. அதைவைத்து நடத்தப்பட்ட ஊகமே வெண்முரசில் உள்ளது
ஜெயமோகன்.