அன்புள்ள ஜெ,
சொல்லில் கனலேற்றி அன்னை ஆடவிருக்கும் களத்தை ஒருங்கு செய்து விட்டார் துரோணர். இவ்வத்தியாயத்தில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியவை தருமனின் சஞ்சலங்கள் தான். பாண்டுவின் அரச ஆசைகள் அனைத்தும் அவனிடம் குவிந்து விட்டன போலும். அவன் தான் மீண்டும் மீண்டும் தன் எதிரியாக துரியோதனனைப் பார்க்கிறான். பீமனைப் பார்த்து துரியோதனன் அச்சம் கொள்வதாக நினைக்கிறான். அதில் உவகையையும் அடைகிறான். அது அவனுடைய அறிதலின் எல்லை.
உண்மையில் தருமனைப் பற்றி அர்ஜுனனும் பீமனும் எத்தகைய மனச் சித்திரத்தைக் கொண்டுள்ளார்கள் என்பது ஆராய்ச்சிக்குரியது. அவர்களும் துரியனைப் போல் தருமன் என்பவன் மிகவும் மூத்தவன், வயது முதிர்ந்தவன் என்பதைப் போன்ற எண்ணத்தைத் தான் கொண்டிருக்கிறார்களோ? 'மூத்தவர் உடனே ஏதாவது தத்துவ விசாரத்துக்குள் இழுத்துவிடுவாரோ என்று எண்ணிய அர்ஜுனன் உதடுக்குள் புன்னகை செய்துகொண்டான்' என்ற வரிகள் அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துகின்றன. இது தருமனின் தனிமையின் விளைவு என்றே கருதுகிறேன். உண்மையில் அவன் மிக நெருக்கமாக இருந்தது பாண்டுவிடம் தான். அவன் சிதை எரிகையில் தருமனின் கண்ணில் தெரியும் அந்த தனிமை அதன் பிறகு அவன் நிரந்தர துணை ஆகி விடுகிறது. அனைவரிடமும் உத்தரவு மட்டுமே இடும் மூத்தவனாகவே அவனைச் சுருக்கி விடுகிறது. இளையவர்களும் அவனை அவ்வாறே பார்க்கின்றனர்.
பார்க்கப் போனால் பாண்டவர்கள் ஐவரும் ஒவ்வொரு வகையில் தனியாகத் தானிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்கென்று அரச நிகழ்வுகளைத் தவிர ஒன்றுமே இல்லை. இவ்விடத்தில் தான் திரௌபதியின் வருகை மிக முக்கியம் பெறுகிறது.
பாண்டவர்கள் ஐவரும் ஒன்றிணையும் மற்றொரு புள்ளி கர்ணன். அவனைப் பற்றி ஒவ்வொருவருமே மிக உயர்வாக, தன்னை அறியாமலேயே தன் மூத்தவரின் இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். இன்றைய தருமனின் வார்த்தைகள் அதை மிக அப்பட்டமாக உணர்த்தி விட்டன. கர்ணன் காலாலிட்ட பணியைத் தலையால் முடிக்க விரும்புகிறான்.
அனைவருமே எதோ ஒன்றினால் அலைபாய்ந்து கொண்டிருக்க கர்ணன் மட்டுமே சமநிலையோடு இருக்கிறான். அங்கு சமநிலையில் இருக்கும் இன்னொருவர் பீஷ்மர். குருதட்சிணையைக் கேட்டதுமே விதுரர் கூட சமநிலை அழிகிறார். மிக அமைதியாக அதை முதலில் ஏற்பவர் பீஷ்மர் தான். அந்த ஆணையை ஏற்று வழி மொழிபவர்களில் தருமன் இல்லை.
பீமனின் கர்ணன் மீதான வெறுப்பு அவனின் மீதான துரியனின் அபிமானத்தால் தான். இந்த அத்தியாத்தில் நாம் பார்க்கும் துரியன் இறுக்கமானவன் அல்ல. மிக இயல்பாக கர்ணனுடன் நட்பு பாராட்டி நடக்கும் இளைஞன். இதற்கு முன்பு துரியன் இவ்வளவு இலகுவாக இருந்தது பீமனிடம் மட்டும் தான், பீமனுடனான முதல் கதை பழகலுக்குப் பின்னர். பீமனும் தன் மனதுக்கொத்த மூத்தவராக எண்ணியது துரியனைத் தான். கர்ணனைப் பார்த்தவுடனே அவன் மனதுக்கு தோன்றியிருக்கும், துரியனிடத்தில் தன்னுடைய இடத்தைப் பெறப் போகிறவன் கர்ணன் தான் என்று. அந்த எண்ணத்தோடு அதே கர்ணனிடம் மதிப்பும் இருந்தால், அது முழுக்க முழுக்க வெறுப்பாகத் தானே வெளிவரும். நன்றாக யோசித்தால் நான் மிகவும் வெறுத்தவர்கள் எதோ ஒரு வகையில் என்னால் மிகவும் மதிக்கப்பட்டவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து