ஜெ
அற்புதமான தகவல்கள் அடங்கிய பிரயாகையின் முதல் நான்கு அத்தியாயங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். துருவ விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதன் மகத்துவம் அதை வாசித்தபோது தோன்றவில்லை. பிறகு யோசிக்க யோசிக்க பிரமிப்பு வளர்ந்துகொண்டே போயிற்று. அப்படி ஒரு மையத்தை முதலில் உருவாக்கிக்கொண்டபோது எந்த அளவுக்கு மன எழுச்சியை அடைந்திருப்பார்கள்!
துருவகணிதம் பற்றி பேசுகிறீர்கள். இப்போது துருவகணித சோதிடம் உள்ளதா? பிரஹதாங்கப்பிரதீபம் உள்ளதா?
செந்தில்வேலன்
அன்புள்ள செந்தில்,
துருவகணிதம் என்னும் வானியல் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அடுத்தகட்ட வானியல் முறைமைகளாக வளர்ந்து மறைந்துவிட்டது. பிரஹதாங்கப்பிரதீபத்தின் சில செய்யுட்கள் வேறு நூல்களில் மேற்கோள்களாகக் கிடைக்கின்றன என்கிறார்கள்.
துருவகணிதம் தனக்கென ஒரு குறியீட்டுமொழியைக் கொண்டிருந்தது. அதன் சில எழுத்துக்களும் ஒலிகளும் அடங்கியது. அந்த குறிகளை பின்னர் பல்வேறுவகையில் பயன்படுத்தத் தொடங்கினர். நம் வானியலே சோதிடமாகத் திரிந்த வடிவில் உள்ளது. சோதிடத்தில் இக்குறியீட்டு மொழி துருவகணித மொழி என அழைக்கப்பட்டு சில இடங்களில் புழ்க்கத்தில் உள்ளது
ஜெ