Friday, October 24, 2014

கடிதங்கள் பற்றி



அன்புள்ள ஜெ

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் வெளிவரும் கடிதங்களில் இருவகை உள்ளன. தன் வாசிப்பில் கண்டடைந்த ஒரு நுட்பமான இடத்தைச் சுட்டிக்காட்டும் கடிதங்கள் ஒருவகை. தன் வாசிப்பை இஷ்டத்துக்குக் கொண்டுசென்று நாவலை விளக்கி உரை எழுத ஆரம்பிக்கும் கடிதங்களும் சில உள்ளன. அவ்வகை கடிதங்களை பிரசுரிக்கவேண்டாம் என்பது என் எண்ணம்.

காரணம் அக்கடிதங்கள் வாசகனின் வாசிப்பை மிகவும் குறைக்கின்றன.  வாசகர்களில்சில  அறிமுக வாசகர்கள் அந்த விளக்கங்களை ஏற்று வெண்முரசை வாசிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனித்தததால் இதை எழுதுகிறேன்

கடிதம் எழுதும் உற்சாகத்தில் கவனமாக வாசிக்காமல் எழுதுகிறார்களோ என்ற எண்ணம் வந்ததுவெண்முரசின் அத்தியயாங்கள் இருக்கும் உச்சத்துக்குச் செல்வதற்குப் பதிலாக தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அது சொல்வதாக விளக்க முயல்கிறார்கள். ஆகவே பலசமயம் மையத்தையும் உணர்ச்சியையும் சம்பந்தமே இல்லாத  திசைகளுக்குக் கொண்டுசெல்கிறார்கள்.

நல்ல வாசகர்கடிதம் என்பது மூலத்தின் மீது ஏறி அமர முயலாது என நினைக்கிறேன். சுருக்கமாகவும் தெளிவாகவும் தான் ரசித்தது என்ன என்று சொல்வதற்குத்தான் முயலும். பல கடிதங்கள் அப்படி இல்லையோ என்ற எண்ணம் வந்தது

சிவம்