அன்புள்ள ஜெ
மழைப்பாடலின் தாலிப்பனை ஓலையை தேடிப் போகும் பெண்ணை தனியாக ஒரு கதாபாத்திரமாக வாசித்தேன். அதை தொடரில் வாசிக்கும்போது கதைக்கு வெளியே செல்வதுபோலத் தோன்றியது. ஆனால் ஏன் அது அவ்வளவு நாள் நினைவில் நிற்கிறது என்று நினைத்தேன். இப்போதுவாசிக்கும்போது ஆழமான மன எழுச்சி ஏற்படுகிறது
நான் அந்தப்பனையைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பயங்கரமான தனிமையில் நின்றிருக்கும். அந்த தனிமையைப்பார்க்கவே பயமாக இருக்கும். பாலைவனத்தில் அப்படி ஒரு மரம் நின்றிருந்தது என்றால் அதன் வீச்சு எப்படிப்பட்டது என்று நினைத்தேன்
அது மைல்கணக்கில் தன்னுடைய மகரந்தத்தை விசிறுகிறது என்று தெரிந்துகொண்டேன். அதுவே அதன் சிறப்பு. அது ஒரு பயங்கரமான பாலைவன தாய்த்தெய்வம். நம்மூரில் பாலைபோன்ற பொட்டல்களில் அமர்ந்திருக்கும் அம்மன்களைப்போல
பின்னாடி மழைப்பாடலில் காந்தாரி பெரிய கதாபாத்திரமாக வரும்போது அந்த தாலிப்பனை அவளுக்கு மிகப்பெரிய உவமையாக ஆவதை கவனித்தேன். அவள் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கிறாள். தாலிப்பனை பாலைவனத்தில் நிற்பதுபோலத்தான் அதுவும்
அதைவிட அற்புதமான விஷயம் அவளுடைய முலையூற்று. அது வற்றாது பெருகிவருவதை வாசித்தபோது வியப்பாக இருந்தது. அதுவும் தாலிப்பனையின் மகரந்தமும் சமானமாக இருக்கிறதே என்று நினைத்தேன். நீங்கள் நினைத்து எழுதினீர்களா என்று தெரியாது. ஆயிரம் பக்கம் தாண்டி வருவதை அப்படி திட்டமிட்டிருக்கமுடியாது. ஆனால் மிகச்சரியான உவமையாக இருந்தது
சிவராம்
மழைப்பாபடல் பற்றி கேசவமணி