அன்புள்ள ஜெ,
பிரயாகை மட்டுமல்ல, வண்ணக்கடலில் இருந்தே
என்னை மிகவும் வியப்பிலாழ்த்திய கதாபாத்திரம் பீமனுடையது தான். நானறிந்த
பீமன் உடல் பலம் மட்டுமே கொண்டவன். சமைக்கத் தெரிந்தவன். யோசிக்கத்
தெரியாதவன். தன் உடன்பிறந்தாருக்காக எதையும் செய்யத் துணிந்தவன்.
குலாந்தகன்.
ஆனால் வெண்முரசு காட்டும் பீமன்
மேற்கூறிய குணாதிசியங்கள் உள்ளவன் தான். ஆனால் நன்றாக யோசிக்கத்
தெரிந்தவன். அரச நெறிகள் அறிந்தவன். உண்மையில் சுற்றியுள்ள அனைத்து
ராச்சியங்களின் முக்கியமானவர்களைப் பற்றி தருமனை விட அதிகம் தெரிந்து
வைத்திருக்கிறான். அவன் சத்யஜித் பற்றி அர்ஜுனனிடம் பேசும் போது அசந்து
போனேன். உண்மையில் ஓர் அரசனுக்குரிய தகவல் அறிவும், முடிவெடுக்கும்
தெளிவும் அவனிடம் உள்ளது. அது மட்டுமன்று, அவனிடம் தொலைநோக்கு உள்ளது.
துருபதனுடான யுத்தத்தின் முடிவை அவன் துவக்கத்திலேயே அறிந்து விட்டான்.
அர்ஜுனன் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும், பீமன் தங்கள் படையை
மெதுவாக பின்னால் தான் கொண்டு சென்றிருப்பான். ஏனென்றால் படையையும்,
தளவாடங்களையும் இறக்கும் பொறுப்பை அவனே முன்னின்று செய்கிறான். 'என்ன
அவசரம்' என்று துரியனுக்கே நக்கலாக செய்தி அனுப்புகிறான். உண்மையில்
பாண்டவர் படை மெதுவாக இறங்கியதால் தான் அர்ஜுனன் கூட அப்படி ஓர் முடிவினை
எடுத்தானோ என்னவோ?
இவை மட்டுமல்ல. அவன் தன்னைச்
சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் மிகச் சரியாக எடை போட்டு
வைத்திருக்கிறான். ஒவ்வொருவரின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து
வைத்திருக்கிறான். உண்மையில் அரசு சூழ்பவர்களுக்கான இன்றியமையா குணம் அது.
ஆனால்பீமனிடம் அது இருப்பது மிகவும் வியப்பளித்த ஒன்று. வண்ணக்கடலிலும்
சரி, பிரயாகையிலும் சரி பீமன் அனைவரும் தேடும் பொழுதெல்லாம்
தென்படுவதில்லை. ஆனால் மிகச் சரியாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில்
அவன் வந்து விடுகிறான். பல இடங்களைச் சுட்டலாம். யுயுத்சுவுடன் அர்ஜுனன்
அஸ்வத்தாமா யானையின் முன் மாட்டிக் கொள்ளும் இடம், யாருக்கும் அடங்காமல்
ஓடி வரும் யானையின் முன் தன்னம்பிக்கை மட்டுமே கொண்டு நிற்பான் பீமன். களம்
புகுதல் நிகழ்வின் போதும் சரியான நேரத்திலே வருகிறான் அவன். அனைத்துக்கும்
மேலே, மழைப்பாடலில் பாண்டுவையும் மாத்ரியையும் தேடுவதற்கும் சரியான
நேரத்தில் வந்து உதவுகிறான் அவன். இன்றும் அர்ஜுனன் தன் தாயைத் தேடித்
போகும் போது பீமன் பிரச்சனையின் துவக்கத்தைத் தேடிப் போகிறான். "“நான் காட்டுக்குச் செல்கிறேன். உள்காட்டில் சில மலைப்பாம்புகளை பார்த்து வைத்திருக்கிறேன்.”அவன்
மலைப்பாம்புகள் என யாரைச் சொல்கிறான்? அதுவும் உள்காட்டில். அதாவது
அரண்மனையின் உள்ளடுக்குகளில். சகுனியையா? நிச்சயமாக துரியனுக்குத் தான்
உரிமை என்று சொல்பவர்கள் தான் அவர்கள். அவன் அடுத்த வரி அதைத் தான்
உணர்த்துகிறது, "நீ
சொன்னவை வலுவான வாதங்கள் பார்த்தா. எனக்கு அவற்றில் ஆர்வமில்லை. அந்த
வாதங்களை வாதத்தால் எதிர்கொள்வதை விட அவ்வாதங்கள் நிறைந்திருக்கும்
தலைகளையும் நெஞ்சுகளையும் கதையால் அடித்து உடைப்பதே எனக்கு எளிது". மீண்டும் மீண்டும் தேவையான இடங்களில் மட்டுமே அவனைப் பார்க்க முடிகிறது.
கர்ணனுக்கும்
அவனுக்குமான சந்திப்புகளில் அவன் கர்ணனை அவமதிப்பதை மட்டுமே செய்கிறான்.
ஆனால் நன்றாக பார்த்தால் இதுவரை பீமன் கர்ணனைத் தனியாக சந்திக்கவே இல்லை.
முதலில் அவன் கர்ணனை குந்தியின் முன்னிலையில் சந்திக்கிறான். அப்போதே
அவனுக்கு கர்ணன் யாரென்று தெரிந்து விடுகிறது. இரண்டாம் முறை கர்ணன்
நகுலனோடு வாள் பயிற்சி செய்கையில். பிறகு அர்ஜுனன் கர்ணனை துவந்த
யுத்தத்துக்கு அழைத்த அந்த பின் மதிய வேளையில். கடைசியாக களமாடுகையில்.
உண்மையில் பீமன் கர்ணனை மிகவும் மதிக்கிறான். அவனைப் பற்றி இருமுறை
தருமனிடம் அவன் சொல்வதை பார்க்கலாம்.
1.
களமாடுகையில், தருமன் கர்ணனுக்கு யார் குரு என்று கேட்கிறான். அதற்கு
பீமன், 'அவனைப் போன்றவர்களுக்கெல்லாம் குரு தேவையில்லை, வேண்டுமென்றால்
அந்த தெய்வங்களே வந்து கற்று கொடுக்கும்' என்கிறான்.
2.
துருபதனின் கழுகு வியூகத்தின் வலப்பகுதியில் தனியே மாட்டிக்கொள்ளும்
அவனைப் பார்த்து தருமனிடம், 'அது சிலந்தி வலையில் மாட்டிய வண்டு. அவர்களே
வலையை அறுத்து விட்டு விடுவார்கள்' என்கிறான்.
அப்படிப்பட்டவன்
கர்ணனை அவமதிப்பது கர்ணன் ஏதாவது ஒரு சகோதரனோடு அயுதமெடுக்கையில் தான்.
அது ஏன்? கர்ணன் அவர்களைக் கொன்று விடலாகாது என்பதற்கா? அல்லது மூத்தவர்
முன் இளையவர்கள் அயுதமெடுக்கக் கூடாது என்பதற்காகவா? மனம் இரண்டாவதைத் தான்
தேற்கிறது. மேலும் ஒன்று, அவன் கர்ணனை எந்த அளவுக்கு மதிக்கிறானோ, அதே
அளவுக்கு வெறுக்கவும் செய்கிறான். துரியனிடம் தன்னுடைய இடத்தை அவன்
பெற்றிருப்பதால்.
இவற்றோடு பீமனிடம் ஓர்
ஆழ்ந்த கசப்புணர்வும், அவநம்பிக்கையும் உள்ளன. அந்த இரு உணர்வுகள் தான்
அவன் தன் வாழ்நாளில் அடைந்திருக்க வேண்டிய அனைத்து உச்சங்களில் இருந்தும்
அவனை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கின்றன.
அந்த
கசப்பினை அவன் பெற்றது எப்படி என்று அவன் அர்ஜுனனிடம் பேசுமிடம் மிக
நுட்பமானது. அவன் கௌரவர்களை வெறுக்கவில்லை. அவர்களை கண்மூடித்தனமாக
நம்பியதற்காகத் தன்னைத் தானே வெறுக்கிறான். "அன்று
அவர்கள் என்னை அழைக்கும்போது, எனக்கு உணவு பரிமாறும்போது நான் ஒரு
துளியும் ஐயப்படவில்லை என்பதுதான் இன்றும் என்னை வாட்டுகிறது." தன்
மீதான கசப்பையே அவன் அனைத்திலும் காண்கிறான். அவனின் மானிடர் மீதான
அவநம்பிக்கை என்பது தன் மீதான அவநம்பிக்கை தான். சுயவெறுப்பு என்பது
தன்னைத் தான் அழிக்கும் ஓர் நெருப்பு. அணைப்பது எளிதல்ல.
ஆனாலும்
இங்கே பீமன் அந்த சுயவெறுப்பை பகடி மூலமாகக் கடந்து வருகிறான்.
சிந்தனையாளன் என்பதற்கு இன்று அவன் தரும் விளக்கத்தை எண்ணி எண்ணி
சிரித்துக் கொண்டிருக்கிறேன். "சஞ்சலங்களை
சரியான சொற்களில் சொல்லிவிட்டாலே நம் அகம் நிறைவடைந்துவிடுகிறது.
அந்தப்பெருமிதத்தில் அதற்குக் காரணமான இக்கட்டை மறந்துவிடுவோம். அந்த
சொற்றொடரை முடிந்தவரை சொல்லிச்சொல்லி பரப்பி நிறைவடைவோம். இக்கட்டுகளின்
நிகர விளைவு என்பது சிந்தனையாளர்களை உண்டுபண்ணுவதுதான்", என்று
சொல்லி தானும் ஓர் சிந்தனையாளன் என்று சொல்லுமிடத்தில் ஜெ யின் மனித மனதின்
அவதானிப்பை எண்ணி வியக்காமலிருக்க முடிவதில்லை. ஏனென்றால் நானும் ஓர்
சிந்தனையாளன் தான்!!!!!
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து