Sunday, October 26, 2014

தருமனின் இரட்டைப் பிம்பங்கள்
ஜெ வணக்கம்.


நம்மைப்பற்றி நாம்மிடம் ஒரு பிம்பமும் அதாவது ஒரு கணிப்பும், நம்மைப்பற்றி பிறரிடம் ஒரு பிம்பமும் அதாவது ஒரு கணிப்பும் இருக்கும். இந்த இரண்டு பிம்பங்களும் சரியாக இருக்குமா? என்றால் “இல்லை“ என்றே நினைக்கிறேன். அந்த இல்லாமையின் இடைவெளியின் நீளம் தான் நம்மின் உயரமாகவும். நம்மின் அகல ஆழமாகவும் உலகில் இருக்கிறது.

விநாயகபெருமானைப் பற்றி நமது பிம்பம் என்ன? சின்னோண்டுக்கால்கள், பெரிய வயிறு, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத தலை. இந்த பிள்ளை வாழ்க்கையில் எப்படி வெற்றிபெறும்? இதுதான் பிள்ளையார்ப் பற்றி நமது கணிப்பு. நமது கணிப்பை உடைத்து அவர்தான் எல்லாவெற்றிக்கும் முன்னால் நிற்கிறார். வெற்றிக்கு முன்நிருத்தி வணங்கவும் படுகின்றார்.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சி என்பதால் இப்ப ஆஞ்சநேயரை எடுத்துக்கொள்வோம். ஆஞ்சநேயர்ப்பற்றி ஆஞ்சநேயரின் கணிப்பு என்ன? “நான் சேவகன்” என்னால் என்ன முடியும் என்பது. உன்னால் கடலை தாண்டமுடியும், இலங்கையில் இருந்து பறந்துபோய் இமயமலைக்கும் அப்பால் உள்ள சிரஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரமுடியும். எல்லா சேட்டைகளும் உடைய கூட்டத்தோடு இருந்தும் பிரமச்சரியம் கடைபிடிக்கமுடியும். சொல்லின் செல்வனாக முடியும், அசையா மனம் படைக்க முடியும், பக்திக்கு உதாரணம் என்று கணிக்கின்றோம்
ஏன் இதை இங்கு சொல்கின்றேன் என்றால் தருமனைப்பற்றி தருமன் என்ன நினைக்கின்றான். தருமனைப்பற்றி புற உலகம் என்ன நினைக்கின்றது என்பதை திரு.ஜெ மிக மிக அழகாக வடித்து உள்ளார்.

தருமனின் இந்த இரண்டு பிம்பங்களும் பிரயாகை-5ல் வெளிப்பட்டு சிற்பக்காட்சிக்கப் பட்டுஉள்ளது. இதுவரை வந்த பாத்திரங்கள் இப்படிப் பட்ட சிற்பக்காட்சியை நமக்கு வெளிப்படையாகக்காட்டவில்லை. எல்லா பாத்திரங்களும் இந்த காட்சிக்கு உட்பட்டவைதான் என்றாலும், மற்ற பாத்திரங்கள் அதை மறைத்துக்கொண்டன அல்லது அதை நமக்குக்காட்ட ஒரு பாத்திரத்தின் கண்கொண்டு விளக்கப்படவில்லை. இன்று தருமன் வழியாக தருமனும், அர்ஜுனன் வழியாக தருமனும் நமக்கு காணக்கிடைக்கின்றார்கள்.

தருமனை தருமன் காட்டும்விதத்திலும், அர்ஜுனன் தருமனைக் காட்டும் விதத்திலும். ஆசிரியர் திரு.ஜெ தருமனின் இருமைகளை, ஒரு பென்சீலின் இருமுனைகளையும் கூர்தீட்டுவதுபோல் தீட்டுகின்றார்.

எந்தப்பாத்திரத்திற்கும் இல்லாத இந்த கூர்தீட்டல் ஏன் தருமனுக்கு மட்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. வெண்முரசின் இதுவரை வந்த பாத்திரங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தன்னை முன்நகர்த்திக்கொண்டே செல்கின்றது. தருமன் மட்டும் தன்னை முன்நகர்த்திக் கொண்டு செல்லும் வேலையில் மற்றப் பாத்திரங்கள் எந்த அளவுக்கு தன்னை முன்நகர்ததுகின்றன, பக்கம் நகர்கின்றன அவைகள் எப்படிப்பட்டன என்று கணிக்கிறான்.

ஆ! என்ன ஒரு ஆச்சர்யம் இதை எழுதும்போதுதான் தருமனே ஒரு சதுரங்கக்காய்போல் நகர்வது தெரிகிறது. தன்னையே வாழ்க்கை களத்தில் அவன் சதுரங்கக்காயாக வைத்துவிளையாடுகின்றானா?
அன்புள்ள ஜெ. ஒரு பாத்திரத்தை இவ்வளவு ஆழத்தில் இறங்கி வெட்டி எடுத்துதான் வருகின்றீரா? நான் இவ்வளவு பெரிய நுணுக்கம் நிறைந்தவன் இல்லை உங்கள் எழுத்து இழுத்துப்போய் அதை காட்டியது. உங்களுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி.

முதலில் படிக்கும்போது இந்த தருமன் ஏன் இவ்வளவு எளியவனாக இருக்கிறான். தருமன் என்ற பெயருக்கோ? ஞானத்தின் வெளிக்கோ உரிய அகம் அவனிடம் இல்லையே என்று நினைத்தேன். அது எனது அறியாமைதான்.

பெரும் ஞானம் வெட்டவெளியாகித்தான் கிடக்கின்றது.  அது மேலும் கீழும் வலமும் இடமும் அலைந்துக்கொண்டு இருக்கிறது. சதுரங்க கட்டத்தில் காய் அலைவதுபோல. பார்க்கும் கண்ணின் துணைக்கொண்டு அது வெளிப்படுகின்றது.   தான் இருக்கிறேன் என்று காட்டுகின்றது. பார்க்கும் கண்கள் இல்லாதபோது அது இல்லாததுபொல் இருக்கிறது.

அர்ஜுனன் போன்ற கண்கொண்டுப் பார்க்கமுடியவில்லை என்றால் தருமன் பார்க்ககூடிய பொருள் இல்லைதானோ?

//குழந்தைகளாக நாம் மாறமுடிந்தால் விழவுகளில் மகிழமுடியும். பெண்களுக்கு அது ஓரளவு முடிகிறதுஎன்றபின்ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமைதான் மானுடர்களிடமுள்ளவை எல்லாம் என்று மூத்தவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்என்றார். இதோ சரியான சொற்றொடரை அமைத்துவிட்டார் மூத்தவர் என்ற எண்ணம் எழவும் அர்ஜுனன் புன்னகை மேலும் பெரிதாகியது//

இந்த மேற்கண்ட வாக்கியம்போதும் தருமன் யார் என்றுக்காட்ட, தருமனும் இந்த வாக்கியம் மூலம் தான் யார் என்ற வாக்கும்மூலம் தருகின்றான். இந்த வார்த்தையை கொண்டு அவனைக்கும்பிடவும், சக்ரவர்த்தியாக்க வாழ்த்துப்பாடவும் நாம் எழுந்து கைகுவிக்கலாம், கை உயர்த்தலாம். ஆனால் கீழ்கண்ட வாக்கியத்தைப்பார்க்கும்போது தருமனைப்பற்றிய மற்றாரு பிம்பம் கிடைக்கின்றது.

//“துரியோதனன் கர்ணனுடன் வருவதாகச் செய்தி. அவர்கள் நேராக இங்கே வரவில்லை. பிதாமகர் வந்தபின்னர் வரவேண்டுமென்று நினைப்பார்கள்என்றான். பகைமையையாவது நீங்கள் மறப்பதாவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். புன்னகையுடன்ஆம், அவர்கள் வருவதைச் சொன்னார்கள்என்றான்//

இந்த வாக்கியத்தில் தருமன் எதையும் புனையவில்லை, எதையும் தனக்காக வெளிப்படுத்தவில்லை, எங்கும் தன்னை முன்நிறுத்தவில்லை, தருமன் தருமனை வெளிப்படுத்தவி்ல்லை ஆனால் அர்ஜுனன் தருமனை வெளிப்படுத்தி முன் வைக்கின்றான். “பகைமையையாவது நீங்கள் மறப்பதாவது” என்னும் இடத்தில் தருமனின்  மொத்த பிம்பத்தையும் உடைத்து மற்றொரு பிம்பத்தை எடுத்து நம் முன்வைக்கிறான் அர்ஜுனன்.

தருமன் வெளிப்படுத்துவது நீதிமான் என்ற பிம்பத்தை மட்டும், அர்ஜுனன் வெளிப்படுத்துவது சக்ரவர்த்தி என்ற பிம்பத்தை.

உத்தானபாதன் சுநீதிக்கும், சுருசிக்கும் இடையில் படும்பாடு என்பது தருமன் நீதிமானுக்கும் சக்கரவர்த்திக்கும் இடையில் படும்பாடு.

பிரயாகை என்னும் பெயர் வந்தபோது ஏன் இந்த பெயர் என்று கேட்கவும் முடியவில்லை, நல்லப்பெயர்தானே என்று ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை ஆனால் உத்தானபாதன் சுருசி, சுநீதி இடையில் ஒரு இணைப்பு. விஷ்ணுபாதம் துருவன் கங்கைக்கு இடையில் ஒரு இணைப்பு. மேரு மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒரு இணைப்பு. தருமன் நீதிமானுக்கும் சக்ரவர்த்திக்கும் ஒரு இணைப்பு என்று இந்த இணைப்புகள் முடிவிலியாகும் என்று நினைக்கின்றேன்.

நீதிமானாக சொல்பழகும் தருமன், சொல்லை தேர்ந்து எடுத்து, சொல்லை கூராக்கி, சொல்லை எய்து இலக்கை உடைகிறான். ஆனால் அது தவறில்லை ஆனால் படைக்கலம் தவறு என்று எண்ணுகின்றான். வில்அம்பு  குருதியை களத்தில் கொட்டச்செய்கிறது. சொல்லம்பு குருதியை அகத்தில் சொட்டச்செய்கிறது. வில்லம்பு விடுபவனும், சொல்லம்பு விடுபவனும் எதிரியை அழிக்கவே பயன்படுததுகின்றனர். மற்றொரு கோணத்தில் படைக்கலம்தான் காக்கிறது. சொல்லும்தான் காக்கிறது. 

வலம்புரிஜான் “எய்தவன் மறந்துவிடுகிறான், காயம் பட்டவன் மறப்பதில்லை“ என்கிறார்.  வலம்புரிஜான் வார்த்தையை அம்பு என்ற படிமத்தில் பயன்படுத்துகின்றார்.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு- என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் வார்த்தையை தீ என்ற படிமத்தில் பயன்படுத்துகின்றார்.

திரு.ஜெ அர்ஜுனன் மூலம் வார்த்தைகள் அணைத்தும் படைக்கலங்கள் என்ற படிமத்தை பயன்படுத்துகின்றார். படைக்கலங்களைவிடவும் பல இலக்கு கொண்டவை என்பதையும் நிலை நிறுத்துகின்றார்.
//வில்வித்தைக்கும் மத்து கடையும் ஆய்ச்சியின் கைத்திறனுக்கும் என்ன வேறுபாடு? வில்லாளியின் விரலைவிட குரங்கின் வாலில் உள்ளது நுட்பம்என்றான்.

ஆம் மூத்தவரேஎன்றான் அர்ஜுனன். “ஆனால் இன்றைய அரசியல்சூழலில் நமக்குப் படைக்கலப்பயிற்சி தேவையாக இருக்கிறதல்லவா?” தருமன் பெருமூச்சுடன்ஆம், என்று படைக்கலத் திறனுக்கு சொல்திறன் மாற்றாகிறதோ அன்றுதான் மானுடம் பண்படுகிறது என்பேன்என்றான். அர்ஜுனன் புன்னகையுடன்படைக்கலங்களுக்கு ஒற்றை இலக்கும் ஒரேபொருளும் அல்லவா?’ என்று எண்ணிக்கொண்டான்//


அர்ஜுனன் காணும் தருமனின் பிம்பம் எளிய அன்றாட யுத்தத்திற்கு உரியதே இல்லை அது இந்த உலகத்தையே அழித்து அதில் ஜெயஸ்தம்பம் எழுப்ப நினைக்கக்கூடிய அளவுக்கு உரிய யுத்தப்படைக்கலம் என்பதை காட்சிப்படுத்துகின்றான்.

அர்ஜுனன் தான் எழுப்பும் மண் பிம்பத்தை உடைத்து அதற்குள் இருக்கும் மூல உலோகப்பிம்பத்தைப் பாக்கின்றான் என்பதை தருமன் உணர்கின்றான். அந்த உணரல்தான் //நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான் தருமன்// ,இந்த வினா அதைத்தான் சுட்டுகின்றது.  

அர்ஜுனன் காணும் தருமனின் பிம்பம் என்ன என்பது தெரிந்தும் அவனால் விளக்கமுடியாது, அவன் அவனின் கைமட்டும் என்று காட்டும் இடத்தில் அர்ஜுனனுக்காக கண்ணீர் விடவைக்கின்றார் ஆசிரியர் ஜெ.
நான் எண்ணுவதே இல்லை. என் கைகள் அனைத்தையும் எண்ணட்டும் என்று வில்யோகம் பயில்கிறேன்என்றான் அர்ஜுனன்.
எதை தெய்வங்கள் மானுடருக்குப் பணித்துள்ள முதற்கடமை என்று சொல்லலாமோ அதைச் செய்துகொண்டிருந்தேன். ஞானத்தை அடைதலை. இனி அந்த வாழ்க்கை எனக்கில்லை என எண்ணும்போது இறப்பை நெருங்குவதாகவே உணர்கிறேன்.”

வேறு வேறு கணத்தில் வேறு வேறு சூழலில் வந்து விழுந்த வார்த்தைகள் என்றாலும் இந்த வார்த்தைகள் மூலம் அர்ஜுனன் மானிட வாழ்க்கையின் குறியீடாக வந்து நின்று நெஞ்சில் கணக்கின்றான்.
திரு.ஜெ தருமன் அர்ஜுனனை இந்த அந்தியாயத்தில் எப்படிப் படைத்துள்ளார் என்று தொகுத்துப்பார்த்தால் ஒன்று தெரிகின்றது தருமன் அர்ஜுனன்கூட இருமைகளின் ஒரு இணைப்புதன். தருமன் கடலாக நினைக்கும் துளி. அர்ஜுனன் துளியாக நினைக்கும் கடல். ஜெவின் கைவண்ணத்திலேயே இந்த சிற்பங்கள் சாத்தியம்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்