Monday, October 1, 2018

முழுமுற்றாகத் தோற்றல்



அன்புள்ள ஜெ,

நேற்று பாலாஜி பிருதிவிராஜ் எழுதிய கிறிஸ்துவின் கடைசிச் சபலம் சொல்வளர்காட்டில் கிருஷ்ணன் சொல்லும் இவ்வரிகளைக் நினைவூட்டியது. “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லைஅவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றனநீ எதை ஈடுவைப்பாய்எதையெல்லாம் இழப்பாய்நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்”. ஆம், கிருஷ்ணன் முழுமையை அடைவதற்கு முன்பு கண்டடைந்த மெய்மை. ஜேஷ்டாதேவியின் ஆளுகைக்குள் சென்று இருளில் உழன்று அவர் வந்தடைந்ததும் இதே மெய்மையிடம் தான். இன்று போர்க்களத்தில் அவரைப் போல் துயர் கொண்ட ஒருவர் கிடையாது. அதை முழுமையாக உணர்ந்தவன் பீமன் மட்டுமே. அவரது துயர் மானுடர்களுக்கானதல்ல என செந்நாவேங்கையில் போர் சூழ்கை கூட்டம் முடிந்த பிறகு பீமன் கூறுவான். இன்று அதே மெய்மையை இயற்கையோடு இணைந்து வாழ்ந்து உயிர்ச் சுழற்சியின் விதிகளை அறிந்த ஒருவனாக, அவ்வறிதலைக் கண்டடைந்த அத்தொல்மரபின் நீட்சியாக நின்று கடோத்கஜனும் “பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” எனச் சொல்வது அழகு. மண்ணோடும், இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து இருக்கும் ஒரு மானுடனின் உள்ளுணர்வு இது. அதுவே நிகழவும் போகிறது இல்லையா!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்