Friday, January 4, 2019

வரிகள்-2


வரிகள்


பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு 

இன்று நண்பர் சிவகுமாரின் கடிதத்தை வெண்முரசு விவாத தளத்தில் கண்டேன்

"வாழ்க்கையை மாற்றியமைக்கும் எந்த முதன்மை அறிதலும் பேருவகையாகவோ பெருந்துயராகவோ நம்மை அடைகிறது. பெருந்துயரென அடைவதே மேலும் சிறந்த மெய்யறிதல்". நான் வெண்முரசை இது போன்ற கவித்துவ வரிகளுக்காகவே ஆராதிப்பவன். கதையோட்டத்திற்கு இந்த வரிகள் தேவையா இல்லையா என்பதல்லாம் எனக்கு முக்கியமாக படவில்லை. இது ஒரு மந்திரம் போல, இதை என் வாழ்வில் நான் கண்டடைந்த அனுபவங்களில் போட்டு பார்த்து சிந்திக்கவும் புது தரிசனத்தை உருவகிக்கவும் முடிகிறது. இந்த மாதிரி வரிகளைத்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கண்டடைந்து மீண்டும் மீண்டும் படித்து, சத்தமாக சொல்லி பார்த்து கொண்டும் இருப்பேன்சிவாவின் நண்பர் சொன்னது எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியதற்காகவே இந்த கடிதம் எழுதினேன்

சமீபத்தில் என்னை அலைக்கழித்த வரிகளில் மிக முக்கியமானது திசைதேர் வெள்ளத்தில் துரியோதனன் சொல்வதாக வரும் இவ்வரிகள்
 "காலடி புழுதி என்று அறிக!, அறிந்ததை கடுந்தவம் செய்து உணர்க, இல்லையேல் தெய்வம் ரத்தம் சிந்தி உணர வைக்கும்". இந்த வரியை படித்தவுடன் என்னால் மேற்கொண்டு 1 மணி நேரம் வேறு எதையும் வாசிக்க முடியவில்லை. கண்களும் மனதும் அதிலேயே ஓடிக்கொண்டிருந்தது, தீவிர உணர்வெளிச்சிக்கு ஆளானேன். மறுநாளில் இருந்து என்னுடைய கடவுள் வணக்கத்தில் இந்த வரியையும் பயன்படுத்தி கொண்டு வருகிறேன்

கிருஷ்ணன் சொல்லும் வரியாக வரும் " கண்ணீரின் முன்னாள் நான் எளியோன்". இதுவல்லவா கடவுளை நம் முன்னாள் கொண்டு வருவது. கிருஷ்ணன் கடவுளாக காட்சி தரும் தருணம் அல்லவா!.. 

  
பாண்டியன் சதீஷ்குமார்
கொரியா