Thursday, January 10, 2019

தேர்
அன்புள்ள ஜெயமோகன்

வெண்முரசுநூல் இருபதுகார்கடல்- கர்ணனது வில் மற்றும் அவனது தேர் உருவாகிய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தது .முதலில் கர்ணன், அவனது ஆசிரியர் பரசுராமர் காதில் ஓதிய சொல்லை, கலிங்க தேசத்தை சேர்ந்த பெருந்தச்சர் காளிகர் மூலமாக விஜயம் எனும் பெருவில்லாக உருவாக்கம் செய்தான்.மாபெரும் குருஷேத்ர யுத்தத்தில் காண்டீபம் ஏந்திய இந்திரன் மகன் அர்ஜுனன் எதிராக , சமர் யுத்தம் செய்திட சூரிய புத்திரன் கர்ணன் ஏந்திய வில் விஜயம் .இங்கு காண்டீபத்திற்கான அறைகூவல் விஜயம்

அது மட்டுமல்ல கடந்த பத்து நாள் நடந்த குருஷேத்ர போரில் கௌரவர் பலரும் பீமனால் வதம் செய்யப்பட்டனர் .அபிமன்யு ,கடோத்கஜன் மற்றும் அர்ஜுனனால் கௌரவர் மைந்தர்கள் பலரும் கொல்லப்பட்டனர் .ஆனால் பத்து நாள் போரில் பாண்டவர் பக்கம் ஒரு பாண்டவரோ அல்லது ஒரு பாண்டவ மைந்தரோ களம் படவில்லை .அந்த நிலையை மற்றவருவதே கர்ணனின் விஜயம் எனும் கொலை வில்.எச்சம் /மிச்சம் இன்றி பாண்டவர்களின் மைந்தர்கள் அபிமன்யு ,கடோத்கஜன் என அனைவரும் யுத்தத்தில் பலியாகும் நிலையை தொடங்கி வைப்பது விஜயம் எனும் கர்ணனின் வில் .கர்ணனின் உச்ச வில்திறனை வெளிப்படுத்த தெய்வங்கள் அளித்த கொடை விஜயம் .

அந்த வில் காண்டவம் எனும் நாகங்கள் வாழ்ந்த அடர்காட்டையழித்த பாண்டவர்களின் மேல் உள்ள வஞ்சம் தீர்க்க பாதாள நாகம் மணிகர்ணன் உருமாறியதால் உருவானது .மேலும் விஜயம் ஒரு அறைகூவல் .

- வெண்முரசு நூல் இருபதுகார்கடல் – 10 “அரசே, மானுடர் இயற்றும் பெருஞ்செயல்கள் அனைத்துமே தேவர்களுக்கான அறைகூவல்களே. ஏனென்றால் பெருஞ்செயலாற்றுபவர்கள் அதனூடாக தேவர்களாகிறார்கள். ஆகவே தேவர்கள் பெருஞ்செயல்களை பெருந்தடைகளென ஆக்குகிறார்கள்.” என்றார் காளிகர்.ஆனால் அவர்கள் இயற்றும் பெருஞ்செயல்களுக்கு எதிரான எதிர்வினையையும் அவர்கள் தான் எதிர் கொள்ள வேண்டும் .அது ஆக்கம் என்றாலும் சரி அழிவென்றாலும் சரி என்கிறார் காளிகர்.

ஆம் விஜயம் எனும் வில்லேந்திய கர்ணன் களம் பட காரணமும் அவன் ஆற்றிய பெருஞ்செயல் தான் .

வெண்முரசுநூல் பத்தொன்பதுதிசைதேர் வெள்ளம்-19

பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறிஎன்றான் கடோத்கஜன்.

 யுகங்கள் யுகங்களாக பாதாள லோகத்தில் ஊழ்கத்தில் அமைந்த மணிகர்ணன் எனும் தொல்நாகத்தை தொட்டெழுப்பிய பெருஞ்செயல் செய்த பெரியவன் கர்ணன் அதற்காக முற்றிலும் தோற்றாக வேண்டும் என்பதே ஊழ்.

விஜயம் போன்றதே கர்ணனின் அடுத்த பெருஞ்செயல் அவனது பொற்தேர் ஜைத்ரம் . இது ஏற்கனவே மகத பேரரசன் ஜராசந்தன் வைத்திருந்த சைத்ரம் எனும் பொற்தேருக்கு நிகர் .

வெண்முரசு நூல் பத்துபன்னிரு படைக்களம் – 44

ஜராசந்தன் மைந்தன் சகதேவன் அணுகி வந்து கைகூப்பிஇளைய பாண்டவரே, நீங்கள் வெற்றிகொண்டு வரும்போது மகதத்தின் அரசத்தேரை உங்களுக்கு அளிக்கவேண்டுமென எந்தை ஆணையிட்டிருந்தார். சைத்ரம் என்னும் பெயருள்ள அந்தப் பொற்தேர் இந்திரனுக்குரியதென்றும் எங்கள் மூதாதையான பிருகத்ஷத்ரரால் வெல்லப்பட்டதென்றும் சூதர்கள் பாடுகிறார்கள். அதை ஏற்று அருள்க!” என்றான்.

சூரிய மைந்தன் கர்ணன் முற்றிலும் உலோகத்தால் - பொன்னாலும் ,வெள்ளியாலும் ஆன எடை மிகு போர்த்தேரை தனக்கென உருவாக்கினான் .போர்க்களத்தில் பொன்னுக்கு நெறியில்லை என உணர்ந்தும் கர்ணன் ஆற்றிய மற்றோரு பெருஞ்செயல் இந்த பொற்தேர் .ஏனென்றால் தேர் மரத்தூண்களாலும் ,முகடுகளாலும் மற்றும் மரசகடங்களாலும் செய்யப்பட்டிருந்தால் ,குறைவான எண்ணிக்கையில் குதிரைகள் கட்டப்பட்ட மரத்தேர் விரைவான வேகத்தில் செல்ல முடியும் .எடைகுறைவே மரத்தேரின் விரைவுக்கு காரணம் .ஆனால் இரும்பு சகடங்களால் - சக்கரங்களால் ஆன கர்ணனின் பொற்தேர் ஜைத்ரம் ஏழு புரவிகளால் இழுக்கப்பட்டும் மரத்தேரின் விரைவை பெற்றிந்தது .

ஆனால் தெய்வங்களின் ஆடல்களை குருஷேத்ர யுத்தத்தின் ஒவ்வொரு கதைமாந்தரிலும் நாம் காண்கிறோம் .பொற்தேருக்கு கர்ணன் அளித்த விலை அவனது உயிர்

வெண்முரசுநூல் இருபதுகார்கடல்-5

விலைகொடுக்காமல் எதையும் தெய்வங்கள் அளிப்பதில்லை. சிறகுகளை கொடுத்த பின்னரே யானை துதிக்கையை பெற்றது என்பது நம் குலக்கதை. நாம் பெற்றது இவை என்றால் கொடுத்தது என்ன? தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்.”

இது தான் தெய்வங்களின் விளையாட்டு .கலைமான்களுக்கு அதன் கிளைவிரித்த கொம்புகள் தான் அழகு .ஆனால் அதே கொம்புகள் காட்டில் மரம் ,செடிகொடிகளில் சிக்கிக்கொண்டால் அது கொம்பை மீட்க முடியாமல் ,கொலை மிருகங்களுக்கு உணவாவது தான் கொடும் விதி .அது போன்றதே கர்ணனின் பொற்தேர் .பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணனின் தேர் சகடம் பள்ளத்தில் சிக்கிய போது அதனை எடுக்கமுடியாமல் போனதற்கு காரணம் அதன் உலோக எடை தான் .மரத்தேர் எனில் சடுதியில் கர்ணன் தேரை பள்ளத்தில் இருந்து மேலே இழுத்திருக்க முடியும் .ஏனென்றால் கர்ணனின் தோள்வலிமை துரியோதனன் மற்றும் ஜராசந்தனின் தோள்வலிமையை விட மிக மிக அதிகம் .கர்ணனை பெரும் வில்லாளியாக எண்ணுபவர்கள் கூட கர்ணனின் தோள்வலிமையை அறிந்ததில்லை .
வெண்முரசுநூல் ஒன்பது – ‘வெய்யோன் – 55

ஜராசந்தன் கர்ணனின் கைகளைப்பற்றிஆனால் இன்றொரு மாயை எனக்கு கலைந்தது. மற்போர் என்பது எடையாலும் தோள் முழுப்பாலும் நிகழ்வதென்று எண்ணியிருந்தேன். எங்கள் இருவரையுமே இருகைகளால் தூக்கி வீசும் ஆற்றல் தங்களுக்கு இருக்கிறதென்று கண்டேன். என் வாழ்வின் பேரறிதல்களில் ஒன்றுஎன்றான். துரியோதனன்ஆம் மூத்தவரே, நிகரற்ற வில்லவர் நீங்கள் என்று அறிந்திருந்தேன். பெரும் மற்போர்திறன் கொண்டவர் என்று இன்று அறிந்தேன்என்றான். கர்ணன்நான் பரசுராமரிடம் மட்டுமே மற்போரில் தோற்க முடியும். ஏனெனில் அது அவர் எனக்கு அருளியதுஎன்றபின் அவர்களின் தலையை வருடிவருக!” என்றான்.

 அத்தகைய கர்ணன் பதினேழாம் நாள் யுத்தத்தில் அவனது பொற்தேர் பள்ளத்தில் சிக்கிட அதனை மேலெழுப்பும் முயற்சியில் முழு விசையையும் பயன்படுத்தியும் தோற்று கையறு நிலையில் நிற்கின்ற வேளையில் யோகத்திலமைந்த இளைய யாதவர் சொல் பணிந்து காண்டீபம் வில்லேந்திய அர்ஜுனன் விடுத்த அம்பினால் உயிர் மாண்டான் என்பதே மஹாபாரதம் .ஏனென்றால் பெருஞ்செயலாற்றுபவர்கள் முற்றழிந்து நிற்பது தான் மகாபாரத யுத்தம் .
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி செந்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்