Sunday, January 6, 2019

அவனியில் தென்படும் பூசல்கள்.

இன்றைய வெண்முரசில் புவியில் நிகழும் பூசல்களை  பிரம்மனின் புத்திரர்கள் கண்டு வந்து கூறுகிறார்கள்.

1. மரீசி காணும் இயற்கையின் விசைகளுக்கிடையேயான பூசல்
 புவியின்விசைகளை ஐம்பூதங்களை அடிப்படையாகக்கொண்டு பிரித்துக்கொள்கிறோம். வானில் புவியின் இயக்கத்தை வழி நடத்தும் புவியீர்ப்பு விசையை நான்  ஆகாயத்தின் விசை என்று கொள்கிறேன். பரவி தன் மட்டத்தை காத்துக்கொள்வது நீரின் விசைஎழுந்து பாய்ந்து எங்கும் தன்னை நிரப்பிக்கொள்வது காற்றின் விசையாக உள்ளது. தான் தீண்டும் எதையும் தானெனெ ஆக்கிகொள்வது தீயின் விசை. எடைகொண்டு தன்னை அழுத்திக்கொள்வது மண்ணின் விசை. இவைகள் ஊடிப்பூசலிட்டு பிறப்பதே புயலும் மழையும், பூகம்பமும் ஆழிப்பேரலைகளும்  போன்ற புவியினை அலைகழிக்கும் பெரும்நிகழ்வுகளாக உள்ளன.

    மரீசி புவியில் இறங்காமல் விண்ணிலிருந்தே கண்டறிந்ததாக இந்தப் பார்வை அமைந்திருக்கிறது.

 2. புலகர் கண்ட பசியினால எழும் பூசல்கள்

உயிர்கள் அனைத்திற்குமான அடிப்படைத் தேவை பசியினால் வருவதுவிலங்குகள் பறவைகள் மட்டுமல்ல தாவரங்களும் தம் பசியைத் தீர்த்துக்கொள்வதே தன் தலையாய பணியாக கொண்டிருக்கின்றனஅலைந்து தேடி தனக்கான உணவைத்தேடிக்கொள்வதே அவற்றின் வாழ்வில் அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தாவரங்கள்  மண் அடுக்குகளில் தன் வேர்களால் அலைந்து துழாவி தமக்கான உணவை தேடுகின்றனசில தாவரங்கள்  மற்ற தாவரங்களிலிருந்து தம் உணவை உறிஞ்சிக்கொள்வதும் நடக்கின்றது. ஒரு பெரிய மரத்தில் பற்றி ஏறி அதை முழுதும் மூடி பரவிக்கொள்கின்றன சில கொடிகள். விலங்கினத்தில் இப்போட்டியும் பூசலும் இன்னும் மிகுந்து காணப்படுகின்றது. அவை தம் உணவை தாவரங்களிருந்து  அல்லது மற்ற விலங்குகளின் உடல்களிலிருந்து எடுத்துக்கொள்கின்றன. அதற்காக அவற்றை கொன்றழிக்கவும் அவை தயங்குவதில்லை. உணவுக்கான தேடலும் பூசலுமே உயிர்களின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறதுதமக்கு உணவு கிடைப்பதை காத்துக்கொள்ளும்பொருட்டே விலங்குகள் பூமியின் மேல் தனக்கான இடம் என எல்லைகளைக் கொள்கின்றன. பின்னர் அதை தக்க வைப்பதற்கான பூசல்கள் எழுகின்றன

   புலகர் புவியில் இறங்கி  வாழும் உயிரினங்களைக் கண்டு அவற்றுக்கிடையே எழும் இந்தப் பூசலை கண்டு வந்து கூறுகிறார்.


3. புலஸ்தியர் காணும் புரியாமையினால்  எழும் பூசல்கள்.
உணவுக்காக அல்லாமலும் உயிர்களுக்கிடையே பூசல்கள் எழுகின்றனவேறு இன உயிரினங்களோடு மட்டுமல்லாமல் தம்முடைய இனத்து விலங்குகளிடம் கூட சண்டைகள் ஈடுபடுகின்றன. உணவு உறைவிடத்திற்காக அல்லாமல் ந்டைபெறும் பூசல்கள் அவற்றுக்கிடையே புரிதலின்மையாலேயே நடைபெறுகின்றன. அவை எழுப்பும் ஒலிவகைகள் உதவவில்லைசில உயிரினgன்கள் ஒவ்வொரு ஒலி வகைக்கு ஒவ்வொரு பொருள் கொடுத்தும் இந்தச் சிக்கல் தீர வில்லை. மொழியறிவை வெகுவாக வளர்த்துக்கொண்ட மனித இனத்தில் இன்னும் இது அதிகரித்து வருகிறது. ஏனென்றால்  மனதில் இருப்பதை சொல்வதற்கென தோற்றுவித்த மொழியை தன் மனதிலிருப்பதை மறைத்துக்கொள்ளவே அதிகம்  மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே ஒருவர் சொல்வதில் இருக்கும் உண்மையில் கேட்பவர் ஐயம் கொள்கிறார். அந்த ஐயம் புரிதலின்மையை அதிகரிக்கிறது. இது பற்பல பூசல்களுக்கு வழிகோள்கிறது

புலஸ்தியர் உயிர்களுடன்  உடன் இருந்து இந்த அறிதலை அடைந்திருப்பார் என தெரிகிறது.


4.  அங்கிரஸ் அறியும் நிறைவின்மையால் எழும் அமைதியின்மை.
உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைத்திருந்தும் ஒவ்வொரு உயிரும் அது போதுமென  நிறைவடைவதில்லைஒன்றை முயன்று பெற்ற பின் அடுத்து ஒன்றை விழைந்து அடைய எண்ணுகிறது. இது முடிவில்லா தொடராக நீண்டுகொண்டே இருக்கிறதுஇப்படி நிறைவில்லாமை ஓவ்வொரு உயிரையும் பதட்டத்தில் வைத்திருக்கிறது. அதன் காரணமாக உயிரினங்கள் மனக் கொந்தளிப்பு கொண்டவையாக இருக்கின்றன

அங்கிரஸ் உயிர்களின் உளத்தை ஆராய்ந்து இந்நிலையை அறிந்து கூறுவதாக தெரிகிறது.  

5. அத்ரிக்கு புலப்பட்ட ஆழ்மனதின் நிறைவின்மை

  உயிர்கள் தன்னைப்பற்றி குறை கொண்டதாவே இருக்கின்றன. அதன் ஆழ்மனதில் தான் இதுவல்ல இந்த உடலல்ல இதை விட சிறந்த பெரிய ஒன்றாகிய  தான் இந்தச் சிறிய அழியக்கூடிய குறைகொண்ட உடலில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக அவை உணர்கின்றனஅதனால்  அது புறத்தே  தன்னை உயர்ந்ததாகக் காட்டிக்கொள்வதே  அகங்காரம் என ஆகிறது

அத்ரி உயிர்கள் தாமே அறியாமல் இருக்கும் அவற்றின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் இந்த நிறைவின்மையை அறிந்து சொல்வதாக இது இருக்கிறது.
  
இப்படி ஐவரின் பார்வையும் ஒருவரின் பார்வையை ஒருவர் விரித்துக்கொள்வதாக இருக்கின்றன.  
  
இவ்வாறான பூசல்களுக்கு காரணம் தனித்து ஒரு இருப்பாக தன்னை அவை உணர்ந்து பிறிதென பல இருக்கின்றன என்று அவை  கொள்ளும் எண்ணத்தால்  நிகழ்கின்றன என்று நான் கொள்கிறேன். தானே எங்கும் நிறைந்திருப்பதாக கருதும் நிலையிலேயே இத்தகைய வேறுபாடுகள் எழாதொழியும்இதை பின்னர் யமனிடம் ஆமை கூறும் இந்த கூற்றின் மூலம் வெண்முரசு தெளிவுபடுத்துகிறது:

நீ நிலைபேறு கொண்டது எங்ஙனம்?” என்று யமன் கேட்டான். “இந்த ஓட்டுக்குள் என் உடல் இடையின்றி நிறைந்து செறிவுகொண்டுள்ளதுஎன்றது ஆமை. “உள்ளே சிற்றசைவுக்கும் இடமில்லை.” 
    
ஒருவர் தன் ஆன்மாவை இப்பெருவெளி முழுதும் தானின்றி மற்றெதுவும் இல்லை என நிறைத்திருக்கும் ஞானத்தை அடைகையில்தான்  அவர் வீடுபேறுகொள்கிறார் என்ற அத்வைத தத்துவத்தை விளக்கிச் சொல்வதாக நான் இதை புரிந்துகொள்கிறேன்.


தண்டபாணி துரைவேல்