Tuesday, October 7, 2014

காற்றும் கண்ணனும்



அன்புள்ள ஜெமோ

நீலம் நாவலிலேயே எனக்கு கஷ்டமாக இருந்த அத்தியாயம் 13. திருணாவர்த்தன் வரும் இடம். அதில் என்னென்னவோ வருகிறது. மொழியை தொடர்வதே கஷ்டமாக இருந்தது. பத்துமுறையாவது அதை வாசித்திருப்பேன். அந்த வரிகளே எனக்கு மனப்பாடம் மாதிரி இருந்தன. மூலாதாரக்காற்று வரும் இடம். பிராணனைப்பற்றியது. அதெல்லாம் பிடிகிடைத்தது. காற்று என்பதனால் அது பறவைகளைப்பற்றிய பேச்சு வருகிறது என்றும் தெரிந்த்து

உண்மையில் அதில் விழிகளை பிய்த்து இமைகலை சிறகுகளாக கொண்ட பறவைகளாக ஆக்குவது. அந்தப்பறவைகள் அலைமோதுவது எல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. அந்த அத்தியாயத்தை நீக்கிவிட்டாலும் நாவலில் ஒன்றும் குறைவதில்லை என்றும் நினைத்தேன். ஆனால் அதன் கடைசி அத்தியாயத்தில் மதுராவில் இருந்து ரத்த நிறமான பறவைகள் பறந்து போனது என்று வாசித்தபோது இந்த அத்தியாயம்தான் நினைப்பில் வந்து அதிர்ச்சி அளித்த்து


பறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள். 

என்று வருகிறது 16 ஆம் அத்தியாயத்தில். ஆனால் 37 ஆம் அத்தியாயத்தில்

நகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.

என்று வருகிற இடம் அதை மிகச்சரியாகப் பொருத்திவிடுகிறது. நீங்கள் ஒரு அபோதாவஸ்தையில் இவற்றைச் சரியாக பொருத்தித்தான் பார்க்கிறீர்கள் என்று தெரிந்த்து. அவற்றை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி பண்ணினால் தப்பாகத்தான் போகும் என்று நினைத்துக்கொண்டேன்

சிவராம்