Thursday, October 9, 2014

காத்திருப்பு





அன்புள்ள ஜெ
வணக்கம்
சிறுபறவையாய் யமுனை நதி தீரத்தில் அலைந்து கொண்டிருக்கிறேன். நதிக்கரை மரங்களில் ஒளிந்து கொண்டு முடிவுறா பிரபஞ்ச லீலையினை தரிசித்து கொண்டிருக்கிறேன். நீர் பிரவாகத்தில் மிதந்து செல்லும் உதிர்ந்த மஞ்சள் நிற இலைகள் போலவே மனம் அலைவுற்றுகொண்டிருக்கிறது. மென்குளிரில் சிறகுகள் நடுங்க கிருஷ்ணனின் வரவை எதிர்பபார்த்து காத்திருக்கிறேன். எண்ணங்கள் யாவும் கிருஷ்ணனை நோக்கியே கூர்ந்திருக்கின்றன. ராதையின் கண்ணீர் வெம்மையை, உடல் நறுமணத்தை, வெப்பமிகு மூச்சுக் காற்றை, நடுங்கும் உடலுடன் தரிசித்தேன். உலகின் எல்லா துயரையும் அவள் மேல் ஏற்றிய கரியனின் கண்ணை கொத்தி விடலாமா என யோசிக்கிறேன்.  கரியனின் குழலோசையில் மயங்கி விழுந்தேன் மரத்திலிருந்து பலமுறை. ஒருமுறையாவது என்னை இருவரில் ஒருவர் பார்த்து விடமாட்டார்களா என ஏங்கியது மனம். துயரம் அழுந்த ஆயர் குடிகளில் தாழ்வாகவே பறந்தேன். தயிர் வெண்ணையின் மனம், ஆய்ச்சியரின் சிரிப்பொலி, பசுஞ் சாணத்தின் நொதிக்கும் குமிழிகள், மென் கள்ளின் புளிப்பு மணம் எவையுமே என்னை அமைதிப் படுத்தவில்லை. இரவு முழுவதும் உறங்காமல், நெடிய மரங்களின் கிளைகளில் அமர்ந்து இருக்கிறேன்.
சொல்லில் செயலில் பித்தேறி கிடக்கிறது. களிப்பில் வானில் மிதந்து கொண்டிருக்கிறது மனம்.  
நன்றிகள்
தண்டபாணி
பையூர்