ஜெ
நான் ஒரிசாவிலிருந்தபோதுதான் கீதகோவிந்தம் அங்கே எவ்வளவு பெரிய ஒரு விஷயம் என்பதை அறிந்துகொண்டேன். உள்பகுதிகளில் விறகு பொறுக்கும்பெண்கள் கூட கொஞ்சம் மாறுபட்ட உச்சரிப்பில் கீதகோவிந்தம் பாடுவார்கள். கோபிந்த் என்பார்கள். ஒரியமொழிப்பாட்டு போல இருக்கும். ஆனால் கீதகோவிந்தம் அது
நேற்று நீங்கள் கேலுசரண் மகாபாத்ரா பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நானும் டெல்லியில் அவருடைய ஒரு நடனத்தைப்பார்த்தேன். ஆனால் அப்போது அதெல்லாம் மனதில் உறைக்கவில்லை. இந்த பாவம் ஒரு unique . இதை அறியாமல் அந்த நடனத்தை ரசிக்கமுடியாது. இப்போது நீலம் வாசித்தபிறகு கேட்டால் நெஞ்சை அள்ளுகிறது. பெரியவரை மானசீகமாக கால்தொட்டு வணங்கினேன்
சாரங்கன்
அன்புள்ள சாரங்கன்,
ஜெயதேவரை ஒரிஸாவில் ஜெயதேப் கோஸ்வாமி என்றுதான் சொல்கிறார்கள். ஒரிசாவில் - பழைய கலிங்கத்தில் உள்ள கெட்னுலி சாஸன் என்ற சிற்றூரில் பிறந்து கொனார்க்கில் கல்விகற்றவர் என்று சொல்லப்படுகிறார். அவர் காலகட்டத்தில் ஒரியாவின் கோயில்கலாச்சாரம் உச்சத்தில் இருந்தது. தேவதாசிகள் வழியாக ஒடிசி நடனம் மெல்லமெல்ல உருவாகிக்கொண்டிருந்தது. ஜெயதேவர் பத்மாவதி என்ற நடனமங்கையை மணம்புரிந்துகொண்டார், அவரும் சிறந்த நடனக்கலைஞர் என்கிறார்கள். கீதகோவிந்தத்தை கலிங்கத்திலிருந்து பிரிக்கமுடியாது. பண்டிட் ரகுநாத் பாணிக்கிராகி பாடுவதைப்பாருங்கள். அந்த பாவம் பிறருக்கு வருவதேயில்லை
ஜெ
அஷ்டபதி
ஜயதேவமானசம்