Friday, October 3, 2014

குழந்தைக்கண்ணன்




அன்புள்ள ஜெமோ சார்

நீலம் நாவலை நான் ஆரம்பத்தில் வாசித்து அப்படியே விட்டுவிட்டேன். அதை என்னால் தொடர முடியவில்லை. ஏனென்றால் எனக்கு அதிலே தொடர்ச்சி தெரியவில்லை. தனித்தனி வரிகளாக நன்றாக இருந்தது. மேலே செல்ல தெரியாமல் இருந்தது. எப்படி வாசிப்பதென்று குழப்பமாக இருந்தது

ஆனால் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு வந்தது. கடிதங்களிலே உள்ள வரிகளை வாசித்தேன். அந்தவரிகளைப்பற்றி அவர்கள் சொல்லியிருப்பதை வாசித்தபோதுதான் உண்மையில் அவ்வரிகளை எப்படி அறிந்துகொள்வது என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் அர்த்தங்கள் எனக்குப் புரிந்தன

நீலத்தின் அர்த்தம் முக்கியமல்ல என்று தெரிந்துகொண்டேன். அந்த வரிகள் கொடுக்கும் உணர்ச்சிகளைத்தான் முக்கியமாக நினைக்கவேண்டும் என்று புரிந்தது. முதல்முதலாக கிருஷ்ணனை காணும்போது ராதை அடையும் மன எழுச்சியை அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. நீயும் மற்றக்குழந்தைகளைப்போலத்தானா என்று அவள் கேட்கிறாள். அம்மாவாக நம் குழந்தைகளை மற்றகுழந்தைகளுடன் ஒப்பிடுவதே நமக்குப்பிடிக்காது. அப்படி நாமே ஒப்பிட்டுக்கொண்டால்கூட கஷ்டமாகத்தான் இருக்கும் .அந்த மனநிலைதான் அது

கிருஷ்ணனின் கால்களைத்தான் ராதை கொஞ்சிக்கொண்டே இருக்கிறாள். காலைக்கொஞ்சத்தான் எனக்கும் பிடிக்கும். கால்தான் மிகவும் அசைந்துகொண்டே இருக்கும். பூமாதிரி இருக்கும். அதோடு வயிற்றிலே நாம் குழந்தையை அறிந்துகொண்டிருப்பதும் காலைத்தானே

கண்ணனை குழந்தையாக ராதை அறியும் இடங்களெல்லாமே அற்புதமானவை. அதுவரைக்கும்தான் வாசித்திருக்கிறேன். குழந்தையின் வாய் ஈரமாக நம் தோளிலே படும் அந்த குளிரை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதை வாசித்தபோது மிகவும் மன நெகிழ்ச்சி ஏற்பட்டது

முழுக்க வாசித்துவிட்டு எழுதுகிறேன்

ஸ்ரீ

முதற்கனல் பற்றி மரபின்மைந்தன் எழுதும் விமர்சனத் தொடர்