Monday, January 7, 2019

கார்கடல் - திரிவேணி சங்கமம்கார்கடலின் இரு துவக்க அத்தியாயங்களும் இந்த நாவலின் வடிவையும்தரிசனத்தையும் தீர்மானித்துஇதை அணுகி அறிய உதவும் சாவியாக அமைந்துள்ளன. குருஷேத்ர யுத்தத்தின் துரோண பருவத்தில் தான் கர்ணன் முதன் முதலாக போரில் கலந்து கொள்கிறான். இப்பருவத்தில் தான் எகலவ்யனின் மரணத்தைப் பற்றி கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறார். முக்கியமாக கடோத்கஜனின் மரணம். இயல்பாக இப்பருவத்தின் இறுதியில் துரோணரின் மரணம் நடக்கிறது. இவற்றில் கர்ணன் நாகபாசன்நாகர்களின் காவலன். அவர்களுக்காக வஞ்சம் உரைத்தவன். ஏகலவ்யனும்கடோத்கஜனும் அரக்க வம்சத்தவர்கள். துரோணர் வைதீக ஷத்ரியர். எனவே தான் நாகர்கள்அரக்கர்கள் மற்றும் வைதீகர்களின் பார்வைகள் நாவலின் துவக்கமாக வந்துள்ளன. அப்பார்வைகள் இப்பிரபஞ்ச தோற்றம் பற்றியவை. ஒவ்வொரு குலத்துக்குமான வேதங்களின் தோற்றமும் உள்ளுறையாக கொடுக்கப்பட்டுள்ளன. 

நாகர்களின் கதையில் இவ்வுயிர் குலத்தின் தோற்றமே கடலரசனின் விழைவே எனத் துவங்குகிறது. அங்கே தெய்வங்கள் இல்லை. ஒரு பிரம்மகணத்தில் நிகழும் சடுதி மாற்றமே இவ்வுயிர்த் தோற்றம். வான்மண் மற்றும் பாதாளம் என மூன்றையும் ஆளும் உயிரினங்களின் தோற்றம். செம்பருந்து வானையும்காகம் மண்ணையும்,நாகம் ஆழத்தையும் ஆள்கின்றன. இவ்வுயிர்களின் நீட்சியே இம்மொத்த உயிர்ப் பெருவெளி.

நாகங்களின் நீட்சியே ஆதிமனிதர்களான நாகர்கள். மண்ணுக்கடியில் வாழ்பவர்கள். ஶ்ரீ எனச் சீறலையே ஆதி ஒலியாகமொழியின் துவக்கமாகக் கொண்டவர்கள். எனவே ஆதி வேதமான நாக வேதம் இத்தகைய ஒலிகளால் ஆனதாகவே இருந்தது. பொருள் இன்னும் வந்து சேராத ஒலிகள். ஆயினும் பொருள் என ஒன்று தேவையில்லாமலேயே உணரக்கூடியதாகவும்வேட்கக் கூடியதாகவும் இருக்கின்றன. இருப்பினும் புவியில் நிலைபேறு என்பது அமையவில்லை. காரணம் பசியும், ஐம்பெரும் பூதங்களின் ஒத்திசைவின்மையும். ஐம்பெரும் பருக்களின் ஒத்திசைவின்மை என்பது ஐம்புலன்களின் கட்டுப்பாடின்மை என்பதே. அதன் காரணம் அவற்றின் மொழி தொடர்புறுத்தலுக்குப் பதில் துண்டாடலுக்கு உதவுவதே. இவற்றையே பிரம்மாவின் புதல்வர்களான மரீசி,புலகர் மற்றும் புலஸ்தியர் கண்டடைந்து சொல்கிறார்கள்.

மண்ணின் மீதும்மரங்களின் மீதும் பரவி வாழ்ந்த காகத்தின் நீட்சியான யானையின் வழித்தோன்றல்களாக நாகர்களின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக அரக்கர்கள் அமைகிறார்கள். இவர்களின் அரக்கஅசுர வேதம் பொருளற்ற ஒலிகளால் ஆன வேண்டுதல் மட்டுமல்லாமல்கூடவே விவேகத்தின் முதல் படியான வினாவையும் கொண்டிருந்தன. ஆம்அவர்களின் மொழி 'காஎன்ற வினாவின் ஒலியை அடிப்படையாகக் கொண்டது. தங்கி வாழ்ந்துவிழைவுகளை மேலும் மேலும் வளர்த்து அவற்றை அடைந்துமேலும் விழைந்து வாழும் வாழ்வில் அவர்களிடம் எஞ்சி நிற்கும் நிறைவின்மையாக அவ்வினா அவர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்து. இதுவே அவர்களிடம் அவர்தம் மகிழ்வும், நிறைவும் வேறெங்கோ இருப்பதாக எண்ணி அவர்களை நகர்ந்து கொண்டே இருக்க வைக்கிறது என சொல்கிறார் அங்கிரஸ்.

விண்ணை ஆளும் செம்பருந்தின் நீட்சியாக, உயிர் சங்கிலியின் உயர் மட்டத்தில் அமைந்த உயிரினங்களின் உச்சமாக, அரக்க அசுரர்களின் இயல்பான பரிணாம வளர்ச்சியாக மானுடர்கள் வந்து அமைகிறார்கள். அவர்களின் வேதம் ‘ஏக’ என அனைத்தும் ஒன்றே என்ற அறிதலில் இருந்து, பறவைக்கரசனனின் முதல் ஒலியில் இருந்து பொருள் திரட்டித் துவங்கியது. இருப்பினும் அந்த அறிதல், தான் யார் என்ற தேடலில் அவர்களைக் கொண்டு சேர்த்தது. அத்தேடல் தந்த நிறைவின்மையையே அத்ரி கண்டடைகிறார்.

புவியின் இந்த நிறைவின்மையை ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விதமாக அதன் உயிர்க்குலங்கள் தீர்க்க முனைகின்றன. நாகர்கள் அனைத்தையும் அடக்கி ஒரு ஓட்டுக்குள் ஒடுங்கும் ஆமையை இப்புவியைத் தாங்க வைக்கின்றனர். மற்றொரு வகையில் ஐம்புலன்களின் கட்டுப்பாடின்மை என்பதை அதை ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க வைப்பது மூலம் நிலைபெற வைக்க இயலும் என வகுக்கிறார்கள். அரக்கர்கள் மேலே அசைந்து கொண்டிருந்தாலும் மண்ணில் நிலையாக ஊன்றியிருக்கும் கால்களைக் கொண்ட திசையானைகள் மூலம் இப்புவியைத் தாங்க வைக்கின்றனர். மற்றொரு வகையில் விழைவுகள் எவ்வழி தேடி ஓடினும்மனம் எங்கெங்கோ அலைவுறினும் அதை ஐம்புலன்களையும் அடக்கி, நிலையாக அமையும் ஊழ்கம் மூலம் நிலைபெற வைக்கின்றனர்.

தானென்று அமைந்த எதுவும் தானல்ல, உண்மையான தான் யார் என்பதைக் கண்டடைவதே வாழ்வின் பெரும்பணியென விண்ணை ஆண்ட பருந்தின் தோன்றல்களை எண்ணச் செய்தது அதன் முதல் அறிதல். அதை நோக்கிய பயணத்தில் மானுடர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்கு பிரித்து, அத்தேடலை, மீட்சியை முதன்மையாகக் கொண்டவர்களை வைதீகர்களெனவும், பிற அனைவருமே அவர்களின் பணியைத் தடங்கலின்றி முன்னெடுக்க உதவ வேண்டுமெனவும் வகுத்தது. வைதீகர்கள் தங்கள் முதல்வனாகக் கொண்ட கருடன் தேடலின் இலக்கு என அமுதைத் தேடிச் செல்கிறது. அத்தேடலின் பயணத்திற்கான சக்தியைப் பெற ஆமையின் வழி வந்தவனையும்யானையின் வழி வந்தவனையும் உண்டு பறக்கிறது. மற்றொரு வகையில் புலனடக்கம் பயின்று,ஊழ்கம் கனிந்து தியானத்தில் எல்லைகளற்ற முடிவிலியில் பறக்கும் ஆழுள்ளத்தின் வழியான யோகத்தின் மூலம் நிலைபெற வைக்கின்றனர். இதன் இறுதி என்பது அமுதைக் கண்டடைவதே. ஆயினும் அவ்வமுது ஒரு சாராருக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அதைக் கையாளும் பொறுப்பும்அறிவும் ஒரு சாராருக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மானுடரும் தங்களின் தொடர் முயற்சியால் அதை எட்டுவதே வாழ்வின் திசை என வகுக்கிறது அவர்களை ஆளும் நால்வேதம். இதற்கு மாற்றாக வேதாந்தத்தை முன்வைக்கும் கிருஷ்ணன்இயல்பாகவே கருடனை வாகனமாகப் பெறுகிறான்.


இந்த பெரும்பின்னணியில் வைத்து தான் இந்த நாவலை நாம் அணுக வேண்டும். வம்ச கதைவிவேகம்,கண்ணீர் என மூன்று கருதுகோள்கள். புலனடக்கம்ஊழ்கம்யோகம் என மூன்று நிலைபேறுகள்நாகவேதம்,அசுரவேதம்நால்வேதம் என மூன்று வேதங்கள். இவற்றை சுட்டிச் செல்லும் கர்ணன்கடோத்கஜன் மற்றும் துரோணர் என மூன்று கதாமாந்தர்கள். போரின் நிகழ்வுகளைச் சொல்லும் அரவான்பார்பாரிகன்சஞ்சயன் என மூன்று கதைசொல்லிகள். நாவலின் ஒவ்வொரு பகுதியும் மேற்கூறிய மூன்றுகள் ஊடும் பாவுமாக கலந்து அமைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டடைவதன் மூலம் குருஷேத்ரப் போர் என்பதன் பிற தளங்கள் நமக்குக் கிடைக்கப்போகின்றன. 


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்