அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,
நான் தங்களுடைய தளத்தில் வெளிவருகின்ற வெண்முரசு நாவலைப் படித்து வருகின்ற வாசகன்.முதற்கனல் நாவலை நள்ளிரவு வரை விழித்திருந்து தொடந்து படித்து வந்தேன் .என்னுடைய மனதை வேறு தளங்களுக்கு அழைத்து சென்ற ஒரு ஊடகமாக முதற்கனல் இருந்தது .மழைப் பாடல் மற்றும் வண்ணக்கடல் நாவல்களை தொடர்ந்து படிக்க முடியவில்ல.
அந்த தருணங்களில் நான் என்னுடைய சொந்த அலுவல்களில் மூழ்கி இருந்ததது காரணம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீலம் நாவலை படிக்க தொடங்கினேன் .. என்னை மிகவும் உற்சாகப் படுத்திய நாவல் ..அழகிய சந்தங்களுடன் கூடிய பிரமிக்க வைக்கும் சொல்லிணைவு என்னை எங்கோ கொண்டு சென்றது ..நான் தர்க்கம் கொண்டு மூட நினைத்த கண்ணனை கடல் வண்ணனை என் கனவுகளில் தினமும் உலவச் செய்தது ..பல இடங்களை என்னால ் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ..சொல் அற்றுப்போய் காட்சிகளை காண்கிறேன் ..இது போல் எதுவும் என்னை கனவு காணச் செய்ததில்லை .. மாபெரும் யோகியான கண்ணனை அவனது இன்னொரு உயிரான ராதையை காட்சி படுத்தியதற்கு மிகவும் நன்றி ..
அன்புள்ள ஜெ
நீலம் நாவலை நான் கடிதங்களைக் கண்டபிறகுதான் வாசிக்க ஆரம்பித்தேன். கடிதங்கள் அதை எப்படி வாசிப்பது என்று எனக்குச் சொல்லித்தந்தன. சுவாமி, ராமராஜன் மாணிக்கவேல், சண்முகம். கடலூர் சீனு , அருணாச்சலம் கடிதங்கள் சிறப்பானவை. அக்கடிதங்களிலெ இருந்து ஒருவிஷயத்தைக் கற்றுக்கொண்டேன் இந்நாவலை கதையோட்டமாக வாசிக்கக் கூடாது. அடுத்து என்ன என்று பார்க்கக்கூடாது. வரிவரியாக சுவைத்து படிக்கவேண்டும். எல்லா அத்தியாயங்களையும் இரண்டுமுறையாவது வாசிக்கவேண்டும்
அப்படி வாசித்தபோது எனக்கு மெய்மறந்த அனுபவம் ஏற்பட்டது. சிலசமயம் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. நான் ரிக்கில் வேலைபார்ப்பவன். ஆனால் காட்டில் இருப்பதுபோலவேதோன்றியது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றியது
கனவுபோன்ற அனுபவம் சார். கண்ணனையும் ராதையையும் அருகே நின்றுபார்த்தேன். கண்ணீர்விட்டேன். புல்லரிப்பும் திகைப்பும் வந்தது. ஒரு நாவலை வாசித்து இதைப்போல ஒரு அனுபவத்தை அடைந்ததே கிடையாது
நன்றி
ஜெயராமன்
மரபின் மைந்தன் எழுதும் வியாசமனம் -முதற்கனல் விமர்சனம்