Saturday, October 4, 2014

தாளமும் சொற்களும்



ஜெயமோகன்,

நீலத்தை ஆரம்பம் முதலே வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீலம் என்ற வார்த்தையே இப்போது வேறுமாதிரி அர்த்தம் வருவதாக மாறிவிட்டது. நீலம் நீலம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இந்தப்பூமியில் நிறைந்திருக்கும் எல்லா நீலமும் கண்ணனே என்பதுபோல பிரமை வருகிறது. அந்தப்பிரமையை உண்டுபண்ணியதுதான் இந்நாவலின் வெற்றி என் நினைக்கிறேன்.

இதிலுள்ள மொழிநடைதான் எனக்கு அந்தமனப்பிரமையினை பெரும்பாலும் உருவாக்கியது. இதிலே ஒரு தாளம் இருக்கிறது. ஒரு வரி வந்ததும் அடுத்த வரி இந்த தாளத்திலேதான் இருக்குமென்று மனம் நினைக்கிறது. அந்த வரி அதே தாளத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கமுடிகிறது. நான் சொல்வது இந்த ஆச்சரியத்தைத்தான்.

உதாரணமாக

ஆயிரம் கண்ணெழுந்த காமம்
 பல்லாயிரம்  நாவெழுந்த மௌனம்
பலகோடி கைகொண்ட செயலின்மை

என்பதுபோன்ற வரிகள். இதிலுள்ளது  oxymoron என்னும் மொழி வடிவம் தர்க்கபுத்தியை திகைப்படையவைத்து மயக்கநிலையை உருவாக்குவது இது. ஆனால் நான் சொல்வது அந்தத் தாளம் நம்முடைய மனதிலே உண்டுபண்ணுகிற பூர்ணநிலையைத்தான். அப்படி இருந்தால்தான் அது பூர்ணம் என்று தோன்றுகிறது. ஸரிகமபதநி என்று ஆரோகணம் வந்ததுமே அவரோகணத்தை மனம் கேட்பதுபோல

என் நெஞ்சே, எத்தனை இனியது கைவிடப்படாமலே விரகத்தை அறிவது. அளிக்கப்படாத வாக்கு பொய்ப்பது. நிகழாத துயரத்தில் நீந்தி அளைவது

அந்த மயக்கநிலையை மேலே மேலே கொண்டு செல்லும் வரிகள் இவை. இவற்றுக்கு ஒரு மரபு உள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டியும் இருக்கிறது
என் கல்லூரி புரபசர் சொல்வார். காதல்கவிதைகளில் புதியதாக ஒன்றையும் சொல்லவே முடியாது. சாலமோன் காலம் முதல் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதில் உண்மையாக எதைச் சொன்னாலும் புதியதாகத்தான் இருக்கும் என்று. அதை நினைத்துக்கொண்டேன்

நானெல்லாம் பிசினஸில் வாழ்க்கையில் ஊறிப்போய் எழுதுவதையே விட்டுவிட்டவன். [அந்தக்காலத்தில் சிலது எழுதியிருக்கிறேன். அதெல்லாம் எதுக்கு இப்போ] ஆனால் இப்போது இதை வாசித்து எழுதவேண்டுமென தோன்றியிருக்கிறது. அதிசயம்தான்

சங்கர நாராயணன்