Saturday, October 4, 2014

அவளை வணங்குக- கேசவமணி





அன்புள்ள ஜெயமோகன்,

நீலம் மலர்ந்த நாட்கள் வாசித்தபோது சொல்லத்தோன்றியது

ஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நான்கு இருக்கைகள் தள்ளி நின்றபடி ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தாள். இளம் பெண். சிவப்பு நிறம். அவள் அணிந்திருந்த கருப்பு நிறப் புடவையும் ரவிக்கையும் அவளின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது. புடவையில் ஆங்காங்கே இருந்த வட்ட வட்டமான கரும் வட்டங்கள் அவளுக்கு அசாத்தியமான அழகை அளித்தது. அவள் இறுக்கமாக பின்னியிருந்த கருங்கூந்தல் நீண்டு அவளது இடுப்பைத் தாண்டி கிழே சென்றது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை கரும்பாறைகளுக்கிடையே கொட்டும் அருவியென அவள் கருங்கூந்தலில் தொங்கியது. அவளின் நீண்ட கழுத்தும், காது மடல்களும், கன்னக் கதுப்புகளும் என்னைக் கிறங்கடித்தது. ஒரு கை மேலே கம்பியைப் பற்றியிருக்க, மற்றொரு கை தொங்கியிருக்க ஓர் ஓவியப் பாவையென அவள் நின்றிருந்தாள். அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்களும், பொன்நிறக் கடிகாரமும், நீண்ட விரல்களில் இருந்த மோதிரமும் அவள் கைகளின் வனப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. அவள் உடலின் கச்சிதமான அமைப்பு, நீண்ட கால்கள், செந்நிற வண்ணம் சுற்றிலும் பூசிய பாதங்கள், அதன் மேலாக அணிந்திருந்த கொலுசு முதலியன என் கண்களைக் கவர்ந்திழுக்க, நான் அவளைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெண்ணை ஒரு நாளும் இப்படிக் கூர்ந்து பார்த்து அறிந்ததில்லை என்பதை உணர்ந்த கணத்தில் எனக்குப் பெரும் வியப்பேற்பட்டது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் பரவி என் நாசியில் ஏறியபோது நான் வேறெங்கோ இருப்பதாக உணரத்தொடங்கினேன். என் உள்ளமும், உடலும் இலகுவாக, நான் மிதப்பது போல உணர்ந்தேன். மனம் முழுதும் இனம் புரியாத ஆனந்தம் நிரம்பியது. அது உடல் சம்பந்தப் பட்டதல்ல. பல வருடங்களுக்கு முன்னால் நான் தியானப் பயிற்சியில் ஈடுபட்டபோது கிடைத்த அனுபவம்தான் எனப் புரிய, நான் அச்சம் மேலோங்க என்னை அதிலிருந்து மீட்டுக்கொள்ள கவனத்தை திசைதிருப்பினேன். காரணம் அந்த தியான அனுபவம் அப்போது என்னுள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் இல்லாமலாகிவிடுவேன் என்ற உணர்வு என் மன ஆழத்தில் பேரச்சமாக உருக்கொண்டிருந்தது. அதனால் நான் பலவித உடல் இன்னல்களுக்கு ஆளானேன். அதிலிருந்து என்னை நான் மீட்டுக்கொள்ள சில வருடங்கள் ஆயிற்று. எனவேதான் நான் பேருந்துப் பயணத்தில் அந்த அச்சத்தை மீண்டும் உணர்ந்தவனாக என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னை இழக்காமலிருக்க, என்னை நான் விலக்கிக் கொண்டேன். பாதிவழியில் இறங்கி விடலாமா என்று கூடத்தோன்றியது. நல்லவேளையாக அந்தப் பெண் முன்னதாக இறங்கிச் சென்றுவிட்டாள். நான் அச்சத்தில் அவளைத் திரும்பிக்கூட பார்க்க முயலவில்லை.

என்னதான் அச்சம் இருந்தாலும்  அத்தகைய அழகின் சுழலில் வீழ்ந்து என்னை நான் மூழ்கடித்துக் கொள்ளும் அந்தத் தருணத்திற்கான ஆவல், தங்களின் கடைசி முகம் கதைபோல, இருந்தபடியே இருக்கிறது. நல்ல இசையில், வாசிப்பில் லயிக்கும் போதும் இதை உணர முடியும். அவற்றில் மட்டுமல்ல, நாம் எதிர்கொள்ளும் பயங்கரத்திலும் அச்சத்திலும் கூட இதை உணரலாம் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் பாரதி,

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய்  நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

என்று ஏன் பாடவேண்டும்?

தங்களின் நீலம் மலர்ந்த நாட்கள் படித்த போது இதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசை எழுந்தது. தற்போது மழைப்பாடல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இனி வண்ணக்கடல் தாண்டித்தான் நீலத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். ஆனால் என் மனம் இப்போதே நீலத்தினுள் மூழ்கி நீலமாக நிறைய விழைகிறது.

அன்புடன்,
கேசவமணி.