Saturday, October 4, 2014

குருதிபடிந்த அடிகள்



ஜெ,

கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

ஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தபப்டுத்தி காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவவமை இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை மனசு ஏத்துக்கொள்ள மறுத்துவந்தது. ‘என்னோட க்ருஷ்ணன் வேற’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு விஷ்ணு அவதாரங்களிலே நரசிம்ம அவதாரம் அவ்வளவான பிடிக்காது. சின்னவயசு முதல். அதிலே உள்ள பயங்கரம் தான் காரணம். ஆரம்பம் முதலே எழுதிக்கொண்டுவந்து கடைசியிலே கிருஷ்ணனைக் கொண்டுபோய் நரசிம்மத்திலே சேர்த்துவிட்டீர்களா என்றெல்லாம் நினைத்தேன்

கிருஷ்ணசங்கீதத்தைக்கூட வேட்டைவரிப்புலியின் கால்களில் அமைந்த மென்மை என்று சொல்லிவிட்டீர்கள். சிம்மம் ரத்தம் சொட்ட நடப்பது மாதிரி என்று என்ற வரி 27 ஆவது அத்தியாயத்திலே வருகிறது. அந்த வரியையே வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் அவன் சபையிலே பேசும்போது மெய்சிலிர்த்துவிட்டது. அப்படித்தானே இருக்கமுடியும் என்ற நினைப்பு வந்துவிட்டது. அந்த அளவுக்கு நீதியிலே வஜ்ரம் மாதிரி இருக்கும் ஒருவனுடைய மனசுதான் பூவாக இருக்கமுடியும்

சான்றோர்கலைப்பற்றிச் சொல்லும்போதெல்லாம் வாக்கிலும் மனசிலும் வஜ்ரம் போன்றவர்கள் என்று சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது. பெரிய கருணை கொண்ட நீதிமானின் கையிலே உள்ள வாள் போல க்ரூரமான ஏதும் கிடையாது. ஏனென்றால் எது சரி என்று அவருக்குத்தெரியும். அதிலே compromise செய்யமாட்டார்.

நரசிம்மம்தான் கிருஷ்ணன் என்று புரிந்துகொள்ள இவ்வளவு இலக்கியம் தேவைப்படுகிறது. வேறுமாதிரி சொன்னால் என்னப்போன்ற emotional fools க்கு ஏறியிருககது. புராணமெல்லாம் எங்களுக்காகத்தான்


ரங்கநாதன்