Saturday, October 4, 2014

உலகாளும் பாதம்



ஜெ

குழந்தைக்கண்ணனை எத்தனை முறை வாசித்தாலும் தீரவில்லை. கைக்குழந்தையாக நீங்கள் கண்ணனை அறிமுகம் செய்த்து எவ்வளவு அற்புதமான விஷயம் என்பதை வாசிக்க வாசிக்கத்தான் உணர்ந்தேன். ஒரு சின்ன சந்தர்ப்பம் கூட விட்டுவிடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருந்திருக்கிறீர்கள். காலால் போர்வையை விலக்கி கண்ணன் உலகுக்கு அறிமுகமாகிறான். அவதாரம் அது. பாத தரிசனம்

அதன்பின் குழந்தையின் எல்லா பாவனைகளையும் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். பாதங்களைத்தான் ராதை முதலில் மீண்டும் பார்க்கிறாள்

ஓடும் கால்கள் என ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழே நகங்கள். தெச்சிப்பூங் கொத்தே விரல்கள். பாதங்களும் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவிந்து முகம் சுளித்து செல்லம் சிணுங்குமோ? கட்டைவிரல் விலகி உடல் நெளித்து நாணுமோ?

குழந்தையின் கால்களை இப்படி வர்ணித்து வாசித்த்தே இல்லை. சும்மா சொல்லப்பட்டிருக்கிறதா என்று பலமுறை வாசித்தேன். கண்ணன் ஒருக்களித்துப்படுத்திருக்கிறான். அப்போது ஓடுவது போலத்தான் இருக்கும். தெச்சிப்பூங்கொத்து போல விரல்கள் என்று வாசித்தபோது கண்கள் கலங்கிவிட்டேன். படலையாக அடுக்காகத்தான் அந்தபூ இருக்கும். சிவப்பாக. குழந்தைவிரலும் அப்படி ஒரு அடுக்காகத்தான் இருக்கும்

ஆனால் சிறிய நகங்கள் வரிசையாகத் தெரிவது பல்வரிசை போல ஒரு புன்னகை என்று சொன்ன இடமும் சரி , சின்னக்குழந்தை தூங்கும்போது கட்டைவிரல் கொஞ்சம் விலகி இருப்பதை அது உடல் நெளித்து நாணுகிறது என்று சொல்லியிருப்பதும் சரி கிளாஸ்

கரண்டையில் சிறுமடிப்பு என்பதெல்லாம் எவ்வளவு துல்லியம். கொஞ்சம் வளர்ந்தால்கூட கரண்டைக்காலில் முட்டு வந்துவிடும். சின்னப்பிள்ளைக்குத்தான் கரண்டையில் மடிப்பு இருக்கும்

இப்புவியாள இரு பாதங்களே போதுமே. ஏன் முழுதாக வந்தாய்? என்று ராதை கேட்பதைப்போலத்தான் நானும் நினைத்தேன். இன்றைக்கு இவ்வளவுபோதும் என்று மூடிவைத்துவிட்டேன். நினைப்பிலேயே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்

அகிலா