Thursday, October 2, 2014

அஷ்டபதியின் தொடர்ச்சி



அன்புள்ள ஜெமோ

நீலம் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் கிருஷ்ணன் ராதை என்ற கருத்து இந்தியாவில் எப்படி ஊறிப்போயிருக்கிறது என்ற எண்ணம் வந்தது. தமிழ் சினிமாப்பாட்டிலேயே எவ்வளவோ பாட்டுக்கள் கிருஷ்ணன் ராதைக் காதலைப்பற்றியவை. கதையாக ஒன்றுமே தெரியாவிட்டாலும் நாமெல்லாம் அவற்றைக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறோம்

சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை

கங்கைக்கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்

யமுனா நதி இங்கே ராதை மனம் இங்கே கண்ணன் போவதெங்கே?

கண்ணனை நினைக்காத நாளில்லையே

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

 கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

எவ்வளவோ பாட்டுக்கள். நினைக்க நினைக்க மனதில் எழுந்து வந்துகொண்டே இருந்தன. மலையாளத்திலும் இதேபோல நிறைய ராதை-கிருஷ்ணன் பாட்டுக்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் [முழுசாக தமிழ் மலையாள கண்ணன் பாட்டுக்களை யாராவது தொகுத்துத் தந்தால் நன்றாக இருக்கும். இந்த மனநிலைக்கு அது பெரிய வரம்]

நேற்று கொஞ்சநேரம் நீலம் வாசித்துவிட்டு யு டியூபில் கண்ணன் ராதை பாட்டுகளாக தேடிக்கேட்டுக்கொண்டிருந்தேன். எழுபதுகளிலே அற்புதமான பாட்டுக்களை போட்டிருக்கிறார்கள்

சினிமாப்பாட்டு இல்லையென்றாலும்

கோகுலத்தில் ஒருநாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்

என்ற பாட்டு அற்புதமானது

ஜெய்சங்கர்


அன்புள்ள ஜெய்சங்கர்

ஜெயதேவரின் அஷ்டபதிதான் இந்தியாவின் காதல்பாடல்களில் முதன்மையானது, தொடக்கம். காதலுக்குரிய எல்லாமே அமைந்த பாடல். அழகிய மொழி, இயற்கைவர்ணனை, உணர்ச்சிக்கொந்தளிப்புகள், அதற்குரிய ராகங்கள் .பின்னர் வந்தவர்கள் அந்தப்பாதையை பின் தொடர்கிறார்கள்

அஷ்டபதிப்பாடல்கள் சினிமாக்களில் வந்துள்ளன. எளிமையான வடிவில் அவற்றைக் கேட்கத் தொடங்கலாம். [ https://www.youtube.com/watch?v=jfxxQC7Oz40] இது மலையாளப்படத்தில் வந்த அஷ்டபதி. படம் கானம்

கச்சேரிகளில்- குறிப்பாக கர்நாடகசங்கீத பாடகர்கள் பாடும்போது- கேட்கவே கூடாது. அதன் உணர்ச்சிகரத்தை அழித்து சம்ஸ்கிருத வார்த்தைக்குவியலாக ஆக்கி உச்சரிப்பை மென்று துப்பி சங்கதிகள் போட்டு வித்தைகளைக் காட்டி நாசம் பண்ணிவிடுவார்கள்.