Thursday, October 2, 2014

நீலக்குழந்தை



அன்புள்ள ஜெ சார்

நீலத்தை நான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். அடுத்த நாவலை நீங்கள் எழுத ஆரம்பித்து அதிலே மூழ்கி மறைந்தாலொழிய இதிலே இருந்து கரையேற முடியாது

இன்றைக்கு கிருஷ்ணனைக் குளிப்பாட்டும் காட்சியை வாசித்து வாசித்து சொக்கிக்கொண்டெ இருந்தேன். கையிலே பிள்ளையை ஏந்தி குளிப்பாட்டிய நாளெல்லாம் மறந்தே போச்சு. குளிக்கும்போது பிள்ளைகளின் சரும்ம் அவ்வளவு மெருகோடு இருக்கும். புதிய காய்கறிகளைக் கழுவும்போது குழந்தைகளை குளிப்பாட்டிய ஞாபகம் வந்து உடம்பு சிலிர்க்கும் அனுபவம் எனக்கு வந்த்து உண்டு

இளவெந்நீரை அள்ளி விடுகையில் நீலத்தாமரையிதழில் நீர்மணிகள் உருண்டோடும். செம்மஞ்சள் பொடி தேய்க்கையில் நீலத்தில் பொன்வழியும்.

என்ற வரியை எத்தனை முறைதான் வாசிப்பது. நீல உடம்பிலே தண்ணீர் உருண்டு நிற்கிற அழகு. நீல மேனியிலே மஞ்சள்தூள் பொன் போல ஒழுகிப்போகிற அழகு

எவ்வளவு வர்ணனைகள். தீமாதிரி இருக்கிறான். தூங்கும்போது மட்டும்தன் பொட்டு போட முடியும். அவனுடைய தசைமடிப்புகளை விரித்து விரித்து ராதை துடைக்கிறாள்.கன்ன்ங்கரியவனுக்கு பொன்னிறத்தில் திருஷ்டிப் போட்டுவிடுகிறாள். கண் முன்னால் கண்ணனை காண்பதுமாதிரி இருக்கிறது. கையை நீட்டினால் எடுத்துவிடலாம் என்பது மாதிரி

மா என்று வானத்தை அம்மாவாகச் சுட்டிக்காட்டுகிறான். பா என்று ஆற்றலை அப்பாவாகச் சுட்டிக்காட்டுகிறான். கண்ணன் பேசக்கற்றுக்கொள்ளும் இடம் கவிதைமாதிரி இருந்தது. ஒவ்வொன்றிலும் இருக்கும் நுட்பத்தை எப்படி படித்து முடிப்பதென்றே தெரியவில்லை. அம்மா என்ற வார்த்தையாலேயே அச்சொல்லாலேயே பசியையும் மகிழ்ச்சியையும் துயிலையும் விழிப்பையும் வீட்டையும் சுட்டினான் என்ற வரியை நினைத்துக்கொண்டே இருந்தேன்

நீலம் ஒரு பெரிய கோயில் மாதிரி இருக்கிறது சிதம்பரம் கோயில் மாதிரி. பாத்துத்தீராது