Saturday, March 11, 2017

ஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)



        இரு மரங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே மரத்தில் இருந்து பெறப்பட்ட விதைகளில் தோன்றிய மரங்கள்கூட ஒன்று  போலிருப்பதில்லை.  மரங்களுக்கு வடிவத்தை நிர்ணயிப்பது யார் அல்லது எந்தக் கூறுகள்?   அந்த வடிவ வேற்றுமை அதன் வித்திலேயே இருந்ததா, விதை ஊன்றப்பட்ட  நிலத்தைச் சார்ந்ததா, அல்லது அதற்கு கிடைத்த  நீர் ஞாயிறொளி ஆகியவற்றின் காரணமா? அல்லது   அதன் சிறு கிளைகளை வளைத்தும்  ஒடித்தும் பயன்படுத்திய விலங்குகள் மனிதர்கள் போன்றவர்கள் செய்த செயல்களீன் விளைவா?  ஒரு வகையில் பார்த்தால் இவை அனைத்தும் மற்றும் இன்னும் நமக்கு தெரியாத பலகூறுகளும்  இருக்கலாம்.  
       

இவ்வாறே இரு மனிதர்கள் ஒன்று  போல் இருப்பதில்லை.   உடல் பாவனைகள், பேச்சு, ஒரே விஷயத்திற்கான எதிர்வினைகள், மற்றவர்மேல் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகியவை ஒருவருக்கொருவர் பெருத்த மாறுதலுடன் இருக்கின்றன. உடல் முகம் கூட ஒன்றாக இருக்கலாம்,  ஆனால் ஆளுமை ஒன்றாக இருப்பதில்லை. இப்படி ஒவ்வொருக்குமாக தனித்த அடையாளமாக விளங்கும் ஆளுமைகள் எப்படி உருவாகி  வளர்ந்து எழுகிறது என்பதை நாம் அறிவதில்லை. யார் ஒருவரையும் முழுதாக  வளர்ந்து  எழுந்து ஆளுமைகொள்வதை எவ்வித விருப்புவெறுப்பற்ற பார்வையால் கண்டதில்லை.    நம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப்போல அவர்களின் ஆளுமை வளர்ச்சி நமக்கு தெரிவதிலை. அவர்களின் மேல்கொண்ட  பற்று மற்றும் பாதுகாப்புணர்வு  காரணமாக அவர்களை சிறு குழந்தைகள் என்றே எப்போதும் கருதிவருகிறோம்.  ஒருநாள் நம் பிள்ளைகள் கொண்டிருக்கும் ஆளுமை  சட்டென்று நம் கண்களில் விழுகையில் நாமே வியந்து நிற்போம்.  எப்போது இவர்கள் இத்தகைய ஆளுமையை அடைந்தார்கள் என்று திகைத்துப்போவோம்.
     



  இன்று வெண்முரசு ஒரு ஆளுமை ஆகிவருவதை நம் கண்முன் காட்டுகிறது.  நகுஷனின் ஆளுமையை நம் கண்முன்பு நிறுத்துவதோடு அல்லாமல் அவன் ஆளுமை படிப்படியாக உருவாகிவரும்  சித்திரத்தையும் அளிக்கிறது.  அவன் அச்சமில்லாதவனாக சுயமாக முடிவெடுப்பவனாக, எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவனாக, எதையொன்றையும் விரைவில் கற்கும் கூர்மையான அறிவு கொண்டவனாக, பகைவர்களை இரக்கமில்லாது தண்டிப்பவனாக, அண்டியவர்களை காப்பாற்றுபவனாக, தலைமை ஏற்பதில் விருப்புகொண்டவனாக, தன் ஆற்றலை வெளிக்காட்ட தயங்காதவனாக ஒரு பெரு வீரனின்,  உறுதியான அரசனின்  ஆளுமையைக் கைக்கொண்டிருப்பதை குருநகரிவாசிகள் காண்கிறார்கள்.  ஆனால் குழந்தைப்பருவத்திலிருந்து அவன் வளர்ந்து வரும் நிலைகளை காணூம் நாம் அவன் அந்த ஆளுமையை அவன் எப்படிப்பெற்றான் என்பதை  யூகீக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.   
       

அவன் சிறு குழவிப் பருவத்திலிருந்தே குரங்குகளால் வளர்க்கப்படுகிறான். விலங்குகள் எப்போதும் அஞ்சுவதில்லை. அவை தன் சுய பாதுகாப்பின் பொருட்டு தப்பித்து ஓடும்,  ஒளிந்திருக்கும்.  ஆனால அவை அச்சம் வந்து அலறித் துடிப்பதில்லை, பயத்தில் உடல் நடுங்கி உளம் சோர்ந்து போவதில்லை. அத்தகைய விலங்குகளின் நடுவே வளரும் நகுஷன் அச்சமில்லாதவனாகத்தான் இருக்க  முடியும்.     சிறுவனாக இருக்கையில் அவன் கொண்டிருக்கும் தனிமை, யாருடைய ஆதரவையும் பெறுவதற்கான சூழல் இல்லாத நிலையில் இருப்பது போன்ற காரணங்களால், அவனை தானே முடிவெடுப்பவனாகவும், தன் முடிவில் உறுதியாக இருப்பவனாகவும் வளர்கிறான்.    வசிட்டர் என்ற  மாமுனிவர்,  சிறந்த ஆசிரியரின் கல்வி அவனின் திறன்களை, மதி நுட்பத்தை வளர்க்கிறது. அவன் சிறு குழந்தையாக இருக்கையில், தந்தையிடம் பிரிக்கப்பட்டு, எதிரிகளால் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பி, கானகத்தில் தனித்து வளர்ந்ததை  அறிந்துகொள்ளும் அவன் மனதில் எழுந்த பெருஞ்சீற்றமே பகைவர்களை மிகக் கடுமையாக தண்டிப்பவனாக ஆக்குகிறது.  தான் பேரரசன் மகன் என அறிவதே அவனை தலைவனென உணரவைக்கிறது. (அவன் ஆயுஸின் மகன் என சொல்லிவிட்டு இறந்துபோகும் நபர் நாடு கடத்தப்பட்ட மன்னன் புரூவரஸ் என்று நினைக்கிறேன்.) 


அதை நிலைநாட்டுவதற்காக தன் திறனை பலர் முன்னிலையில் அவன் வெளிப்படுத்தத் தயங்காதவனாக இருக்கிறான். மற்றபடி அவன் வனத்தில் வசிக்கும்   அதிமானுடப் பெண்ணிடம் மாளாக் காதல் கொள்வது அவன் உடலில் கலந்திருக்கும் புரூவரஸின் இரத்தத்தின் வழி வந்ததாக இருக்கலாம்.   இன்று வெண்முரசு நமக்கு இன்னொரு பெரும் ஆளுமையுடைய மாவீரன் பாத்திரத்தை  மிக நுட்பமாக செதுக்கி  அளிக்கிறது. 

தண்டபாணி துரைவேல்