விதையின் பழங்கால நினைவா எதிர்காலக் கனவா 
காடு? அடியும் முடியும் அறியாச் சுழலில் முன்பென்ன பின்பென்ன. கழற்சிக்காய்
 சுழற்சியாய் பெயர்கள் மட்டும் கலைந்தாடும் ஆட்டம் விரிகிறது மாமலராய்.
பீமனின்
 காலக்கோடுகள் கரைந்த பயணத்தில், அவனேயாகி வரும் புரூரவஸும், அவன் 
கனவுக்குள் காணும் பீமனும், இலக்குகள் அனைத்தையும் சென்றெய்தும் விழைவே 
உள்ளமென வாழும் நகுஷனும் அவன் கனவுள் எழும் பார்த்தனும், விண்மகள் 
மண்நிகழ்ந்து நிபந்தனைகளோடு குலம்புகுந்து ஏழு மைந்தரை ஈன்றபின்னர் 
துறந்தேகும் ஊர்வசியில் கங்கையையும், மைந்தர் பிரிந்து கானேகும் 
திரௌபதியையும், 
மைந்தன் மேல் பெரும் பற்று கொண்டு உய்பவனும் உழல்பவனுமாய் ஹிரண்யபாகுவில் 
ஆயுஸில் திருதராஷ்டிரனும் பாண்டுவும் என மீள மீள ஒரு பெருவலை விரிகிறது.
அவ்வலையில்
 இப்போது, அனைத்துத் தகுதிகளையும் ஈட்டிக் கொண்ட பின்னரும் மனம் நிறை 
கன்னியால்,   ஊழின் காரணத்தால் மறுதலிக்கப்படும் ஆண்மகனாய் ஹுண்டன் - அவள் 
ஒருத்தியின் பொருட்டு அவனை புரியும் போரில் தன் தலையைத் தானே பலிகொடுக்கும்
 நிரையில் சேரும்போது கர்ணனின் நினைவெழுகிறது.
இருமனைவியர்
 இருந்தும் இல்லாத நிலையும், கர்ணனின் தொடையேறிய பெண்மகவாய் ( தொடையில் 
பிறந்தவள்தானே ஊர்வசி) அவனுள் நிலைத்திருக்கும் திரௌபதியெனும் வலியும், 
பெண் நினைவால்
கல்லாகக் கணக்கும் ஹுண்டனின் கால்களை நினைவூட்ட அவர்களிடையே உள்ள நாக குல பந்தமும் கண்ணி இணைகிறது.  
ஹுண்டன்
 முதல் அரவான் வரை நாகர் குலத்தினர் உவந்தே தலைகொடுக்கிறார்கள் - தன்னுள் 
வாழும் தன்னை மீறிய பேருணர்ச்சிக்காக. //தலையை வெட்டி வைப்பதற்குரிய 
பலிபீடங்களைக் கண்டடைந்தவர்கள்// - ஆம் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள்.
நகுஷன் அருந்திய குருதி வாயிலாக குருநகரி நிரையில் சேர்கிறதோ நாகர்குல நஞ்சு!
மிக்க அன்புடன்,
சுபா

