Wednesday, March 15, 2017

வாசிப்பு

 

 
மதிப்பிற்குரிய அய்யா ,


இப்போது புரிந்துகொள்கிறேன். நான் குறியீடுகள் குறித்து சில முன்முடிவுகளோடு (templates) வாசிப்பை அணுகியிருக்கிறேன். அதையும் மாற்றி மறுஆய்வு செய்து சிந்திக்க முயல்கிறேன்.

ஒரு ஆசிரியனாக நீங்கள் திட்டவட்டமாக ஒரு பதிலை சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது என்ற பதில் எனக்கு புதிய கோணத்தை அளிக்கிறது.

என் கேள்விகள் என்னுடையவை - அது இந்த வாசிப்பின்மூலம் எனக்குள் எழுந்தவை.அதற்கான விடையை என்னுள் தேடவேண்டும். முன்முடிவுள்ள பதிலால் மூடக்கூடாது. கடினமாகத்தான் தோன்றுகிறது முயற்சிக்கிறேன். பிரச்னை என்னவென்றால் பதில்லில்லா கேள்விகள் ஒரு வித haunting effect ஐ  ஏற்படுத்திவிடுகிறது. அதனாலேயே மனம் ஏதோ ஒரு பதிலை இட்டு நிரப்ப முயல்கிறது போலும். அந்த இட்ட பதில்களை அகற்றிவிட்டால் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது . தொடர் சங்கிலி போல் எண்ணங்கள் நீண்டோக்கொண்டே போகிறது. இதே நினைத்தால் வேறு வேலைகள் ஓடுவதில்லை. இதைத்தான் அஞ்சினேன்னோ என்னவோ.

ஒருவேளை இலக்கியம் செய்ய விழைவதே இதைத்தானோ?

நான் தங்களிடம் கேட்டது அம்பையை பற்றி. அனால் நீங்கள் வாசிப்பை பற்றியே வேறொரு கோணத்தில் விளக்கிவிட்டிர்கள். இது வேறு கேள்விகளுக்கு இட்டு செல்கிறது.

இப்படி புரிந்துகொள்கிறேன். நாம் உண்ணும் உணவில் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து இத்தனை புரதம் , இத்தனை  கொழுப்பு, இத்தனை சர்க்கரை, இத்தனை கனிமங்கள் , வைட்டமின்கள் என்று அறிந்து உண்ணலாம். அதை அறியாமலும் உண்ணலாம். ஆனால் அதை நம் உடல் என்ன செய்யும் என்பதை - எதை ஏற்கும், எதை வெளியேற்றிவிடும் என்பதை அவர் அவர் உடலே முடிவு செயகிறது. ஒருவருக்கு பொருந்துவது இன்னொரு உடலுக்கு ஒவ்வாது. 

புல் ஒன்றுதான் - அதை பசு உண்டால் பாலாகிறது, எருது உண்டால் வலிமையாகிறது, குதிரை உண்டால் ஆற்றலாகிரது - வெறும் சானியாகவும் ஆகிவிடலாம். அது உடலை பொறுத்தது.

வாசிப்பு உணவைப்போல மனதை நிறைக்கிறது - அதை மனம் என்னவாக கொள்ளும் என்பது ஒவ்வொருவருக்கும் தனியானது. இலக்கிய வாசிப்பு ஒருவித செரிக்க கடினமான உணவு என தோன்றுகிறது. நீட்டின நேரம் செரிக்காமல் போக்கு காட்டுகிறது. ஆனால் அது செரித்து என்னவாக ஆகும் என்பது அவர் அவர் மனம் அடையும் முடிவோ? . பிறர் கூறலாகாது என்பது சரி. ஆனால் அது செறிக்க வேறு உள்ளீடுகளே இருக்க கூடாதோ? என்ன செய்தால் இதை கடப்பேன்?

கேள்விகளை கேள்விகளாகவே நிறுத்தி விட்டு முன்னே செல்லலாம்தான். புதிதாக தோன்றியதால் இது இப்போது எனக்கு முக்கியமானதாக தெரிகிறது. ஆறவிட்டால் அடங்கிவிடும். வாழகியின் அடிப்படையான பல கேல்விகளையே இப்படியே கடந்துவிடுவதில்லையா என்ன. அனைத்துக்கும் விடை கிடைத்துக்கொண்டா இருக்கிறது என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை கேள்விகளை விதைகள் என கருதி விட்டுவிட்டால் வாழ்க்கையின் வேறொரு தருணத்தில் பதில் முளைக்குமோ . இந்த எண்ணம் மட்டும் செயற்கையாக நான் உருவாக்கி கொள்வதாக தோன்றுகிறது. நான் உள்மனதில் இதை நம்பவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி எந்த பழைய கேள்விக்கும் விடை அறிந்ததாய் நினைவில்லை. என் சராசரி வாழ்வில் அனுபவம் குறைவுதான்.

ஒருவேளை இலக்கியத்தில் மேலும் படித்து சென்று ஏதேனும் அர்புதம் நிகழ்கிறதா என்று தேடலாம்.அனால் மேலும் மேலும் கேள்விகள் சேர்ந்தொகொண்டே சென்றால் என்ன ஆகும். நான் என்ன ஆவேன்?

ஒரு உதாரணத்துக்கு  தாய்மையின் அதிகாரம் பற்றி எழுந்த கேள்வி - என் தாயையும், மனைவியையும்  பற்றியும் எண்ண  நீள்கிறது. அனைத்துக்கும் இப்படி அணுக நேர்ந்தால் என்ன ஆகும் - தெரியவில்லை. 

38 அத்தியாயம் வசித்தே இந்த நிலை என்றால் இலக்கியங்களை தேடி தேடி வாசித்தால் என்ன ஆகும். யோகம் அனைவருக்கும் உரியது அல்ல என்பதுபோல் ஏதேனும் பயிரிச்சி செய்துவிட்டே உள்ளே வரவேண்டுமோ ?

கட்டுரைகள் வசிக்கும் போதோ, கடினமான கல்லூரி பாடங்களை பயின்ற போதோ. திரைப்படங்கள் பார்கும்போதோ, வார இதழ்கள் வசிக்கும்போதோ ஒருபோதும் இந்த அச்சம் அடைந்ததில்லை. நான் வாசிப்பதை நேசிப்பவனே. அனால் ஏன் அஞ்சுகிறேன்.

எழுத்து உங்களுக்கு ஒரு நிகர்வாழ்க்கை என்று நீங்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்த நினைவு. இலக்கிய வாசிப்பை பற்றியும் அவ்வாரே வேறொரு கட்டுரையில் விளக்கியிருந்ததாக நினைவு. நீங்கள் பல ஆயிரம் வாழ்க்கைகள் வாழித்திருப்பீர்கள் - உங்களுக்கு தெரியும் என்றே எண்ணுகிறேன்.

ஏதோ புத்திசாலித்தனமாக காட்டிக்கொண்டு  எழுதவேண்டும் என்று எழுதுவதாக நினைக்க வேண்டாம். நிஜமாகவே குழம்பிப்போகிறேன்.

தங்களை போன்ற ஆசிரியர்கள் - பள்ளி, கல்லூரிகளில் வாய்க்கவில்லையே என வருத்தம் வருகிறது.

பணிவுடன்,
கணேஷ் 
 
அன்புள்ள கணேஷ்

வாசிப்பின் ஆரம்பநிலைகளில் நாம் சரியாக வாசிக்கிறோமா போதுமான அளவு வாசிக்கிறோமா என்னும் ஐயம் எழும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக கடப்போம். வாசிப்பு அளிக்கும் அனுபவமே நமக்கு நம்பிக்கை அளிக்கும்

வாசிப்பில் நாம் செய்யவேண்டியது நமக்குத் தெரிந்ததை வைத்து வாசிப்பை மதிப்பிடாமலிருப்பதும், நமக்குத்தெரிந்ததை தேடுவதும்தான். வாசிப்பு என்பது ஒரு ‘தெரிந்துகொள்ளுதல்’ அல்ல. வாசிப்பு உணர்ந்துகொள்ளுதல். வாசிக்கும் படைப்பை கற்பனையால் விரித்தெடுங்கள். வாசிப்புபுடன் கற்பனையால் மோதுவது அவசியமானது. நீங்கள் செய்வது அதைத்தான். ஒரே வாசிப்பில், ஒரே சிந்தனையில் அனைத்தையும் சென்றடைய முடியாது. வாசிப்பு முதலில் நம்மை நிலைகுலையச் செய்கிறது. நாம் நம் அறிதல்களையும் ஊகங்களையும் கற்பனைகளையும் ஆழ்மனக்கனவுகளையும் குழப்பியடித்து யோசிக்கிறோம். அதுவே வாசிப்பு அளிக்கும் அகப்பயணம்

நீங்கள் அதில் இருக்கிறீர்கள். மிகச்சிறப்பாகவே வாசிக்கிறீர்கள்

ஜெ