Tuesday, March 7, 2017

மூதன்னையரின் அறம்







அன்பின் ஜெ,

ஒரு அமைச்சனின் கடமைகள் எவ்வளவு நுட்பமான சிக்கல்கள் கொண்டவை என இன்றைய அத்தியாயம் மூலம் உணர்ந்தேன். ஒரே சமயம் அரசனுக்கு கட்டுப்பட்டவனாகவும் அவனுக்கு அறிவுறுத்துபவனாகவும் இருக்க வேண்டும். ஒரே சமயம் குடிகள்முன் அரசனை விட்டுக் கொடுக்காதவனாகவும், குடிகளுக்கு அரசன் மீதிருக்கும் மனவிலக்கத்தை அவனுக்கு எடுத்துரைப்பவனாகவும் இருக்க வேண்டும். எத்தனை சிக்கலான ஆடல்!

முன்பு இதேபோன்று மூர்க்கமும் செவிகேளா உள்ளமும் கொண்ட அரசனுக்கு அறிவுறுத்தும் சவாலை எதிர்கொண்டு அலைந்த  அஸ்தினபுரியின் அமைச்சரை நினைத்துக் கொள்கிறேன். அன்று துரியனின் படைநகர்வை தடுக்கும் பொருட்டு செய்வதறியமால் நிலையழிந்திருந்தார் விதுரர். விதுரருக்கு யோசனை சொல்ல சுருதை வாய்த்தது போல இன்று பத்மருக்கு யோசனை கூறுகிறார் அவரின் முதுதந்தை. இரு அமைச்சர்களும் இறுதியில் அரசனை கட்டுப்படுத்தும் விசையாக கண்டறிவது மூதன்னைகளையே. அரசு நிர்வாகத்தில் அவர்களுக்கு சொல்லேதும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அரிதாக ஒலிப்பதாலேயே மூதன்னையரின் சொல் வலுமிக்கதாகிறது.

அன்னைக்கும் தந்தைக்குமென பொதுபுத்தியில் உறைந்துவிட்ட சித்திரம் ஒன்றுண்டு. அன்னைகள் பிள்ளைப் பித்துக் கொண்டவர்கள் என்றும் தந்தையரே மீறல்களை கண்டிப்பவர் என்றும். வெண்முரசின் உச்சக் கனங்கள் இவற்றை புரட்டிப் போடுகின்றன. இங்கு தந்தையர்கள் மைந்தர்களின் எல்லைமீறல்களின் ஏதோவொரு கனத்தில் தங்களை அடையாளம் காண்பவர்களாகவும் மூதன்னைகளே என்றுமிருக்கும் அறத்தின் தரப்பாக நிற்பதையும் காண்கிறோம்.

ஆம் மூதன்னையர்கள் ஒருபோதும் அறமீறல்களின் பக்கம் நிற்கலாகாது. ஏனெனில் மூதன்னையரின் அறமாக வந்து நிற்பது ஒட்டுமொத்த குடியின் அறம். அது பிழைக்கும் என்றால் அக்குடி அழியும்.

தே..பாரி