மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
முதற்கனல் முடித்து, மழைப்பாடல் 30 அத்தியாயம் வரை வாசித்து தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்.
இதிலே திரும்பத் திரும்ப எனக்கு தோன்றும் ஒரு வினா.
அகவயமான
புரிதலுக்கான வினாவல்ல. முழுக்க புறவயமான கேள்விதான். அதனால் உங்களுக்கு
பதிலிலக்கிக்க மனத்தடை ஏதும் இருக்காது என்று எண்ணுகிறேன்.
மஹாபாரத காலத்து மன்னர் சமூகங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செயகிறேன்.
கங்கைக்
கரை க்ஷத்ரியர்களில் குரு வம்சத்தவர் சந்திரவம்ச வழித்தோன்றல்கள் என்பது
சரி என கொள்கிறேன். இவர்கள் தூய க்ஷத்ரிய இனமாக கிட்டத்தட்ட ப்ரதீபர்
காலம்வரை இருந்திருக்கிறார்கள். ப்ரதீபர் சிவி நாட்டில் மணம் கொண்டு முதல்
குலக்கலப்பைத் தொடங்குகிறார். பின்னர் கங்கர் குலத்தவர்களுடனும், மச்ச
குலத்தவருடனும் மணஉறவு கொள்ளத்தொடங்கினார்கள். அடுத்த தலைமுறை அதை
காந்தரத்தோடும், யாதவரடும் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் பல சிறு
குடிகளும், புது மன்னர் குலங்களும் இன்னும் கொஞ்சம் அதிக அங்கீகாரம்
பெறுகின்றன. அஸ்தினாபுரம் இதன்மூலம் சில அரசியல், பொருளியல் ஆதாயங்களைப்
பெறுகின்றது. இது இன்றைய ஜாதி மறுப்பு மனங்களைப்போல கொஞ்சம் முற்போக்கான
நோக்காக இருந்தாலும், கொஞ்சம் இரு தரப்பிரருக்குமே நன்மை தரக்கூடியதாக
மாறுகிறது. இதுவரை குழப்பமில்லை.
அனால் காந்தார
தேசத்து மன்னர் குலம், அவர்களும் சந்திர வம்சத்தவரகள் எனவே வருகிறார்கள் .
தாய் வழியில் லாஷகரப் பழங்குடிகள் வழித்தோன்றல்களாக இருந்தாலும் , தந்தை
வழியில் யயாதியில் தொடங்கிப் பிரிந்து துர்வசுவின் குலத்தோன்றல்கள் என
சூதர்களால் பாடுபடுகிறார்கள். மறுபுறம் குந்திபோஜன் வம்சமும் (அல்லது
சூரசேனர் வம்சமும் ) - யாதவர் குலம் அதே சந்திரவம்சத்து யயாதியில் இருந்து
பிரிந்து யது வம்சத்தவர் என வருகிறார்கள். இவர்களுக்கும் தாய்வழியில்
பழங்குடி இன வம்சம் உண்டு. ஆனால் தந்தை வழியில் சந்திர வம்சத்தவரே. இது
இப்படி இருக்க - அஸ்தினாபுரத்து குரு வம்சம் - கந்தரத்தோடும் ,
யாதவர்களோடும் மணஉறவு கொள்கிறது. இவர்கள் சகோதர இனங்களல்லவா - இருவரும்
ஒரே தந்தை வழி வந்தவர்கள் இப்படி இருக்க - இந்த மண உறவுகள் எப்படி
ஏற்புடையவை ஆகின்றன ?
இஸ்லாமிய சமூகங்களிலும்,
கேரளா போன்ற சில இடங்களிலும் இத்தகைய மண உறவுகள் நிகழ்கின்றனதான். ஆனால்
அவை எல்லாம் முழுக்க முழுக்க தாய் வழி சமூகங்கள். சொத்துரிமையும்
பெரும்பாலும் தாய் வழி சார்ந்ததே. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மாண்மியம்
பற்றி தாங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் விளக்கியிருந்தீர்கள்.
ஆனால்
மஹாபாரத காலத்து ஆரியவர்ஷம் முழுக்க தந்தை வழி சமூகங்கள் போலவே
தோன்றுகிறார்கள். குலவரிசை பாடல்களும் தந்தை வழியையே முழுக்க சொல்கிறது
ஆண் வாரிசுகள் தந்தையிடம் இருந்தே அரசைப்பெறுகிறார்கள் யாதவ இனங்கள் தவிர
பிறவற்றில் பெரும்பாலும் முதல் மகனுக்கே தந்தையின் செல்வமும் அரசும்
செல்கிறது. பெண்கள் கண்ணிக்கொடையாகவே கொடுத்து விடப்படுகிறார்கள்.
பெண்கள் திருமணமானமான பின் தங்கள் குல அடையாளம், வாழ்க்கைத் தொடங்கி,
இறந்தபின் பெறும் நீர்க்கடன் வரை அனைத்திலும் கணவனின் குடியிலேயே
பெறுகிறார்கள். ஆக முழுக்க தந்தை வழி சமூகமே. இப்படி இருக்க எவ்வாறு சகோதர
சமூகங்கள் மனவுறவு கொள்ளுதல் அனுமதிக்கப்படுகிறது ?
இன்னொரு
எடுத்துக்காட்டு வசுதேவர், தேவகி - இருவரும் ஒரே யது குலத்தவர்
சொல்லப்போனால் கார்த்தவீர்யாஜனுக்குப் பின்னால் மிக மிக குறுகிய
காலத்துக்கு முன்னால் கிளைத்திருந்த தந்தை வழி குடும்பத்தினர். கம்சனுக்கு
தேவகி தங்கை என்றால், வாசுதேவருக்கு உகிரசேனர் பெரியப்பா என்றால் -
வாசுதேவருக்கும் தேவகி தங்கைதானே?
இந்த காந்தார,
யாதவ குலமெல்லாம் உண்மையிலேயே சந்திரவம்சத்தவர்தானா. இல்லை தற்காலத்தில்
நம்ம ஊர் அரசியல்வாதிகள், ஜாதிச்சாங்க தலைவர்கள் போல் மக்களைக் கவர்வதற்காக
சும்மா உதார் விடுகிறார்களா? - அப்படி எடுத்துக்கொண்டுதான் பீஷ்மர்
போன்றவர்கள் இந்த மண உறவுகளை தடையின்றி ஆதரித்தார்களா ?
வேறொரு கோணத்தில் தொடர்புடைய இன்னொரு கேள்வி .
ஒரு
அரசனுக்கு பல பெண் வாரிசுகள் இருந்தால் அவர்களை எல்லோரையும் ஒருவருக்கே
காட்டிக்கொடுக்கும் வழக்கம். காந்தார மன்னர் அதைச் செய்கிறார், காசி
மன்னரும் அதையே செயகிறார் - இதனால் சகோதர சண்டை தவிர்க்கப்படும் என நீங்கள்
ஓரிடத்தில் விளக்கியிருந்தீர்கள். இது கொஞ்சம் மாறுபாடான நிலைப்பாடாக
படுகிறது. இங்கே மட்டும் கொஞ்சம் தாய்வழிக்கு முக்கியத்துவம்
எட்டிப்பார்க்கிறது .
வேறொரு கோணத்தில்
பார்த்தல் - பீஷ்மரோ, விதுரரோ, காந்தார வம்சத்தவரோ, யாதவரோ யாதவருக்குள்
வசு போன்றவர்களோ ஏன் வியாசருமே கூட தாங்கள் தாய்வழி குலத்தினாலேயே சில
இடங்களில் இழிவுகளை சந்திக்க நேர்கிறது (பெரும்பாலும் இல்லை சில
இடங்களில்) - இது கொஞ்சம் மேலும் தாய்வழி முக்கியத்துவத்தைக் கூடுகிறது .
ஆனாலும் தந்தை வழி குலமே பெரிதும் பேசப்படுகிறது என்றே எண்ணுகிறேன். அப்படி இருக்க இந்த மண உறவுகள் எப்படித் தகும்?
உங்களிடம்
இதைக்கேட்கும் முன்னால் - உங்களுக்கு தொல்லை தரக்கூடாது என்று பல
இடங்களில் தேடிப்பார்த்துவிட்டேன் - இணையத்திலோ, (என் சிற்றறிவுக்கு
தெரிந்தவரையில்) வேறு பாரத நூல்களிலோ - இந்த கோணத்தில் எந்த விளக்கங்களும்
கிடைக்கவில்லை அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். நேரம் இருந்தால் மட்டும்
பதில் அளிக்கவும்.
பணிவுடன் ,
அன்புள்ள கணேஷ்
தொன்மையான இனக்குழு
அரசியலில் இருந்துதான் அரசகுலமரபுகள் உருவாகி வந்துள்ளன. அதன் உட்சிக்கல்கள் உண்மையிலேயே
வரலாற்றில் உள்ளவை. அவற்றை எளிதாக புரிந்து இறுதிமுடிவுகளுக்கு நாம் வர முடியாது. பல
வினாக்கள் ஆய்வாளர்களுக்கே விடை தெரியாதவை. நீங்களே மகாபாரதத்தைக்கொண்டும் வெளியே சென்றும்
ஆய்வுசெய்து கண்டுபிடிக்கவேண்டியவை
சில விதிகள் மகாபாரதத்த்தை
ஒட்டி உள்ளன என நான் நினைக்கிறேன்
அ. மகாபாரதத்தில்
குலம் என்பது தந்தை வழியாகவே வருகிறது. ரிஷிகுலங்களிலும் அரச குலங்களிலும் அன்னை என்பது
வெறும் கருவறைதான்
ஆ அசுர, அரக்க
குடிகளில் அன்னைமரபும் இணையாக முக்கியத்துவம் உள்ளது.
இ ஆனால் காலம்
கொஞ்சம் பின்னால் சென்றால் அன்னைமரபு இருந்திருக்கிறது. அது மேலும் முக்கியத்துவம்
அடைகிறது
ஈ. அன்னை வழியாக
குலம் அமைவதில்லை. ஆனால் அன்னை உயர்குடி அல்ல என்றால் அந்த அடையாளம் அல்லது குறைவு
இருந்துகொண்டே இருக்கிறது. அன்னையும் தந்தையும் ஷத்ரியர்களாக இருக்கும்போது இருக்கும்
மதிப்பு தந்தை மட்டும் ஷத்ரியராக இருக்கையில் இல்லை.
உ அத்தனை குலங்களும்
ஒற்றை அடிமரம் கொண்டவை. அதற்குள் அகமணம் நீடித்திருக்கிறது. இன்றுநாம் காணும் விலக்கு
அன்று இருக்கவில்லை.
ஊ குலத்தூய்மை
என்பதே இல்லை. அத்தனை குலங்களிலும் இனக்கலப்பு குலக்கலப்பு உண்டு
எ ஆனால் காலம்
செல்லச்செல்ல குலத்தூய்மை பேணுவதை ஒரு நெறியாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். குலத்தூய்மை
இல்லை என்பதனால்தான் குலம் பற்றிய கவலை அவ்வளவு முக்கியமாக உள்ளது
உ இப்படிச் சொல்லலாம்.
சாதி முறை வலுவாக இல்லாமலிருந்த காலத்தில் தொடங்கி வலுப்பெற ஆரம்பித்த காலம் வரை மகாபாரதம்
நிகழ்கிறது, ஆகவே உறவுகள் எல்லாமே பல அடுக்குகல் கொண்டவையாக உள்ளன
ஜெ