Friday, March 24, 2017

பால்

அன்புநிறை ஜெ,

நண்பர் ஒருவர் இந்தக் காணொளிகளைப் பகிர்ந்திருந்தார்.

https://youtu.be/Lippc7Rn9g0

காண்பதெல்லாம் நமக்கு வெண்முரசுதான். 
அன்னைப்புலி குழவிக்குப் பால்சுரந்த இன்றைய மாமலர் மனநிலையில் இது மிகவும் மனதைத் தொட்டது.

இந்தக் காணொளியிலிருப்பது அன்னையல்ல தந்தையென யாரோ பதிவிட்டிருந்தார். பார்த்ததும் மாமலரில் வரும் தந்தையர் நிரை கண்முன் மின்னி மறைந்தது. பெண் - சிறு குழந்தையென பாவைகளோடு விளையாடும் நாள் முதலே அன்னையர்தான். எனில் தந்தையர் தம் மகவோடு தானும் பிறக்கிறார்கள்.  பெருமரம் பூத்த சிறுமலர் என பெருவலிமை கொண்ட தோளில் மகவேந்தும் தந்தையர். மாமலர் நெடுக அன்னையர் மாமலர்களென விரிந்து அணிகோர்த்தாலும் தந்தையரே அதன் மணம் என நிறைந்து உறைகிறார்கள். 






புரூரவஸின் மறுஉயிர்ப்பில் தந்தையென தானும் மீள்பிறப்பெடுத்து அவனை சிறுமகவென ரசித்து மகிழும் ஹிரண்யபாகுவும்,  என்பிலதனை
வெயில்போலக்காயும் 
பிள்ளைத்துயர் நிழலெனத் தொடரும் ஆயுஸ், காட்டில் வன்விலங்குகளுக்கு இடையே விடப்பட்ட யாரோ ஒரு குழந்தைக்காக இறுதி மூச்சை இறுகப் பற்றிய ஒற்றனுள் வாழும் தந்தை, அமைச்சன் என்பவன் அறத்திற்காக தலைகொடுப்பதும் கடனே எனத் தன் மகனை அனுப்பி வைக்கும் தந்தை, சந்திரனை உவந்து தன்னை விலக்கியவள் எனினும் ஊராரின் உள்நகைப்பை உணர்ந்தும் மகவின் வரவிற்காக மகிழ்ந்து மருகும் பிரகஸ்பதி,
தன் மகள் சச்சியை இந்திராணியென அமர்த்தும்பொருட்டு விண்ணரசனை அறைகூவும் புலோமன், அசுரர் குடியை காலடியில் வைத்து தேவகுருவை விஞ்சும் வஞ்சத்தை மனதில் வைத்து, எரியென வந்தவளை மனதினில் கொண்டு, ஆனால் பெண்மகவைக் கையேந்தும் தருணம் பனித்துளியை சிதறாது ஒற்றியெடுக்கும் விரலென உடலேந்தும் சுக்ரர் என எத்தனை எத்தனை தந்தையர். இது தந்தையரின் மணம் பரப்பும் மாமலர்.
சௌகந்திக மாமலர் குறித்த முதல் உரையாடலைத் திரௌபதி தொடங்குவதே தனது தந்தை துருபதனின் நினைவுகளுடன்தானே.

இது மாமலர் தேடியலைந்த மாமல்லர் கதை. 

மணம் சொல்வதே மலர் என்றுணர்ந்து  ஒன்றே போல் தெரியும் ஒவ்வொரு மாமலராய் அணுகி மணம் உணர்ந்து விலக்கி கடக்கிறான் பீமன். பெண்ணுள் நிறைந்த மணம் உணரத் தன்னை உணரும் பெரும்பயணம். அன்னையர் மலர்ந்த வனத்தில் தந்தையர் மணம் கமழ்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா