Saturday, March 11, 2017

மாமலர் 34 - நடைபிணம்



மாமலர், சொல்வளர்காடு, வண்ணக்கடல் இந்நாவல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் கதைகளைக் கோர்த்த ஒரு மாலை. இந்த கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஒரு குறுநாவல் வடிவில் அமையத்தகுந்தவை. அவற்றில் சில அபாரமான சிறுகதைகளையும் அமைத்து விடுவது ஜெ வின் எழுத்து வன்மை.

மாமலர் 34 ல் அவ்வாறாக ஒரு சிறுகதை வந்துள்ளது. ஒரு பெயர் தரப்படாத ஓர் பாத்திரம். இருப்பினும் ஒரு முழு வாணாளை சுயவதையிலேயே கழித்த ஒரு பாத்திரம் பற்றிய கதையே அது. இள நகுஷனை காட்டில், ஒரு முதுபலாவின் பொந்துக்குள் வைத்துவிட்டு சென்ற அந்த பெயர் அறியா நாக ஒற்றனே அந்த பாத்திரம். அந்த செவிலி மேகலையின் கையில் இருந்து வாங்குகையில் “காட்டிலா? விலங்குகளுக்கு உணவாகவா?”, என துடித்துக் கேட்கும் அவன் சொற்களை அவன் ஆழ்மனம் அவன் வாழும் காலமெல்லாம் கேட்டே அவனை வதைத்திருக்கிறது. வாழ்ந்த காலமெல்லாம் அந்த இள மைந்தனை கொன்றுவிட்டோமோ என ஒரு கணமும், ‘இல்லை இல்லை இருக்காது, அவன் இந்திரனை வெல்பவன், எனவே இறந்திருக்க மாட்டான்’ என மறுகணமும் எண்ணி எண்ணி நெஞ்சுலைந்து, மொத்த நாளும் நடைபிணமாகவே வாழ்ந்தவன். இரு மைந்தர்களைப் பெற்றிருந்தாலும் நிறையாதவன். மைந்தர்களை உயிராய் வளர்த்திருந்தாலும், மனமெங்கும் நகுஷனையே எண்ணிக் கொண்டிருந்தவன். அந்த ஒரே எண்ணத்தால் மரணத்தையும் எய்த இயலாதவன். மரணம் தன்னைத் தேடி வராத போது தானே மரணத்தைத் தேடிச் செல்லலாம் என முடிவெடுத்து, எந்த முதுபலாவின் பொந்தில் இள நகுஷனை வைத்தானோ அதே முதுபலாவின் கீழ் தன்னை விட்டுவிடுமாறு மைந்தருக்கு ஆணையிட்டவன். வாணாலெல்லாம் நடைபிணமாக வாழ்ந்தவன் இறப்புக்காக இருக்கப்பிண்டமாகிறான்.

காவிய தண்டம்(Poetic Justice) என அலங்காரமாகச் சொல்லும் ஒரு நிகழ்வு இந்த சிறுகதையின் உச்சமாகிறது. அவன் நகுஷனைச் சந்தித்து நீங்கள் குருநகரியின் அரசன் ஆயுஸின் மைந்தன் நகுஷன் என அறிவிக்கும் இடம். அதன் பிறகு அவன் கொள்ளும் ஒரு பெருவிடுதலை. தன்னைப் பெற்ற குருதித் தந்தைக்கு இறுதி நீர்க்கடன் செலுத்தாத நகுஷன், தன் தந்தையை விடவும் வாணாள் எல்லாம் தன்னையே எண்ணியிருந்த, ஓர் உணர்வுத் தந்தைக்கு இறுதி நீர் அளிக்கும் அந்தத் தருணம் காவிய தண்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்த நீர் அப்போதே ஆயுஸிற்கும் அபூர்வமாகச் சென்று சேர்ந்திருக்கும் இல்லையா?! எண்ணுகையில் மிக உக்கிரமான ஒரு சிறுகதையாக விரிகிறது ஜெ. மாமலர் இத்தகைய மெல்லிதழ்களால் ஆன பெரு மலர். 

ன்புடன், அருணாச்சலம் மகராஜன்