Tuesday, March 14, 2017

வைர மலர் (மாமலர் -36)


        மலர்கள் மெல்லிய இதழ்களைக்கொண்டிருக்கின்றனகண்கவரும் வண்ணங்களை தன்னுள் நிறைத்துள்ளன. அவற்றின்   மென்மையை தொடுகையில் மட்டுமல்ல பார்க்கும்போதே நம்மால் உணர முடிகிறது. அவற்றிலிருந்து  கமழும் வாசனைகளுக்கு நிகரானவற்றை வேறு எங்கும் நம்மால்  காணமுடியாதுஆனால் அப்படி இருக்கும் மலர்கள் சூலுற்று காய்களாக மாறுகையில் இந்த நலன்கள் அனைத்தையும் இழக்கின்றன. அவற்றின் இதழ்கள் உதிர்ந்துவிடுகின்றன, வண்ணங்கள் மறைந்துபோகின்றன, மென்மையை இழந்துவிடுகின்றன வாசம் குறைந்து  அல்லது மாறிப்போகிறதுஅப்படி ஒரு மலர் முதிராமல் இருக்க முடியுமா?


அரசே, சில மலர்கள் பிஞ்சோ காயோ கனியோ ஆவதில்லை. அவை மானுடர் அறியமுடியாத நோக்கங்களுக்காக படைக்கப்பட்டவை. தொன்மையான  சூதர்பாடலான குஸுமாவளியில் காயாமலர்கள் என்று ஒரு பகுதி உண்டு. காயாகி கனியாகும்பொருட்டு பல்லாயிரம் மலர்களைப் படைத்த பிரம்மன் தன் கலைத்திறன் கண்டு மகிழ்ந்து தான்நோக்கி மகிழ்வதற்கென்றே படைத்தவை அவை என்று அது சொல்கிறது.”

   
குழந்தையின்  உடல்  காண்பவரில் கருணையை சுரக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதன் புன்னகை உலகில் மிகவும் தூய்மையானது. அதன் கள்ளமின்மை எவ்வித உயரிய ஆடியைவிடவும் மாசற்றது.     ஒரு குழந்தை வளர்கையில் தன் உடலில்அறிவில் மாறுதல்களை அடைகிறது.   வளர்கையில் ஒரு குழந்தை அதிக பலம் பெறுகிறது. விழிகள் கூர்மைகொள்கின்றன, கை கால்கள் திறன் அதிகரிக்கின்றன.   

அதே நேரத்தில் தன் உடலின்  மென்மையை, மழலை அழகைஇழக்கின்றன. அவற்றின் பேசுத்திறமை வளர்கையில் முன்னர் கேட்பவரைக்  கவர்ந்த குரலின்பம் இல்லாமல் போகிறதுஇவையெல்லாம்  உடலில் நிகழ்பவை. உள்ளத்தில் ஒரு குழந்தையாயிருக்கும் போது கொண்டிருந்ததனக்கிழைக்கபட்ட தவறுகளை மன்னிக்கும் தன்மை, வருத்தங்களை சட்டென்று மறந்துவிடும் போக்கு, எளிதில் நிறைவடையும் தன்மை, சீக்கிரம் மகிழ்ச்சிகொள்ளும் பாங்குகாண்பவை எல்லவற்றிலும் களிகொள்ளும் தன்மை என அனைத்தையும் படிப்படியாக இழந்துவிடுகிறது. குழந்தையில் உள்ளம் கொண்டிருந்த  இந்த மெல்லிய மணம் வீசம் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்துபோகின்றன.

வளர்கையில் உள்ளத்தில் சிறிது சிறிதாக ஏக்கங்கள், ஏமாற்றங்கள், அழுக்காறு போன்றவை அதிகரித்து தான் கொண்டிருந்த மென்மையைஅழகையெல்லாம் இழந்து விடுகின்றன. கள்ளமின்மையின் சுகந்தம் படிப்படியாக குறைந்துபோகிறதுஆம் ஒரு மலர் என இருந்த குழந்தை  முதிர்ந்து அதன் மெல்லிய இதழ்கள் எல்லாம் உதிர்ந்து, வண்ணங்கள் மறைந்து, பிஞ்சாகி காயாக மாற ஆரம்பித்து , புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என தன்னுள் சுவைகளை ஏற்றுக்கொள்கிறது. அது மலராக இருந்த சுவடே இல்லாமல் போகிறது.
  

ஆனால் அசோகசுந்தரி தன் இதழ்களை உதிர்த்துவிடாமல் இருக்கிறாள். குழந்தைமையின்  வண்ணங்களும் வாசமும் அவளிடத்தில் குன்றாமல் எப்போதும் இருக்கின்றது. அதை அவளைக்காணும் அனைவரும் உணர்கிறார்கள். அந்த மலர் வாடாமலர், அழியமுடியாத வைரத்தால்  ஆன மலர்தன்னிடம் முதிர்வைஏற்றுக்கொள்வதில்லை. அதன் காரணமாக களங்கம் எதையும் அது அடையவில்லை. கள்ளம் எதுவும் அதனுள் புகுவதில்லை.

  
அரசியை மாற்ற முடியுமென்று தோன்றவில்லை, அரசே. மலர்போன்ற மென்மை என எண்ணினோம். அணுகுகையில் வைரத்தில் செதுக்கப்பட்டது அம்மலர் என்று தோன்றுகிறது.

    அவள் தன்னிடம் குழந்தைமையை நிரந்தரமாக தக்க வைத்துக்கொண்டிருக்கிறாள். அவளால்  உள்ளத்தை மற்றவர் முன் முழுதுமாக திறந்து வைக்க முடிகிறது. இப்படி பளிங்கென மாறிய உள்ளம் கொண்டவளை யாரும் குழந்தையைக் காணும் கனிவுடனே காண முடிகிறது. அவள்  மேல் எவ்வித ஐயமும் அற்ற நம்பிக்கை கொள்ள முடிகிறது. அதன் காரணமாக அவள் மேல்  ஒரு குழந்தையிடமென பாசம் கொள்கின்றனர்
 
   
அவளின் அந்த பரிசுத்த நிலையை நகுஷனால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. பரிசுத்தமானவையில் மாறுதல்கள் இல்லை, கரவு இல்லை, அதன் காரணமாக அதில் சலிப்பு ஏற்படுகிறது. அது தன்போக்கில் சுதந்திரமாக இருக்கிறது, நம் விழைவுகளுக்கேற்ப வளைந்துகொடுப்பதில்லைமேலும் ஒன்றின் குறைவின்மையை நம் குறைவுகள் கொண்ட மனம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு நல் முத்தின்  முழுமை அழகை  துளைத்து அதை அணிகலன் என மாற்றிக்கொள்கிறோம். பயன்பாட்டுக்காக  தங்கத்தின் தூய்மையைக் குறைக்கிறோம்சுதந்திரத்துடன் துள்ளி யோடும் கன்றுக்குட்டிக்கு மூக்கில் துளையிட்டு கயிறு போட்டு அடிமையென இருக்க  பழக்கப்படுத்துகிறோம்.
  
வாடாமல்  முதிராமல்  வைர மலரென இருக்கும் அசோகசுந்தரியை நகுஷன்  கனிய வைக்கப்போகிறானா அல்லது  அம்முயற்சியில் அப்பளிங்கு மலரை உடைத்து தூளாக்கிவிடுவானா எனத் தெரியவில்லை.


தண்டபாணி துரைவேல்