Friday, March 10, 2017

ஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)


      
 
இப்படி ஒரு ஜென் கதை உண்டு.  குரு  சொல்கிறார், "எனக்கு ஒரு பிரச்சினை,  நேற்று என் கனவில் நான் ஒரு பட்டாம்பூச்சியாக பறந்துகொண்டிருந்தேன்.”  சீடனுக்கு வியப்பு இதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறான்.   குரு சொல்கிறார்  “என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா அல்லது ஒரு பட்டாம்பூச்சியின் கனவில் நான் இப்போது இருக்கிறேனா  
      
 
  நாம் வாழ்வது யாராவது  ஒருவரின் கனவில் என்று ஒருவர் கூறினால்  நம்மால் முற்றிலுமாக மறுக்க முடியுமா?   நாம் வாழ்வது இறந்தகாலத்தைச்  சார்ந்தவரின் கனவிலா அல்லது எதிர்காலத்தில் இருப்பவரின் கனவிலா?       வேறு வேறுகாலத்தில் வேறு வேறு மேடைகளில் ஒரே நாடகம் நடிக்கப்படுகிறதா?  வெவ்வேறு கதைகளை சமைத்துச் சமைத்துச்  சலித்துப்போன ஊழ்,  கால இடைவெளிகளில் ஒரே கதையை திரும்ப திரும்ப நடத்துகிறதா?  முன்னுக்கும் பின்னுக்குமாக ஊழ் ஊஞ்சலாடி விளையாடுகிறதா?  நேற்று தூங்கி இன்று எழுந்து அதே வாழ்க்கையை தொடர்வதைப்போல முன்பு வாழ்ந்து இறந்து,   மீண்டும் பிறந்து  வேறு  வேறு பெயர்களில வேறு வேறு காலங்களில் அதே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?
           
 
 மனிதர்கள் எண்ணற்று  இருந்தாலும் அவர்களுக்கு வரும் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட அளவு என்பதால், அதே பிரச்சினைகள், இழப்புகள், துயரங்கள்  மீண்டும் மீண்டும் நடக்கின்றன. பிரச்சினைகளை மட்டுமே வரலாறு குறித்து வைத்துக்கொள்வதால் வரலாறு திரும்புதல் ஒரு இயல்பான நிகழ்வு மட்டுமே. நம் சிறிய வாழ்வில், நாம்  மிகக் குறைந்த எண்ணிக்கையிலான  மனிதர்களையே சந்திப்பதால், இப்படி நிகழ்வது நம்மால் நம்ப முடியாமல் போகிறது.  நாம் வாழும் வாழ்க்கை யாரோ எப்போதோ , வாழ்ந்த ஒரு வாழ்க்கையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.
      
 
 புரூவரஸ் , ஆயுஸ், நகுஷன் என தொடரும் வரிசையில் பீமனை இணைத்து விளையாடுகிறது ஊழ். பிரிவுத் துயர் என்பது காதலியால் ஆனாலும், பிள்ளையால் ஆனாலும் ஒன்றுதான். இத்துயரில் முதன்முதலில் அடிபடும் ஒருவன் தன் வாழ்க்கையை அர்த்தமிழந்ததாகக் கருதி இறப்பை நோக்கி விழுகிறான்.  புரூவரஸ், ஆயுஸ் போன்றவர்களின் வாழ்வு  அனுபவங்களை  குஸ்மிதன்   பீமனுக்கு தந்து இனி அவன் வாழ்வில் வரப்போகும்  அதிர்வுகளை தாங்கி மீள்வதற்கான  பயிற்சிகளை  அளிக்கிறான் என்று கருதுகிறேன். 

தண்டபாணி துரைவேல்