Monday, March 6, 2017

ஊர்வசியின் புதிர் 5





ஜெ

ஊர்வசியின் கேள்விகள் நாவலை ஒரு மையத்தை நோக்கிக் கொண்டுசெல்கின்றன. இனி அந்த மையம்நோக்கித்தான் பேசவேண்டும். ஆனால் அந்த கேள்விகளை விரிவாக ஆக்கவேண்டும். ஆனால் அப்படி எளிதாக ஆக்கிக்கொள்ளவும் முடியவில்லை. நிறைய குழப்பங்கள் வந்தன. அவள் தேவகன்னியாக இருந்து மானுடனை ஆசைப்பட்டு வந்தாள். மானுட உடலைப்பார்த்துவிட்டு திரும்பிச்சென்றாள். அவள் மானுடனில் ஆசைப்பட்டது மானுட உடலை அல்ல. அந்த உடலைக் கண்டதும் அவன் மானுடன் மட்டும்தான் என நினைத்தாளா என நினைக்கிறேன்

மனிதர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சிகளைப்பற்றி தேவதூதன் இந்திரனிடம் சொல்லும் பட்டியல் முக்கியமானது. தற்காலிகத்தன்மையே மனிதனுக்கு மிகப்பெரிய இன்பங்களை அளிக்கிறது. அவனுக்குக் கற்றுக்கொள்ளும் இன்பம் உச்சகட்டமாக உள்ளது. ஆனால் அதுதான் அவனுக்கு அழிவையும் அளிக்கிறது. நோயும் இறப்பும் எல்லாம் அதுதானே இல்லையா? அதைத்தான் அவன் உடலில் ஊர்வசி காண்கிறாள். அவள் அடைந்த இன்பங்களின் மறுபக்கம் அது. அதைக்கண்டபின் அவள் அந்தக்கனவிலிருந்து மீட்சி பெற்று தேவலோகம் போய்விடுகிறாள். ஏனென்றால் அவளுக்கு நோயும் சாவும் இல்லை

சுவாமி