மாமலர் -34 இல் வரும் இவர் யார் என எனக்கொரு ஐயம்,
(“யார்?” என்றார் அவர். “என் பெயர் கானிகன்… இங்கே வசிட்டர்குருநிலையின் மாணவன்” என்றான் நகுஷன். அவருடைய பழுத்துச்சிவந்த விழிகள் அவனை நோக்கி தவித்தன. பின் நோக்கு நிலைக்க நிலம் வளைந்து அவரை மேலே உந்தியதுபோல உடல் எழுந்தது. கைகள் மேலெழுந்து அவன் கைகளை தொட்டன. “இளவரசே!” என்று காற்றென அவர் கூவினார். மூச்சும் சொல்லும் ஒன்றாக பீரிட்டுத் தெறித்தன. “நீங்கள் குருநகரியின் அரசர் ஆயுஸின் மைந்தர். உங்கள் பெயர் நகுஷன்.” எஞ்சிய ஆற்றலும் அழிய மெல்ல மண்ணில் படிந்து கைகள் தளர்ந்தன. இமைகள் எடைகொண்டு அழுந்தின. வாய் நிலைத்தது. மூச்சு எழவில்லை என்பதை சற்றுநேரம் கழித்து அவன் உணர்ந்தான்.)
ஏற்கனவே அர்ஜுனன் குறித்து இதுபோன்றதொரு ஐயத்தை நபர் மது நிவர்த்தி செய்தார், அப்போதே அவருக்கொரு நன்றி தெரிவிக்க இயலவில்லை.
இதுபோன்று கொல்லக் கொடுக்கப்படும் இளவரசன் தப்ப வைக்கப் படுவது ஒரு archetype அல்லவா, காலம் காலமாக இது நடந்து கொண்டிருக்கிறது,
இதே போன்ற கதைகள் அடர்ந்து பெருத்திருக்கிறது இருந்தும் பகை மன்னர்கள் ஏமாந்துகொண்டே தான் இருக்குகிறார்கள். இதற்கு உள்ளூர ஒரு குழந்தை கொல் குற்றவுணர்வு காரணமாக இருக்குமா ?
கிருஷ்ணன்