Tuesday, March 7, 2017

துயர்தேர்வுஅன்புள்ள ஜெ வணக்கம். 

“எடுத்துவரும் சட்டை எல்லாத்துக்கும் எதாவது  திருத்தம் சொல்றியே. இந்த தீபாவளிக்கு நீயே அப்பாக்கூட கடைக்கு போயி எடுத்துக்க என்று அம்மா சொன்னதும் துள்ளிக்குதித்து அப்பாவுடன் சென்று எடுத்து வந்த சட்டை பாப்பாவுக்கு அரைப்பாவாடையாகியது. வண்ணம் வடிவலங்காரமும் அப்படி.   அப்பாவின்  வார்த்தைகள் வெறும் ஒலிகள் அல்ல என்பது மீண்டும் அனுபவமாய் புரிந்தநாள்.  

நானே எடுத்த துணி என்பதால் அதை நூறு வகையழகில் தைத்து நூறு தடவை அணிந்து மகிழ்ந்து இருந்தேன். பாப்பாவின் அரைப்பாவடையாய் அந்த துணியைப்பார்த்தப்பின்பு அடைந்த மகிழ்ச்சி அறியாமை அறிவாய் மலர்ந்த மகிழ்ச்சி. அம்மா காப்பாத்திவி்ட்டார்கள். சட்டையாகி இருந்தால் எப்படி எல்லாம் இருக்கும் என்று நினைத்து ஒவ்வொரு நண்பன் முகத்தையும் காற்றில் எழுதி அவர்கள் நகைப்பின் முன்  கழட்டி மாட்டிக்கொண்டு இருந்தேன்.

ஒரே துணி சட்டையாகவும் பாவடையாகவும் மாறுகின்றது. வடிவமும் அர்த்தமும் மாறிவிடுகின்றது. ஆனால் துணி ஒன்றுதான். துணிப்போல் உயிர் ஒன்று ஆனால் ஆடைகள்கள்போல உடம்பு வேறு வேறு.

வேறு வேறு  உடம்பில் உயிர்கள் பெரும் அனுபவம் வேறுவேறாகத்தெரிகின்றது ஆனால் மூலம் ஒன்றுதான்.
புருருவஸ் ஆயுஸ் என்று இரண்டு உடல்கள் மனைவிக்காகவும் மைந்தனுக்காகவும் ஏங்குகின்றன. இரண்டு உடல்களும் பிரவின் துன்பநெருப்பில் எரிந்து அழிகின்றன. அழியும் இந்த இரு உடல்களின் வடிவங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றின் உயிர் ஒன்றாக இருப்பது பிரபஞ்சத்தின் மாறா உண்மை.

புருரவஸ் சியாமையை இழந்து துடித்து எரியும் கணத்தில் அவனுக்குள் வருங்காலத்தில் பீமனாக பிறக்கும் உயிரின் துடிப்பு தெரிகின்றது. ஆயுஸ் மகனை இழந்து பிரிவுத்துயரில் துடிக்கும்போது வருங்காலத்தில் குருகுலத்தின் பெண்கள் அரண்மனை அணங்குகளாகி தோன்றும் காட்சிகள் தெரிகின்றது.

ஆயுஸ் கூறுவதுபோல் குருகுலத்தின் அரண்மனைகளில் திருதராஸ்டிரன் கடைசி மனைவி அணங்காகி ஆயுஸ்போலவே சாளரம்நோக்கி அமர்ந்து இறந்தாள். விதுரரின் அன்னையும் அவ்வாறே சாளரம் நொக்கி அமர்ந்து இறந்தாள். விதுரரின் மனைவி இறந்த அன்று விதுரரும் அதே இடத்தில் அமர்ந்து ஆயுஸ்போல்   எரிந்து அழிந்து மீண்டார். உடல்கள்தான் வேறு வேறுகாலங்களில் வேறு வடிவங்களில் வந்து அதே உயிராக நின்று அனுபவம் பெற்றுச்செல்கிறது. உடல்கள் இன்பங்கள் பெரும்போது அவற்றுக்குள் உள்ள உயிரின் ஒற்றுமை எளிதில் தெரிவதில்லை ஆனால் உடல்கள் துன்பம்பெரும்போது அவற்றுக்குள் உள்ள உயிர் அனைத்தும் ஒன்று என்று எளிதில் புரிகின்றது.

மானிடர்கள் மீளாத்துன்பம் பெறும்போது “நான் படும் துன்பம் என் எதிரிக்கும்கூட வரக்கூடாது“ என்று எண்ணுகின்றான். ஆனால் இன்பம் பெறும்போது மானிடன் உன்னைவிட நான் பெரியவன் என்ற ஆணவத்தை அடைந்துவிடுகின்றான். ஆனால் பெரும்ஞானிகள் பெரும் இன்பம் பெறும்போது “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்“ என்கின்றார்கள்.

ஆயுஸ் தனது துயரின் கடைநிலையில் தனக்குள் ஆழத்தில் தனது தந்தை புருரவஸாகவே ஆகி தனது அமைச்சன் சுதர்மனை தனது தந்தையின் அமைச்சர் பத்மனாக நினைத்துபேசுவதன் மூலமாகக்காட்டி உடல்தான்வேறு உயிர் ஒன்று நிருபிக்கின்றார். மேலும் ஆயுஸ் தனது வருங்கால சந்ததிகளின் பலதலமுறைகளை தொட்டுத்தாண்டிச்சென்று தனது அரண்மனையின் சாளரங்கள் முழுவதும் இளம்கன்னியர், முதுபெண்டீர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னுடன் பேசினார்கள் என்கிறான். இதை எல்லாம் நாம் வெண்முரசில் பார்த்து வருகின்றோம்.   உடல் ஒரு வடிவத்தையும் எல்லையையும் காலத்தையும் அனுபவத்தையும் பெறுகின்றது ஆனால் உயிர் வடிவம்தாண்டி எல்லைத்தாண்டி காலத்தையும் தாண்டி தனது அனுபவத்தை பெற்றுக்கொண்டே இருக்கிறது.


அனுபவங்களின் சுவையும் வண்ணமும் வடிவமும் வேறுவேறாக இருந்தாலும் அனுபவத்தின் கனிவு ஒன்றாக இருப்பதில் அந்த உயிர் நிறைவை அடைகின்றது. உடலைக்காணும் மனிதன் அந்த உயிர்பெறும் அனுபவத்தில் படும்பாட்டைப்பார்த்து எத்தனைவிதமான மன அலைகளின் வீச்சில் விழுந்துப்புரள்கின்றான்.

மழை என்றும் பனி என்றும் கனிச்சாறு என்றும் குருதி என்றும் நாம் காணும் அனைத்தும் நீரென்று ஓடுகின்றது புவியில். 

மகாபாரதத்தின் மாந்தர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் புருரவஸ் அடைந்த துயரினை அடைந்துக்கொண்டே இருக்கிறார்கள் அதாவது புருரவஸ் அடைந்த உயிரின் அனுபவத்தை அடைந்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை வெண்முரசு மாமலர் அழகாக காட்டுகின்றது. 
ராமராஜன் மாணிக்கவேல்