மதிப்பிற்குரிய அய்யா ,
இன்றுதான்
கவனித்தேன் முதற்கனல் என்ற நூல் பெயரையே மழைப்பாடல் என குறிப்பிட்டு
எழுதியிருக்கிறேன். என்ன ஒரு வாசிப்பு - நானே சிரித்துக்கொள்கிறேன் . நீண்ட
தூரம் செல்லவேண்டியிருப்பதை உணருகிறேன். பொறுத்துகொண்டமைக்கு நன்றி.
என்
மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. அவன் ஐந்து மாதத்தில் முதல் திட உணவு உன்ன
தொடங்கிய நாட்களை நினைவு கூறுகிறேன். என் மனைவி அவனுக்கென சமைத்து
பருப்பும் சோறும் நெய் விட்டு பிசைந்து ஊட்டுவாள். அவன் அதை மெல்லவோ
விழுங்கவோ அறியாமல் வீடு முழுக்க துப்புவான். விடாமல் என் மனைவி ஊட்டுவாள்.
அப்படியே நானும் இப்போது இருப்பதாக உணர்கிறேன்.
நீங்கள் உணவும் சமைத்து அதை உண்ணவும் கற்றுக்கொடுக்கும் தாயக எனக்கு தெரிகிறீர்கள்.
என்ன
கைம்மாறு நான் செய்வேன் ? நான் உங்களுக்கு என்ன செய்துவிட முடியும்.
உங்கள் சோற்றுக்கணக்கு சிறுகதையில் வரும் கெத்தேல் சாகிப் போன்றவர்
நீங்கள்.
உங்களிடம் நெடுநாட்களாக சொல்லவேண்டும்
என்று இருந்தேன் - உங்கள் கீதை சூத்திர உரைகளை நீங்கள் பாதியில்
நிறுத்திக்கொண்டது ஏமாற்றமாக இருந்தது. தொடர்ந்தால் மிகவும் மகிழ்வேன்.
இல்லாவிட்டாலும்
வெண்முரசில் கீதை எப்படி இடம்பெறப்போகிறது, என்னவாக இருக்கும் என இப்போதே
ஆர்வம் தாளவில்லை. அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இடத்தோடு இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன் - உங்களை ரொம்பவும் தொல்லை படுத்தக்கூடாது.
கொஞ்சம் மேலும் படித்துவிட்டு பிறிதொரு நேரத்தில் தொடர்பு கொள்கிறேன்.
இப்போது லண்டனில் இருக்கிறேன். அடுத்தமாதம் இந்தியா திரும்பிவிடுவதாக திட்டம்.
பிரெக்ஸிட்
சமயத்தில் நீங்கள் பிரித்தன வந்தது தெரியாது. தெரிந்திருந்தால் சந்திக்க
முயன்றிருப்பேன். இந்தியா திரும்ப இருப்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாக
சந்திக்கும் வாய்ப்பு அமையலாம் என்று கருதுகிறேன். அதற்குள் என்
தகுதியையும் கொஞ்சம் வளர்த்துக்கொள்ள முயல்கிறேன்.
கணேஷ்