Wednesday, August 15, 2018

ம்ழைப்பாடல் 2




அன்புள்ள ஜெ ,

மழைப்பாடலில் சகுனி வரும் ஆரம்ப பகுதிகளில் இரு உள்கதைகள் வருகினறன  , ஒன்று நாகசூதன்  சகுனியிடம் சொல்லும் தங்களை தாங்களே  தின்று உயிர்வாழும் சூழல் இருக்கும் உளவியல் கதை , இன்னொன்று காந்தார நில வரலாறினை அறிந்து கொள்ள உதவும்    பாவகன் , பவமானன் உள்ளிட்டவர்கள்  வரும் புராண கதை .

வரலாற்றுப்புராண கதை வழியாக நிஜ வரலாறை அறிந்து கொள்ள முடிகிறது . மூன்று அக்னி  தெய்வங்கள் ,மூன்று காற்று தெய்வங்கள் என இந்த ஆறு தெய்வங்களும்  துர்வசு  வழியாக காந்தாரத்திற்குள் வந்தவை அல்லது   நுழைந்தவை , இந்த ஆறு தெய்வங்களின் மனைவிகளாக வரும் பெண் தெய்வங்கள் லாஷ்கரர் பழங்குடியினற்க்குரியவை , இந்த பெண் தெய்வங்கள்  அந்நிலத்திலேயே  ஆதியில்  இருந்து வரும் பழங்குடி தெய்வங்கள் , அதனால்தான் லாஷ்கரர்கள்  இந்த பெண் தெய்வங்களை மட்டும் வணங்குகின்றனர்  , இந்த பெண் தெய்வங்களுக்கு என தனியாகவே  மரத்தடியில்  பீடங்கள் தொல் காலம் தொட்டே  இருக்கின்றன .

பாவகன் , பவமானன் , சூசி  போன்ற அக்னி தெய்வங்கள் நிழல்  தரும் மரங்களான  ஸாமி ,பிலு ,களிர்  என மரங்களாக  மாறின என்பது மிக அழகிய எதிர்மாற்றம்  , அது போலவே காற்று தெய்வங்கள் நகர உதவும் விலங்குகளான  கழுதை, ஒட்டகம்  , குதிரையாக மாறின என்பதும் கவித்துவமானது  , அதுவும் சிலைகளில்  இவைகள் இறக்கை  கொண்டிருப்பது  இன்னும் அழகானது .

உருவகமாக ஆண் தெய்வங்கள் துர்வசுவை  சேர்ந்தவர்களாகவும்  , பெண் தெய்வங்கள் லாஷ்கரர்களை  சேர்ந்தவர்களாகவும் எண்ணினேன் , லாஷ்க்கரர்கள் அன்னை வழிபாட்டாளர்கள்  , இவர்கள் துர்வசு சார்ந்தவர்களை சேர்த்து கொண்டதைத்தான்  கோவிலில் பூமாதேவி  ஆறு  நிலமகள்களை வழங்கினாள் எனும் புராண கதை வழியாக சொல்லபடுகிறது என எண்ணினேன் .

மேலும் லாஷ்கரர் பழங்குடியினரின்  மிக தொல் கால பூஜை முறையினை  குறிப்புஉணர்த்தின  , நேரடியாக எந்த வழிபாட்டு  சொற்களும்  இல்லாத மிருகங்களின்  ஓசைகளை  கொண்டு நிகழ்கிறது  , மேலும் பூசைக்கான ஓசை  கருவியாக பறை  இருப்பதும் , மேலும் நேரடியாக இரத்தத்தில்  தொட்டெடுத்த  அப்பங்களை  பிரசாதங்களாக  கொடுக்கும் முறையும் தொல் கால பூசைமுறையினை  கண்முன்  கொண்டு வந்தன  .

துர்வசுவின்  வழியான தெய்வங்களும் , லாஷ்கரர்களின் தெய்வங்களும் இணைந்தாலும்  ஒன்றை ஒன்று அழிக்க வில்லை ,மாறாக இணைந்து கொள்கின்றன  , இந்திய கலாசாரத்தின் சிறப்பியல்பு  இது என எண்ணி கொண்டேன் .
....
பூத்து கிடக்கும்  தாலி பனையை   கண்டடையும் நிகழ்வும் அழகானது , அதுவும் அந்த பனையை முதலில் கண்ட பெண் சித்தமிழந்து  , நிலையழிந்து  நிற்கும் சில கணங்கள்  அழகானவை  , உண்மையில் சித்தமிழந்து , நிலையழிந்து என நம் மரபில் இருக்கும் சொற்களின்  அர்த்தம் அறிய உதவும் தருணங்கள் இது .
......

ராதாகிருஷ்ணன்