அன்புள்ள ஜெ,
மேகத்தைப் போல, புகைப்படலத்தைப் போல, இன்னெதென்று தெளிவாக விளக்கிவிட இயலாத அறிதல்களையும், உணர்வுகளையும் மொழியிலேற்றி விவரித்திடும் கூரிய பார்வைகள் வெண்முரசின் சிறப்பியல்புகளில் ஒன்று. இவை காலாதீதமானவையும் கூட. வெண்முரசு நடந்த யுகத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் செல்லுபடியாகக் கூடியவை. இவற்றை நீங்கள் மதி கூர்ந்து அமைப்பதில்லை என்பதும், அவை நாவலின் போக்கில் மிக இயல்பாக வந்து விழுபவை என்பதுமே அவற்றை வாசிக்கையில் வாசகரிடம் உணர்வெழுச்சியாக எழுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பார்வை இன்று திருதராஷ்டிரர் மற்றும் சஞ்சயன் உரையாடலில் வருகிறது.
சீனர்களும், நாமும் எங்கு ஒன்றுபடுகிறோம், எங்கு வேறுபடுகிறோம் என பலப் பொழுது எண்ணியதுண்டு. அவற்றைத் தொடர்ந்த ஒரு அறிதலை வந்தடைந்ததும் உண்டு. ஆயினும் அது மொழியில் வெளிப்படுகையிலேயே அதன் முழுப் பொருளும் அதை வந்தடையும். அது வாராமல் தேங்கிய அறிதல்கள் என்னிடம் பல உண்டு. அவற்றை கண்டடையும் வாசிப்பே மீண்டும் மீண்டும் இலக்கியங்களை வாசிக்கத் தூண்டுகிறது. நம் பாரதப் பண்பாடு ஆன்மீகமாக சென்றடைந்த ஒரு உச்சம், சீனப் பண்பாட்டிற்கும் உண்டு. ஆன்மீக உச்சங்களை அடைந்திராத எந்த ஒரு சமூகமும் காலங்களைக் கடந்து இன்று நம்முன் வந்து நிற்க இயலாது என்பது எனது கருத்து. ஒவ்வொரு பண்பாடும் அதனதன் வழியிலேயே அதன் உச்சத்தை அடைந்திருக்க இயலும். பிரமிடைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றுவது இது தான். அப்படி சீனாவின் பண்பாட்டின் பாதை என்ன எனப் பல நாள் யோசித்திருக்கிறேன். இதோ இன்று சஞ்சயன் ‘நம் முனிவர்கள் ஊழ்கத்தில் சென்று அடைந்த அனைத்தையும் கையிலும் கருத்திலும் தொட்டு அடையும் பொருள்வெளியில் அளைந்தே பீதர்களும் அடைந்திருக்கிறார்கள்’ என ஒரு வரியில் சொல்லிவிட்டான். இன்றளவிலும் நமக்கும் சீனர்களுக்குமான வேறுபாடு இது தான் இல்லையா? நாம் எண்ணிச் செய்யும் தொழில்களில் மேம்பட்டிருக்கையில் அவர்கள் உற்பத்தித் துறையில் சாதித்திருக்கிறார்கள். இன்றைய தினத்தை மிகவும் உற்சாகமாக்கிய வரி இது....
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்