அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71
அர்ஜுனனுக்கு நாகர்குலத்து அரசி உலூபியில் மைந்தனாகப் பிறந்த அரவான் போருக்கு தற்கொடையாக தனது உயிரை தருவதற்காக முன்வருகிறான் .ஏனென்றால் குருஷேத்ர யுத்தமுனையில் பேரறத்தான்யுதிஷ்டிரர் எதிரணியில் உள்ள பிதாமகர் பீஷ்மர் ,துரோணர் ,கிருபர் மற்றும் சல்லியரிடம் போரில் வெற்றிபெற ஆசி பெற்று மீள்கிறான்.இது பாண்டவப்படையினரின் மத்தியில் போர் நாடகம் தான் நடக்கிறது பாண்டவருக்கும் கௌரவருக்கும் இடையே சமாதானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சமாதான உடன்பாடு கைசாத்தப்படும் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிடுகிறது .அதன் விளைவுஉளசோர்வும் ஊக்கமின்மையும் பாண்டவசேனையை நோயென /பிணியென நிலைகுலைய செய்கிறது .
இதனிடையில் மற்றோரு போர்தந்திரமாக துரியோதனன் பாண்டவ சகாதேவனிடமே போர் தொடங்க நல்ல நாள் கேட்டு திரும்பி செல்கிறான் .இந்த செயலும்பாண்டவசேனைகளை போர் குறித்த ஐயங்களை அதிகரிக்க செய்கிறது நெய்விட்டு தீயை மேலும் வளர்ப்பதை போல .இத்தகையபோர்சூழலில் படைப்பிரிவுக்குள் விலைமகளிரை கொண்டுவந்த செயலும் இதை மேலும் உறுதிப்படுத்தியது . உடன்பிறந்த குருதியினர் கௌரவ மற்றும் பாண்டவர்கள் படைதிரட்டி தங்களின் செல்வாக்கை காட்டமட்டுமேகுருஷேத்ரம் வந்துள்ளனர் என பாண்டவ சேனையினர் எண்ண தொடங்கிவிட்டனர் .
இந்த ஐயங்களை /மதிமயக்கங்களை நீக்கி நாளைமறுநாளில் உண்மையான போரில் சேனையினரை அணிவகுத்து நிற்கச்செய்ய மிக மிக உறுதியான அரிதிலும் அரிதான செயல் நிகழ்த்திஅதன் மூலம் பாண்டவ சேனையினர் செயலூக்கம் பெற பாண்டவர்கள் ஐவரும் ,இளைய யாதவரும் முயற்சி செய்கின்றனர் .அதில் முடிவாகஎட்டப்பட்டதே அரச மைந்தர் ஒருவரின் தற்கொடை .
நூல் பதினெட்டு – செந்நா வேங்கை –
70 அசுரரும் நிஷாதரும் இங்கு சொன்னதேஷத்ரியர்களும் செய்வது. படைத்திரளில் அமைந்தோர் அனைவரும் உடனடியாக அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வு. அவர்களை நடுங்கச்செய்வது, கொந்தளிக்க வைப்பது. அதன் உட்பொருள் கிளர்ந்தெழுக என்னும் அறைகூவலாக இருக்கவேண்டும். இனி பின்னகர்தல் இல்லைஎன்னும் அறிவிப்பாக இருக்கவேண்டும். வெல்வோம் என்னும் நம்பிக்கையாக இருக்கவேண்டும். அத்தகைய ஒன்றை இயற்றுவதே ஒரேவழி” என்றார் துருபதர். ஆம் அந்த சூழலில் அர்ஜுனன் மைந்தன் அரவான் தானே தற்கொடையாக உயிர்ப்பலி கொடுக்க முன்வருகிறான்.இதனை அர்ஜுனன் கடுமையாக எதிர்க்கிறான்.அது அரவான் மீது அர்ஜுனன் கொண்ட மட்டற்ற பாசத்தை தான் வெளிப்படுத்தியது . ஏனென்றால் மைந்தனின் குருதிபலி முடிவு அவனை கடுந்துயர் கொள்ள செய்து விட்டது .
வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு– 58 யட்ச மூதாதை மணிபத்மர் “சொல்க, துயர்களில் பெரியது எது? என்று கேட்டார்.தருமன் “மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கி விடுகிறது” என்றார். தந்தையர் வாழ அவர் வளர்த்தமைந்தர் இறப்பில் தந்தையரை முந்துவது ஊழ் தரும் கொடும் தண்டனை . மஹாபாரத போரின் முடிவில் பாண்டவர்கள் அனைவரும்அடைவது அத்தகைய பெருந்துயரை தான் .ஆம் பாண்டவர்களின் மைந்தர்கள் கடோதகஜன் ,அபிமன்யூ, சுதசோமன்,சர்வதன் ,சுருதகீர்த்தி,யௌதேயன் ஆகிய அனைவருமே களப்பலியாவது தான் ஊழ் .அது மட்டுமல்ல கௌரவர் மைந்தர் உபகௌரவர்கள் ஆயிரவரும்,லட்சுமணன் ,துருமசேனன் என தொடங்கி நீண்ட நிரையில் களப்பலிகள் நிகழும் கொலைக்களமே குருஷேத்ரம் .ஆனால் இங்கு யுத்தம்நிகழ்வது அறத்தை நிலை நாட்ட என்ற ஒற்றை புள்ளியில் தான் .ஆனால் அந்த அறத்தை நிகழ்த்த விரும்புவோர் அதற்க்கு படையலாகசமர்ப்பிப்பது தங்களின் குருதி மைந்தரின் உயிரை தான் .
அறம் நிலைக்க விழைவு கொண்டு எழுந்த போரில் இளமைந்தர்அனைவருமே போரின் முடிவில் வீரமரணம் எய்துகின்றனர் . இந்த யுத்தமே இளைய யாதவர் நிகழ்த்தும் ஆடல் .இதில் மானிடரின் நல்லது /கெட்டது என்ற பகுப்பாய்வுகள் வீணான தருக்கங்கள் தான் .அந்த நம்பிக்கை தான் பாண்டவர்களை வழிநடத்தும் உச்ச விசை.இதோஅரவானின் குருதிப்பலியுடன் குருஷேத்ர யுத்தம் துவங்கவுள்ளது .
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்