Saturday, August 25, 2018

வெண்முரசைப் பின்தொடரும் ஒரு நிழலின் குரல்





வெண்முரசின் நேசர்கள் ஒன்று கூடி தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஈரோடு விழாவின் முன் என் எண்ணங்களையும் எழுத வேண்டும் என்றொரு ஆவல்.  சரியாக தொகுத்துக் கொண்ட, நுட்பமும் மையமும் கொண்ட கட்டுரை எழுத வல்லேன் அல்லேன், ஒரு காதல் கடிதம் என்று கருதிக் கொள்வேன்.  பல்லாயிரம் பேர் இலக்கியம் என்ற சொல்லைக் கேட்டு வியப்பும் ஆர்வமும் கொள்கின்றனர்.  ஆர்வம் கொள்வோரில் சில ஆயிரம் பேர் வாசிப்போர் ஆகின்றனர்.  வாசிப்போரில் பகுதியினரே உண்மையான இலக்கிய வாசகர் ஆகின்றனர்.  அவருள் சிலரே பேரன்பின் அருளின் கரத்தை அதன் வழியே உணரப்பெறுகின்றனர்.  ஜெமோ தளம் என்ற பெருவாசலின் உள்ளே தற்செயலாக நுழைந்து வியாசபகவானின் உலகை ஜெமோ என்ற தாந்த்ரீக முனி தவம் என இயற்றிக் கொண்டிருப்பது காணப்பெற்றேன்.  வெண்முரசுதான் எப்படி பெண்களைத் தொழுகிறது? தாந்த்ரீக முனி எனும் போது தஸ்தயேஸ்க்கிஸின் நினைவு.  அவரும் நம்மவர்தான் நன்மை-தீமை, கடவுள் சாத்தான் என்று இருமையில் இரண்டாகவும் நடித்து விடுபட்டு அருளின், மெய்மையின் அருகணைய ஒரு இலக்கியப் பாதையின் தொடக்கம் அங்குள்ளது.



அண்மையில் கோவை புத்தக கண்காட்சி சென்றிருந்தேன்.  தேவிபாரதி, சுனில் கிருஷ்ணன், செல்வேந்திரன் மேடையில் பேச பஜ்ஜி தின்பதற்காக காபி குடிக்க அங்கு இருக்கைகள் பிடித்துக்கொண்டவர்கள் இடையே நானும் ஒரு இருக்கை பிடித்துக்கொண்டேன்.  அதுசரி முழுநிலவில் மகிழ்ந்திருக்க எருமை மாடுகளை குறை சொல்வானேன்? மனிதரில் எத்தனை பேர் 'அய் முழு நிலா' என்று உவகை கொள்வோர்?.  இலக்கியத்தை பொறுத்தவரை ஒரு வாசகனாக என் பக்கா சுயநலமே எனக்கு முக்கியம், அதுவே என் அளவுகோல், இதை உலகியலாக சொல்லவில்லை.  என் சொந்த சிற்றறிவுடன், சிறுமைகளுடன், மிகவும் அளவுக்குட்பட்ட என் அனுபவங்ளுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பின் வழியாக, எழுத்து நிகர் வாழ்கை என்பதை, வாசிப்பு பொழுதுபோக்கு அல்ல வாழ்க்கையைப் புரிதல் என்பதை, நூறாயிரம் வாழ்க்கைகளில் பயணித்து மெய்மையின் வாசல் எட்டுவது என்பதை ஏற்கிறேன்.



செல்வேந்திரன் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து சாருநிவேதிதா அவர்களின் விமர்சனமாக (வெண்முரசு குறித்து -நான் சரியாக புரிந்து கொண்டேனா?) அது இலக்கியத்தை மதத்தின் கையில் கொடுப்பதாகும் -என்பதை அங்கு கேள்வியாக முன்வைத்தார்.  வெண்முரசு வாசிக்காமல் அதுபற்றி கொள்ளும் கருத்திற்கு, ஊகங்களுக்கு எந்த மதிப்பும் தரத் தேவை இல்லை.  ஆனால், உண்மையில் அது மதத்தின் கையில் இலக்கியத்தை அளிப்பது அல்ல, மாறாக மதத்தை இலக்கியம் தன் கையில் எடுத்துக்கொள்வது.  உண்மையில் மானுடர்க்கு பெரும் நன்மை பயப்பது அது.  ஒரு இலக்கியவாதி மதம் என்ற பேரில் உள்ள எல்லாவற்றையும் கையில் எடுப்பதும், மதம் என்று மட்டுமே ஆகிவிட்ட பழைய இலக்கியங்களை மீண்டும் எடுத்து மறுபடைப்பு செய்வது, மதத்திற்கும் கூட நன்மையே, அதில் அமைந்து விட்ட குறுகிய போக்குகளை, மதவெறியை நீக்குவதாக அது அமையும்.   



வால்மீகி ராமாயணம் படித்துவர சில பகுதிகள் - ராமரை ஏற்க முடியாமல், வைத்துவிட்டேன்.  ஆனால் யோகிராம்சுரத்குமாரின் ராமரை மறுக்கவே முடியாது.  காஞ்சான்காடு பப்பா சுவாமி ராமதாசின் ராமரை, பேரருள் பரம்பொருளை எவ்வாறு விலக்க முடியும்? அவர்கள் இருவரும் இலக்கியவாதிகள் அல்ல, இலக்கியவாதிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே இருக்கும் கொடுக்கல்-வாங்கல் பற்றி கருதுகிறேன்.  ஒரு பேரிலக்கியத்தில் இருந்து ஒரு கடவுளை எடுத்துக் கொண்டு கடவுளை அடைய முடிகிறது.  மெய்மையை, மெய்மையின் உற்றோரை உணர்ந்து கடவுளை மாற்றித்தர, உண்மையின் அருகில் நிறுத்த, மனித வாழ்க்கையின் நிஜங்களோடு அவரைப் பிணைக்க இலக்கியவாதியால் முடிகிறது.  இங்குள்ள மதம் இத்தனை ஆண்டுகளில் ஒப்பிட்டளவில் மிக குறைந்தபட்ச மதவெறியோடு இருக்க இலக்கியவாதிகளே காரணம் என்று துணிவேன்.  பைபிளின் ஏசுவை விட தல்ஸ்தோயின் ஏசு மிகப்பெரியவர்.  என்னிடம் உண்மையிலேயே ஏதேனும் மாற்றம் விளையும் எனில் அதை உண்டாக்கும் வல்லமை தல்ஸ்தோயின் ஏசுவிற்கே உண்டு.  ஒருவேளை வைணவத்தின் கண்ணன் எனக்கு அந்நியன் ஆகலாம், வெண்முரசின் இளையயாதவன் அவ்வாறு ஆக முடியாது.  மானுடம் என்று விரிந்து நிற்பவன் அவன்.



முன்னர் இளையயாதவன் வேதமுடிபுக் கொள்கையால் அதை சரடாகக் கொண்டு அனைத்தையும் இணைப்பவன், பெரும் மானிடநேயன், அதற்காகவே இப்போர் என்று கருதினேன், ஆனால் இப்போது என் எண்ணம் மாறிவிட்டது.  எழுதுபவர் யார்? எழுதுபவர் ஒரு இலுமினாட்டி மற்றும் ஊர்வன் (நன்றி: அந்தியூர் மணி), மேலும் நானோ சுயநலவாதி.  உண்மையில் இளையயாதவன் மானுடத்தின் மீது உச்சபட்ச கருணை கொண்டவன்தான், ஆனால் அவன் கருணை முன்பு நான் கருதியது போல் இல்லை.  எந்த மதம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? இவர்கள் இணைந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன? உலக பண்பாட்டு இணைப்பு, பல்லாயிரம் கோடி மாந்தர் என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.  உண்மையில் மிக சிறிய எண்ணிக்கையினருக்காகவே, அவர்களை கருதியே அவன் யாவும் செய்தான் என்று எண்ணுகிறேன்.  அத்தகைய சிலர் அவனுக்கு முன்னால் இருந்தனர், அவன் காலத்தில் இருந்தனர், எதிர்காலத்திலும் இருப்பார்கள்.  மேலும் அத்தகை சிலராக ஆகும் சாத்தியம் எல்லா மானிடருக்கும் உண்டு என்பதும் அவன் கருத்தில் உண்டு.  அதற்காகவே தான் போர், தனிமனித தேடலை, அதன் சுதந்திரத்தை என்றைக்குமாக காப்பதற்கான போர்.  ஒருவர் ஒரு கதவின் வழியாக மெய்மையை எட்ட, பின் அக்கதவினை மூடி, அக்கதவினை வழிபட்டு, இந்த ஒரே ஒரு கதவுதான் அங்கு திறக்கும் என்று அமையும் பிடிவாதத்தில் இருந்து தேடலின் முடிவிலா சாத்தியங்களை, எண்ணிறந்த கதவுகளைத் திறக்கும் வாய்ப்புகளை அவன் தக்க வைக்க, விரிவாக்க விரும்புகிறான்.  நீ பெற்றது நினக்கானது மட்டுமே என்று ஞானியர்க்கும் அவன் சொல்கிறான்.



எதிர்காலத்தில் வரும் மனிதனுக்கும், இது இன்னதென்று புரியாது தவிப்பவனுக்கு, இது தவிப்பு இது தேடல் என்று தகவல் அறியும் உரிமையை அவன் காக்க விழைகிறான்.  தேடலை ஏற்கனவே நிலவும் வழிகள் கொண்டு பயணித்து விடை காணும் எல்லா வழிகளையும் அவன் காக்க விழைகிறான்.  ஏற்கனவே அமைந்து விட்ட வழிகளை தவிர்த்து புதியவற்றின் சாத்தியங்களையும் அதற்கான வழிகளை உருவாக்கிக் கொள்ளும் அடிப்படை மனித உரிமையை காக்க விழைகிறான்.  பழையன கழியவும் புதியன புகவும், திருத்தவும் மாற்றி அமைக்கவும் எங்கும் பேரருளின் பாதைகள் என்று அதன் வழிகளை உய்த்துணரும் மானிட உணர் கொம்புகளை காக்க விழைகிறான்.



ஆமாம் இதெல்லாம் தேவையா? வேலை பார்த்தோமா தின்கிறோமா குழந்தை குடும்பம் என்று வாழ்ந்தோமா என்று போகவேண்டியதுதானே என்றால், அத்தகைய பெரும் எண்ணிக்கையினருக்கு எதிராகவே அத்தனை விஞ்ஞானிகளும் கலைஞர்களும் மெய்ஞானிகளும் போராடி உலகை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார்கள்.



விஷ்ணுபுர தளபதி சீனு சொன்னது போல, இந்த போர் எனது தான்.



ஈரோட்டின் பாசறைக்கு வெண்முரசு முழக்க பின்தொடரும் ஒளிர்நிழல்கள் அனைவரும் வருக!



அன்புடன்

விக்ரம்