Thursday, August 23, 2018

போரின் உக்கிரம்



அன்புள்ள ஜெ

போரின் உக்கிரம் மிகச்சிறிதாகச் சொல்லப்பட்டதனால் கனவில் மிகப்பெரிதாகிவிட்டது. மெல்ல மெல்ல போர் ஆரம்பித்தது. அதை பின் தொடர்ந்துசெல்லச் செல்ல அதன் வீச்சு மனதுக்குள் பெரிதாகிக்கொண்டே வந்தது. புழுக்கம் மழையாவது போல. ஒரே வீச்சில் போர் ஆரம்பித்துவிட்டது. போருக்கு முந்தைய நிகழ்ச்சிகளை எல்லாம் முன்னடியெ சொல்லிவிட்டீர்கள். தர்மர் ஆசி வாங்குவது உட்பட எல்லாமே முன்னரே வந்துவிட்டன. ஆகவே கதை பாய்ந்துசென்று போருக்குள் நுழைந்தது. முதலில் போரை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. பெரிய அலைக்கொந்தளிப்பு போலத் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்க வாசிக்கத்தான் கண்ணுக்குள் போர் தெளிவாகியபடி வந்தது. அதன்பின்னர் போருக்குள்ளேயே இருந்துகொண்டிருப்பதைப்போல ஓர் அனுபவமாக உணர்ந்தேன்.

நான் ஏற்கனவே வாசித்த போர்நாவல்கள் இரண்டு. போரும் அமைதியும். வெற்றிமுரசு [ஷோலக்கோவ்] இரண்டிலும் இருந்த போரை விட இதிலுள்ள போர் உக்கிரமானது. அவை போரைக்காட்டுவது உருவகமாக இல்லை. யதார்த்தமாகவே உள்ளது. இதில் அம்புகளும் தேர்களுமெல்லாம் உருவகங்களும் ஆகின்றன. ஆகவே ஒருவகையில் போர் யதார்த்தமாகக் கண்ணுக்குத்தெரிந்தாலும் இன்னொருவகையில்  கவித்துவமான ஒன்றாகவும் மனசுக்குள் மாறிக்கொண்டே இருக்கிறது

என் கைகள் வெறிகொண்டு அம்புகளை எய்கின்றன. என் உள்ளம் ஒவ்வொரு இலக்கை வெல்லும்போதும் கூச்சலிடுகிறது. என் சித்தம் அம்புகளையும் படைநகர்வுகளையும் எதிரியின் சூழ்கைகளையும் அங்கிருக்கும் ஒவ்வொரு படைவீரனின் எண்ணத்தையும் தொட்டு கணக்கிடுகிறது. இவற்றுக்கு அப்பால் நின்று காலமின்மையில் திளைத்து இத்தருணத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது பிறிதொன்று. ஒரு மனிதனுக்குள் குடிகொள்வது எத்தனை ஆழம்? பல்லாயிரம்பேர் திரண்டு ஓருடலென போர்புரியும் இப்படைப்பிரிவும்கூட ஓர் உடல்தானா? சிதறிப்பரந்த பெருமானுடன்! ஒன்றென்று குடிகொள்பவன்!

என்று விரிந்துசெல்லும் தனிமனித அக ஓட்டம்தான் இந்தப்போர்க்களத்தை ஏதோ ஒருவகையில் நாம் அனைவரும் அடையும் அனுபவமாக ஆக்குகிறது. நம் வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவமாகவே போரை உருமாற்றுகிறது

ஜனார்த்தனன்