Tuesday, August 14, 2018

ராவணன்




அன்புள்ள ஜெ.,

ஒரு முறை ஏதோ வாக்குவாதத்தில் கருணாநிதி பிராமணர்களை சாத்விக குணம் கொண்ட ராமனுக்கு ஒப்பிட்டு ஏதோ கிண்டலாகக் கூறியிருந்தார். அதற்கு சோ "ஐயோ பாவம், சாத்விகமாக இருந்தால்தான் பிராமணன் என்று நினைத்துவிட்டார். இங்கு இராவணன்தான் பிராமணன்" என்று அவர் பாணியில் ஏதோ கூறியிருந்தார். புராணங்களில் ஈடுபாடு உள்ள என் மாமனாரைக் கேட்ட போது ராவணன் பிரம்மாவின் பேரன் என்றும் பிராமணன்தான் என்றும் அவனைக் கொன்றதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரமாகவே   ராமன் ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்ததாகவும் கூறினார். இது சம்பந்தமாக வால்மீகி ராமாயணத்திலோ, கம்பராமாயணத்திலோ ஏதும் குறிப்புகள் உள்ளனவா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன் 


அன்புள்ள கிருஷ்ணன் 

ராவணன் வைஷ்ரவ ரிஷியின் மகன் என்பது புராணம். ஆகவே அவனை பிராமணனாகக் கொள்ளலாம் என்பது தென்னகத்து பிராமணர்களில் சிலரிடம உள்ள கதை. ஆனால் அவன் அசுர குடியில்பிறந்தவன். அசுர அன்னை கேசினியின் மகன். அசுரகுடி வழக்கப்படி அன்னையின் குலமே அவனுக்குரியது. பழைய மரபின்படி பிராமணர்களுக்கு வேறு குலங்களில் பிறக்கும் மகன்கள் பிராமணர்கள் அல்ல. அவர்களை அந்த தந்தையர் வேண்டுமென்றால் உபநயனம் செய்வித்து பிராமணர்களாக ஆக்கலாம். அவ்வாறு ராவணன் பிராமணன் ஆகவுமில்லை

ஜெ