Saturday, August 18, 2018

சித்திரம்



இனிய ஜெயம்

நேமிநாதர் வெள்ளை யானையில் புறப்பாடு கொள்ளும் போது அவர் சங்கூதி வழியனுப்பி வைக்கப்படும் சித்திரம் ஒன்று விரிவாக காண்டீபம் நாவலில் இடம்பெறும் . அது கிளர்த்திய கற்பனைகள் எத்தனை எத்தனையோ . ஏன் சுடுகாடு செல்லும் சடலத்துக்கு அது புறப்படும் முன் சங்கூதப் படுகிறது ?  அனைத்தயும் துறந்து துறவி ஆகி செல்கிறார் நேமிநாதர் . அவர் துறக்கும் அனைத்தும் ,அல்லது துறக்கப்படும் எதுவுமே உயிருக்கு நிகரானாதா ?  உயிருக்கு நிகரான அனைத்தயும் துறந்து நேமிநாதர் துறவுலகுக்குள் நுழைவது போன்றதே பார்த்தன் சமர்க்களத்துக்குள் நுழைவது .

 பார்த்தன் தனது  அனைத்து அறங்களையும் விடுத்து நீலனின் பொற்கழலடி மட்டுமே விடும் தடம் கண்டு ,தொடர்ந்து வழி தேற வேண்டிய களம் .

எனதே எனதான,வானம் வந்திறங்கிய  மொட்டை மாடி  பைத்திய உலகில் நேற்று இரவு கனவில் துல்லியமாக பாஞ்சஜன்யத்தின் சங்கநாதத்தை கேட்டேன் . [வெளியே ஏதேனும் நிழலசைவுக்கு வீதி முனை நாய் பெருங்குரலெடுத்திருக்க கூடும் என விடிந்ததும் எனக்கு நானே சொல்லி  எனது கால்களை இழுத்து நிலம் பதித்துக் கொண்டேன் ].

முதன் முறையாக கதகளி காணும்போதே அறிந்தேன் .கதகளி திரணோட்டத்தில் துவங்கி மங்கள வாழ்த்தில் முடியும் ஒன்றல்ல . வந்து அமரும் அந்த கலையின் நாயகம் முதன் முதலாக விரல் தொடும் அரிதாரத்தில் துவங்கி ,தலையில் கிரீடம் ஏறுவது வரை ஒவ்வொன்றுக்கும் கலை சார்ந்த வணக்க முறை இருக்கிறது . ஒரு கலை ஆர்வலனுக்கு  கதகளி அங்கிருந்தே துவங்கி விடும் .

நான் கண்ட கதகளி நிகழ்வு ஒன்றினில் ஒருவருக்கு முதன்முறையாக அரங்கேற்றம் .அவர் ஒவ்வொரு அலகையும் அரிதாரம் துவங்கி குரு வரை வணங்கி விட்டு அந்த கிரீடத்தை தனது சிரசில் சூடிய போது என்னை அறியாமைக்கு கண்கள் கரகர என நீர் வார்த்துக்கொண்டு இருந்தது .

அப்படி ஒரு சித்திரம்  பார்த்தன் காண்டீபத்தை  
வணங்கி ,ஏந்தி ,நாண் பூட்டி ,விரல் மீட்டி விம்மவிடும் சித்திரம் . வெண்முரசு நெடுக நிகழும்  பல உச்ச காட்சி சித்தரிப்பு  வழியே இன்னாருக்கு இதுதான் சித்தரிக்கப் பட்ட திலேயே ஆக சிறந்த சித்தரிப்பு என என் மனம் ஒரு பட்டியல் வரிசை போடும் .அதில் இதுவரை அர்ஜுனனுக்கான சித்தரிப்பில் சொல்வளர் காட்டில் புதிய வேதம் ஒன்று எழப்போகிறது எனும் உத்வேக குரலுக்கு தன்னியல்பாக அவனது கரம் காண்டீபத்துக்காக நீளும் சித்தரத்தை வைத்திருந்தேன் .அதை மிக மிக சிறிய சித்தரிப்பு என்றாக்கி விட்டது அர்ஜுனனுக்கான இந்த சித்தரிப்பு 

அர்ஜுனன் யுதிஷ்டிரரையும் பீமனையும் வணங்கிவிட்டு தேரை சுற்றிவந்தான். இளைய யாதவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு நின்றான். காண்டீபத்தை இரு வீரர்கள் எடுத்துவந்தார்கள். சூதர்கள் மங்கல இசைமுழக்க அவன் காண்டீபத்தை தொட்டு வணங்கி கையில் எடுத்தான். தேரின் படியைத் தொட்டு வணங்கியபின் மேலேறி பீடத்தில் நின்று இடக்கையில் காண்டீபத்தை பற்றி தனக்கிணையாக நிறுத்திக்கொண்டான். புரவிகளில் ஒன்று முன்காலால் நிலத்தை தட்டி கனைத்தது. அர்ஜுனன் வில்லில் நாண் பொருத்தி ஒரே இழுப்பில் பூட்டினான். முழவுகள் விசைகொண்டு துடிக்க மங்கல இசை விரைவுகொண்டது.//


கடலூர் சீனு