Sunday, August 26, 2018

மகாபாரதம் வாசிப்பு




அன்புள்ள ஜெ

ஒரு முக்கியமான கேள்வி. மகாபாரதத்தை பலவகையான புனைவுச்சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மகாபாரதம் ஒரு மதநூல். மூலநூல். அதை மோட்சத்துக்கான வழிகாட்டியாகக் கருதுவார்கள். அதை இப்படி மாற்றலாமா? அது ஞானத்தை திரிப்பது அல்லவா?

ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்,

இந்து மதப்பிரிவுகளில் சில வைணவர்களுக்கு மட்டுமே பாரதமும் பாகவதமும் பதினெட்டு புராணங்களும் மூலநூல்கள். அவர்கள் அதை ஒரு நம்பிக்கையாகக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவை ஞானத்தை உட்பொதிந்துள்ள கதைகள் மட்டுமே.

பிறருக்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவையே மூலநூல்கள். அத்வைதிகளுக்கு எவையுமே மாறாத மூலநூல்கள் அல்ல, அவை தொடக்கநூல்கள் மட்டுமே. பிற மதங்களில் உள்ள மூலநூல்வாதம் இந்துமதத்தில் இல்லை. ஆகவேதான் மூலநூல்களேகூட பலகோணங்களில் விளக்கப்பட்டுள்ளன.

வியாசமகாபாரதத்திலேயே ஏராளமான இடைச்செருகல்களும் பாடபேதங்களும் உள்ளன. அவற்றுக்கு வட்டார வேறுபாடுகள் மிகுதி. வில்லிப்புத்தூரார் உட்பட பலர் மகாபாரதத்தை விரிவாக்கி, மாற்றி எழுதியிருக்கிறார்கள். மூலநூல்களை அவ்வாறுசெய்ய மாட்டார்கள்.வேதங்களோ உபநிடதங்களோ அவ்வாறு செய்யப்பட்டதில்லை

புராணங்கள் மாற்றுருவாக்கம் செய்யப்படுவது ஆயிரமாண்டுகளாக இங்கே நிகழ்ந்துவருவது. அத்தனை புராணக்கதைகளுக்கு பல வடிவங்கள் இங்குள்ளன. அதன் நோக்கம் மாறும்சூழலில் மீண்டும் மீண்டும் மெய்மையைச் சொல்லிப்பார்ப்பது மட்டுமே. மகாபாரதத்தினூடாக நம்மைக் கண்டடைவது மட்டுமே.

நீங்கள் ஆசாரமானவர் என்றால் உங்கள் ஆசாரம் மூலநூல் மேல் பக்தியை வலியுறுத்துகிறது என்றால், நீங்கள் கறாராக அந்தவழியை பின்பற்றி ஒழுகுபவர் என்றால், எந்த மகாபாரத மறு உருவாக்கத்தையும் படிக்கவேண்டியதில்லை. மூலநூலை வழிபடுங்கள். இல்லை என்றால் மகாபாரதத்தை அனைத்துக்கோணங்களிலும் அறிய முயல்க. மகாபாரதக் கதைகளை படிமங்களாக்கி வாழ்க்கையையும் மெய்மையையும் சென்றடைய முயல்க


ஜெ