Tuesday, August 28, 2018

வெண்முரசு சிறப்புக் கூடுகை



அன்புநிறை ஜெ,

நேற்று காலை முதல்  வெண்முரசு சிறப்புக் கூடுகையை எண்ணி மனம் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. விரிவான செறிவான கலந்துரையாடல்களுடன் நாளொன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும். இடையறாது மனவெளி அலைவரிசைகளில் இருந்து கொண்டிருக்கிறேன். 


நித்தம் நிகழ்வதெனினும் புலரியும் அந்தியும் முன் போல ஒரு போதும் இருப்பதில்லை, வெண்முரசைப் போலவே.  வெண்முரசும் ஒரு மலரையேனும் புதிதாக இதழ் விரியச் செய்யாத நாட்களேதுமில்லை. 

ஒரு நாவலுக்கும் மறுநாவலுக்குமான இடைவெளிகளில் எல்லாம் வரும் மனச்சோர்விலிருந்து மீள மீள்வாசிப்பு. போர் தொடங்கிவிட்ட இன்றைய நிலையில் நண்பர்களுக்காக வெய்யோனிலிருந்து பழைய அத்தியாயங்களை வாசிக்கும் போது, இளைய கௌரவர்கள் புதுவெள்ளென நுரைத்துப் பெருகும் காலகட்டமும், கௌரவர்கள் பீமன் மீது காட்டும் அன்பும், ஏற்படுத்தும் மனத்தவிப்பு வாசிக்கும் போதே பெருமூச்சுகளாய் வருகிறது. 

மகாபாரதம் எனும் பெருந்திரையில் நான்கரை வருடங்களுக்கு மேலாக உருவாகி வந்திருக்கும் சித்திரம் ஒட்டுமொத்தமாக நோக்க ஏற்படுத்தும் மனக்கிளர்ச்சி மிகப் பெரியது. அடிமுடி அறிவிழி இலையெனும் பெருந்திருவின் பேருருத் தோற்றம். 

எழுதியெழுதித் தாங்கள் கண்டடைந்தது எத்தனையோ. எனில் முதற்கனல் தொடங்கி செந்நாவேங்கை வரை பலநூறு மாந்தரில் பல்லாயிரம் நிகழ்வுகளில் எனை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன்.  இது என் கதை அல்லவா,  இது என் அகம் மட்டுமே அறிந்த, யாருக்கும் பகிர்ந்திராத ரகசிய மயிலிறகல்லவா, இது நானே காண விரும்பாத ஆழத்திருள் அல்லவா, நானே உணர்ந்திராத நானல்லவா என பதைக்கவும் திகைக்கவும் மகிழவும் நெகிழவும் வைத்த, எத்தனையோ தருணங்கள். அது கிளர்த்திய தேடல்கள், திசைமாற்றங்கள்.  காண்பவரைப் பொருத்துக் காட்சியை வரையும் ஆடிகளில் தெரிவது நொடிதோறும் மாறும் மானுட தருணங்கள், எனினும் ஆடி சலனிப்பதில்லை. 


அம்பையிலிருந்து உத்தரன் வரை ஒரு அருமணி மாலையின் ஓராயிரம் ஒளிச்சிதறல்களில் இருந்து என் வரைபடத்தைத் தீட்டிக்கொள்ள முடிகிறது.  வாசிக்கும் ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுகொள்வதற்காக அவர்களது வாழ்வு இதில் பொதிந்திருக்கிறது. 

யாவர்க்குமாம் இதுதரும் சிறு புன்னகை, யாவர்க்குமாம் ஒரு துளிக்கண்ணீர்த்துளி,  யாவர்க்குமாம் தேடலின் மறுகரை.  மண்ணில் தோன்றிய ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உலகையும் உள்ளடக்கியதால் இது பிரபஞ்சங்களை உள்ளடக்கிய விதை. 'ஜெய' முதல் ஜெயமோகன்  வரை தொடரும் அறுபடா தவமணிமாலை. இந்நிலம் கண்டடைந்த மாபெரும் ஞானத்தை  முதல் வித்தென விதைத்த முதலாசிரியனுக்கும், பல மொழிகளில் கவிதைகளென, பாடல்களென, பல நாட்டார் கதைகளென  இம்மண்ணில் கங்கை பரப்பிய வித்தென முளைத்தெழச் செய்த பெருமரபுக்கும், மண்ணுக்கு அடியில் வேர்களால் பிணைக்கப்பட்ட  இப்பெருவனத்தின் வழி இன்றெமை அழைத்துச் செல்லும் ஆசிரியருக்கும் பாதம் பணிந்து வணக்கங்களையும், விழிநீரென வழியும் உள்ளன்பையும் சமர்ப்பிக்கிறேன்.

மிக்க அன்புடன்,
சுபா