Sunday, August 26, 2018

போர் அன்றும் இன்றும்- ஷாகுல் ஹமீது


வணக்கம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

வரவிருக்கும் வெண்முரசு சிறப்பு விவாதக்கூட்டத்திற்காக  கட்டுரை ஒன்று எழுதி ஈரோடு கிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பினேன் .அது உங்கள் பார்வைக்கு .

ஷாகுல் ஹமீது.

வணக்கம் இத்துடன் நான் வெண்முரசு சிறப்பு அமர்விற்க்கான கட்டுரை இணைத்துள்ளேன்.சிறப்பு அமர்வில் என்னை நன்கறிந்த நீங்களோ ,தாமரை கண்ணன் ,பாரி அல்லது மூத்த சகோதரி லோகமாதேவி  இதை வாசித்தால் சிறப்பாக இருக்கும் .

இந்த வெண்முரசு சிறப்பு விவாத அரங்கில் இருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தை மகிழ்வுடன் கூறி கொள்கிறேன் .

  செந்நா வேங்கையில் வரும் படை நகர்வும் ,நான்  ஈராக் போர்முனையில் நேரில் கண்ட நவீன படைநகர்வு ,போரை ஒப்பிட்டு கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

செந்நா வேங்கை பகுதி ஐம்பத்தினான்கில்

//  “படைநகர்வு துவங்கிய பின்னர் போர் முடிவதுவரை வீர்ர்களுக்கு நீராட உரிமையில்லை”//

  நவீன படை நகர்விலும் வீரர்கள் நீராட இயலாது,வீரர்களுக்கு (wet tissue)பைகளில் அடைத்த ஈரமான துடைக்கும் தாள்கள் கொடுக்கப்படும் .இரு கைகளுக்கும் இரண்டு,கழுத்துமுதல் இடை வரை உடலின் முன்,பின் பகுதிக்கு இரண்டு,இடைக்குகீழுள்ள பகுதிக்கு ஒன்று ,இரண்டு கால்களுக்கும் இரண்டு,முகத்திற்கு ஒன்று என எட்டு தடிமனான தாள்கள் அடங்கிய பை ஒன்றில் வீரர் ஒருநாள் ஒருமுறை நீராட வேண்டும் .

 அவர்கள் தங்களுக்கென பாதுகாப்பான இடத்தை உருவாக்கி தற்காலிக முகாம்களை அமைத்தபின் கூடாரங்களில் ,அல்லது பாடி வீடுகளை போன்ற அமைப்பில் குளியலறைகள் அமைத்தபின் தண்ணீர் இருப்பதை பொறுத்து வீரர்கள் நீராட அனுமதிக்கபடுவர் .


 செந்நா வேங்கை’ – 59  இல்

//“ பின்னர் ஆடைகளைக் களைந்து புழுதி போக உதறி காற்றில் ஆறவிட்டு மாற்றாடைகளை அணிந்துகொண்டனர். பெரும்பாலும் இடை மட்டும் மறைக்கும் சிற்றாடை அது.”//

  நான் பாக்தாத் அருகில் பக்குபா எனும் முகாமில் தங்கியிருந்த போது பனிரெண்டு நாட்கள் முகாமிலிருந்த யாரும் நீராடவில்லை.ராணுவத்தால் முகாமுக்கு வெளியே சென்று நீர் கொண்டுவர இயலவில்லை ,முகாமுக்கு வெளியே கடும் தாக்குதல் நடந்து கொண்டிருந்த நேரமது .

    அந்த நாட்களில் நானும் இடை மட்டும் மறைக்கும் சிற்றாடை தான் அணிந்திருந்தேன் .(எங்களூரில் நிக்கர் என்போம்).

செந்நா வேங்கை பகுதி ஐம்பத்தைந்தில் .

// படைகள் காலையில் கிளம்பிய பின்னர் அந்திவரை எதன் பொருட்டும் நிறுத்தப்படுவதில்லை” என்றான் ஸ்வேதன்.//

  ஈராக்கை ,அமெரிக்கா முழுமையாக தன்வசப்படுத்தியபின் தான் நாங்கள் குவைத்திலிருந்து ஈராக்கிற்குள் சென்றோம் .அதுவும் படை நகர்வே.
 தினமும் காலையில் குவைத்திலிருந்து convoy எனப்படும் பாதுகாப்பு  வாகன தொடரணி செல்லும்.அதிகாலையில் உணவுப்
பொருட்கள்,துணிகள்,தளவாடங்கள்,பாடி வீடுகள்,கூடாரங்கள் அமைக்க தேவையான பொருட்கள்,மருந்துவகைகள் மற்றும் இன்னபிற  வாகனங்கள் ஒழுங்கான வரிசையில், நிறுத்தப்படவேண்டும் குவைத் –ஈராக் எல்லை பகுதியில். அடுமனை பணியாளர்கள்,ஏவலர்கள் பயணியர் வாகனமாக கருதப்படும்.நான் அடுமனை பணியாளனாக சென்றேன் .
 
பாதுகாப்பு வாகன தொடரணியின் தலைவனுடன் வரும் ஒரு குழு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஒப்புதல் வழங்கும் வாகனங்கள் மட்டுமே பாதுக்காப்பு வாகன தொடரணியில் இணைய முடியும்.பயணத்தில் செய்ய கூடாதவைகள் பற்றி ஒவொருவருக்கும் விளக்கப்படும் .
 பின்னர் ராணுவ வீர்ர்களின் ஜீப்புகள்,பீரங்கிகளை ஏற்றிய இருபது சகடங்கள் கொண்ட நீளமான லாரிகள்,பத்து சகடங்கள் கொண்ட ராணுவ வீரர்கள் பயணிக்கும் லாரிகள் என இணைந்து கொள்ளும் .பாதுகாப்பு தொடரணியின் முன்னால் இயந்திர துப்பாக்கி ஏந்திய கவசஉடையணிந்த வீரர்களையுடைய இரு வாகனங்கள் ,அதை தொடர்ந்து படை வீரர்களின் வாகனமும்,பயணியர் மற்றும் உணவுபொருட்கள் ஏற்றிய வண்டிகள் மத்தியிலும் இருக்கமாறு வாகன தொடரணி ஒழுங்கமைக்கப்படும்
.
// அவர்கள் படையின் நடுப்பகுதியை சென்றடைந்தபோது அங்கு அடுமனைப் பணியாளர்களும் உணவுப்பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்றுகொண்டிருந்தன //

 இறுதியிலும் இயந்திர துப்பாக்கி ஏந்திய கவசஉடையணிந்த வீரர்களையுடைய வாகனம் வரும் .

  பாதுகாப்பு தொடரணியின் தலைவன் ஒப்புதல் அளித்தபின் படைநகர்வு  (பயணம்)  துவங்கும் ,வாகனங்கள் அனைத்தும் இணையான வேகத்தில் செல்லவேண்டும் ,வாகனத்தொடரின் இருபக்கங்களிலும் அதிநவீன துப்பாக்கி ஏந்திய ரோந்து வாகனங்கள் முன்பும் ,பின்பும் அதிவேகத்தில் தொடர்ந்து கண்காணிப்பர்.அதிகாலை பயணம் தொடங்கியபின் எங்கும் எதற்க்காவும் நிறுத்தப்படமாட்டாது.பொருட்கள் ஏற்றிய வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் ,வண்டியை விட்டுவிட்டு ஓட்டுனரை மட்டும்  வேறு வண்டியில் ஏற்றிகொள்வர்.

   என்னுடைய வண்டியில் தேவையான குடிநீரும் ,கொஞ்சம் ரொட்டிகளும் வைத்திருந்தோம்,சிறுநீர் கழிக்கவும் வண்டி நிற்காது அதனால் அனைவரும் குறைவான தேவைபட்டால் மட்டுமே தண்ணீர் அருந்துமாறு சொனார்கள். எங்களது பயண பைகளை ஏற்றிய வண்டி வாகன தொடரணியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாததால் ஓட்டுனர் அமர் எங்களுடனும் ,அந்த வண்டி ராணுவ வண்டியுடன் இணைத்து கட்டப்பட்டது .

   காலை கதிரவன் வெளிவருவதற்குமுன் முன் துவங்கும் பயணம் அஸ்தமனத்திற்கு ஒரு மணிநேரம் முன்னால் குறிப்பட்ட முகாமிற்கு சென்றடையும் வகையில் பயணம் முன்னரே திட்டமிடப்படும் .இரவில் பயணம் இல்லை .முகாமில் அடுமனை இயங்கினால் புத்துணவு இரவு தங்கும் வாகன தொடரணி குழுவுக்கும் கிடைக்கும் .

//“அந்தியில் புத்துணவு காலையில் உலர்சிற்றுணவு உச்சிப்பொழுதுக்கு அதிலெஞ்சியது கையுணவாக என்பது படைநெறி.//


  வீரர்களுக்கு மதியயுணவாக வழங்கப்படும் (MRE-meals ready to eat)பொட்டலங்களில் ,சமைத்த சோறு அல்லது  பாஸ்தா அல்லது ரொட்டி ,பிஸ்கட்கள்,வேகவைத்து உலரவைத்த ,மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி ,கேக் ஆகியவை இருக்கும் .அதனுடன் சிறிதளவு ரசாயனம் அடங்கிய பை ஒன்றிருக்கும் (நன்கு தூளாக்கப்பட்ட மக்னீசியம்,சிறதளவு கலப்பு இரும்பு துகள்கள் மற்றும் பொடி உப்பு ) அதுனுடன் தண்ணீர் ஊற்றி விருப்பமான உணவை அதனுள் வைத்து இறுக்கமாக மூடி வைத்தால் ஒரு நிமிடத்தில் சூடான உணவு தயார் .

  செந்நா வேங்கை பகுதி ஐம்பத்தியாறில்

   //“உலருணவு சிலநாட்களில் சலித்துவிடும் என நான் எண்ணினேன். ஆனால் சுவைமிகுந்தே வருகிறது.  //

  வேற வழிகிடையாது வீரர்கள் அதை சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம்.நான் திக்ரித் முகாமில் இருந்தபோது நீண்ட நாட்கள் போக்குவரத்து தடைபட்டு உணவுப்பொருட்கள் வராததால் .அந்த MRE உணவு பொட்டலங்களையே ஒரு மாதத்திற்கு உண்டோம் .

   போர்காலத்தில் வீரர்கள் சமைத்த புது உணவுக்காக ஏங்கி கொண்டிருப்பர்.
 செந்நா வேங்கை பகுதி ஐம்பத்திமூன்று

 // “பாண்டவபடையின் முகப்பு தோன்றி அதன் முடிவு தெரிவதற்கு நான்கு நாட்கள் ஆகியிருக்கின்றன .இங்குள்ள உணவுப்பொருட்கள்அனைத்தையும் பொன்கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.கால் நடைகளையும் ஆடுகளையும் விலை கொண்டிருக்கிறார்கள் .//

நவீன படைநகர்வில் வழியிலுள்ள ஊர்களில் உள்ள மக்களிடம் உணவோ, வேறு  பொருட்களோ  வாங்க அனுமதியில்லை.வழியிலுள்ள ஊர்களில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திரளாக நின்று பார்ப்பார்கள் படைநகர்வை .

செந்நா வேங்கை பகுதி ஐம்பத்தொன்பது

// அரவான் மதுவை தொடவில்லை. “உங்கள் குடியில் மது அருந்துவதில்லையா?” என்றான் ஸ்வேதன். “நாங்கள் அருந்தும் மது வேறுவகையானது. அது உரகத்தின் நஞ்சிலிருந்து எடுக்கப்படுவது. சில சொட்டுகளை நாக்கின் அடியில் விட்டு வாய்மூடி அமர்ந்திருப்போம். சற்று நேரத்தில் குருதியெங்கும் அனல் பரவ, காதுகள் கொதிக்க, களிமயக்கு ஏறத்தொடங்கும். எங்களுடைய மது நஞ்சுதான். மானுடர் அவற்றிலொரு துளி அருந்தினாலே உடற்தசைகள் நீலம் கொள்ளும். வலிப்பு வந்து உயிர்துறப்பார்கள். அந்நஞ்சுக்குப் பழகியவர்களுக்கு பிற மது அனைத்தும் நீர் மட்டுமே” என்றான் அரவான்.//

  போர்முனையில் மது தடைசெய்யப்பட்டுள்ளது ,எந்த உயர்பதவியிலிருப்பவர்களும் குடிக்க கூடாது .நான் தங்கியிருந்த  முகாமில் கழிவறையை உறிஞ்சிஎடுத்து சுத்தம்செய்யும் வண்டியை  தினமும் ஈராக்கி ஒருவன் கொண்டு வருவான் .முகாமின் வாயிலில் உள்ள கடும் சோதனைக்குப்பிறகும் மது பாட்டில்களை உள்ளே கொண்டுவருவான் .எங்களுடன் பணிபுரிந்த சிலர் அதை வாங்கி ராணுவ வீரர்களுக்கு ரகசியமாக அதிக விலைக்கு விற்பர் .


செந்நா வேங்கை அறுபது

// “படைபிரிவுகள் அனைத்திற்கும் தனி அடையாளங்களும் பெயர்களும் அளிப்பது  வழக்கம் பாண்டவர்களின் படைகள் முழுக்கவே இலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன .இதோ இவர் மூன்றிலை படைப்பிரிவை சேர்ந்தவர் .அதற்குக்  கீழிருக்கும் எண் அவர்களுடைய பெயருக்கு நிகரானது .மின்படைக்குறியின் கீழ் இரண்டு கோடுகள் பொறிக்கபட்டுள்ளதால் இவர் இரண்டாம் நிலையினர்.இவ்வண்ணம் ஏழு நிலைவரை உண்டு எளிய படை வீரன் ஏழாம் நிலையினன்” என்றான் ஸ்வேதன் . “இவர் அணிந்திருக்கும் கவசத்தின் வலப்பக்கம் சிந்துநாட்டின் கரடி முத்திரை உள்ளது .அதன் கீழ் உள்ள சுருள்கொடி அவருடைய தனி முத்திரை.பெரும்பாலும் அது அவருடைய குடியின் தனி அடையாளமாக இருக்கும் இக்கவசத்தைக் கொண்டே இவர் சிந்து நாட்டில் எக்குடியில் இவ்வூரைச்சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கமுடியும்.இந்த படைபிரிவின்  எப்பிரிவில் எந்நிலையிலுள்ள எவ்வீரர் என்றும் அறிய முடியும்”//

   ஆம் ஒவ்வொரு வீரனின் சட்டையின் இடப்புற மார்புபகுதியில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.அவருக்குரிய
துப்பாக்கி,தலைகவசம்,குண்டுத்துளைக்காத உடல் கவசம் போன்றவற்றில் அவரது எண் பொறிக்கப்பட்டிருக்கும்.வலது கையின் தோள்பட்டைக்கு கீழ் எந்த நிலையினன் என குறிக்கபட்டிருக்கும், ‘v’ வடிவ ஒரு கோடு என்றால் கடை நிலை வீரர் நம்மூரில் constable. அவ்வாறு மூன்று கோடுகள் தான் கைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் .மூன்றாம் நிலைக்குமேல் தோள்பட்டையில் அவரது நிலையை குறிக்கும் கோடுகள் இருக்கும். தோள் பட்டையில் நான்கு கோடுகள் வரை தான் இருக்கும். அதற்கு மேல் உள்ளநிலைகளுக்கு  நான்கு கோடுகளுடன் மின்னும் நட்சத்திரங்கள் குத்தபட்டிருக்கும். இடது கை தோள் பட்டைக்கு கீழ் படையின் எந்த பிரிவை சார்ந்தவர் எனும் குறியீடு இருக்கும் .இந்த குறியீடுகளை வைத்து ஒவ்வொரு ராணுவ வீரனையும் எப்பிரிவில் எந்நிலையிலுள்ள எவ்வீரர் என்று எளிதாக அறிய முடியும்.

 எளிய வீரனுக்கு ரைபிள் எனப்படும் பெரிய வகை துப்பாக்கி,நூற்றுவர் தலைவன் ,ஆயிரத்தவன் போன்ற உயர்பதவியிலுள்ளவர்களுக்கு சிறிய கைத்துப்பாக்கி இருக்கும் .

செந்நா வேங்கை பகுதி அறுபத்திஎட்டு

 // “நேற்று நமது படைப்பிரிவுக்குள் எட்டு விலைப்பெண்டிரை அழைத்து வந்திருக்கிறார்கள் நம் வீரர்கள்” என்றான். அச்செய்தியை முழுக்க உள்வாங்கிக்கொள்ளாமல் “எவர்?” என்று அவன் கேட்டான். “நமது படைவீரர்கள் அருகில் உள்ள சிற்றூர்களிலிருந்து விலைப்பெண்டிரை மாறுதோற்றம் அளித்து கூட்டிவந்திருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுக்க இங்கு தங்கியிருக்கிறார்கள்” என்றான் கஜன்.//

  பாக்தாத் அருகிலுள்ள ஒரு முகாமில் ஐந்தடி ஏழு அங்குல உயரமும் ,நல்ல நிறமும்,அழகும் கொண்ட தேர்ந்தெடுக்க அழகிகள் பனிரெண்டுபேர்  ஒரு மாதம் தங்கிருந்து  வீரர்களை மகிழ்வித்து சென்றனர் .இது போர் முடிந்து வீரரர்கள் முகாம்களில் இருந்தபோது .

செந்நா வேங்கை’ – 56
  //“போருக்கெழும் படைகளில் தவிர்க்கவேண்டியவற்றின் நிரையை சொல்கிறது யுத்தவித்யா தரங்கிணி. அதில் பெண்டிர், குழந்தைகள், வீட்டு விலங்குகள், மலர்கள், பொன்னணிகள், அருமணிகள், பட்டாடைகள், நறுமணப்பொருட்கள், பஞ்சுச்சேக்கைகள், சாமரம், விசிறி, நீராட்டு எண்ணைகள், இசைக்கருவிகள், ஆடி, வாய்மணம் ஆகியவற்றுடன் பதினாறு இன்பங்களில் ஒன்றாகவே இனிப்பும் சொல்லப்பட்டுள்ளது” என்றான்.

அவள் சிரித்து “இன்பங்களும் நுகர்வுகளும் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன” என்றாள். “ஆம், படைவீரனை போர்த்துறவி என்று சொல்லும் வழக்கம் உண்டு.//

   நவீன போர்ப்படையில் பெண்டிர் இருக்கிறார்கள் விமானம் ஓட்டிகளாக,கணினி மற்றும் செய்தித்தொடர்பு பிரிவிலும்,வாகன ஓட்டிகளாவும்,கமோண்டோ பிரிவிலும்  உள்ளனர் அனைத்து பெண்டிரும் துப்பாக்கி மற்றும் அதி நவீன போர்க்கருவிகளை இயக்க தெரிந்தவர்கள் .
குழைந்தைகள்,வீட்டு விலங்குகள் இப்போதும் கண்டிப்பாக அனுமதியில்லை .ஆம் படை வீரன் போர்த்துறவியே.

  செந்நா வேங்கை பகுதி அறுபதில்

//அங்கு படை வீரர்கள் காலைக்கழிப்புக்காக சுரைக்குடுவைகளில்நீருடன் நீண்ட நிரைகளாகநின்றிருந்தார்கள் .இடைவரை உயரமான நான்கு தட்டிகளால் ஒருவர் அமரும்படி மறைக்கப்பட்ட சிற்றிடத்திற்க்குள் குழி தோண்டப்பட்டு அதன்மேல் குழியுள்ள பலகை போடப்பட்டிருந்தது .அந்த படை பிரிவின் அனைவரும் அங்கு மலம் கழித்தபின் அந்த துளையிடப்பட்ட மரமேடையை எடுத்தகற்றி தோண்டப்பட்ட குழியை மண்ணிட்டு  மூடினர் .முந்தைய நாளே ஒவ்வொருவரும் தங்களுக்கென பிடித்துவைத்திருந்த நீரில் முகம் கழுவி பல்தேய்த்துக்கொண்டனர்.அதற்குள் அவ்வாழ்க்கை பழகிவிட்டிருந்தமையால் மிகுந்த விரைவுடன் அதை நிகழ்த்திகொண்டிருந்தனர்.//

  நவீன படைகள் தங்கும் முகாமில் மெல்லிய பலகையால் முழுமையாக  மறைக்கப்பட்ட சிற்றறைக்குள் ஒருவர் அமரும் வகையில் பலகையாலான கழிப்பறை இருக்கும் .கழிப்பறைக்குள் ரசாயனம் ஊற்றிய பை தொங்கவிடப்பட்டிருக்கும். ஒற்றைக்கோடு பொறிக்கப்பட்ட கையுறை அணிந்த இளம்படை வீரன் அல்லது வீராங்கனை (அவர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவடையாதவர்களாக இருப்பார்கள்) அந்த மலம் இருக்கும் பையை வெளியே எடுத்து தீவைத்து எரிப்பார்கள் .அவர்கள் மலம் கழித்தபின் மென்தாளால் துடைக்கும் பழக்கமுடையவர்கள் அதனால் தண்ணீர் பிரச்சனையில்லை .

 நிரந்தர முகாம்களில் நெகிழியால் ஆனா சிற்றறைக்குள் ரசயானம் ஊற்றப்பட்ட கழிப்பறை  இருக்கும் .தினமும் அதை உறிஞ்சி எடுக்கும் வண்டி மலத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு நன்னீரால் சுத்தம் செய்து புதிய ரசயானத்தை ஊற்றி செல்வர் .

  மருத்துவநிலைகள்

 //ஸ்வேதனை நோக்கி திரும்பிய திருஷ்டத்யும்னன் “குலாடரே, நீர் மருத்துவநிலைகளுக்கு பொறுப்பானவர். உமக்குக் கீழே நான்கு ஷத்ரியகுலத்தவர் மருத்துவநிலைகளை ஒருங்கிணைப்பார்கள். மருத்துவநிலைகள் மூன்று சாகைகளாக செயல்படுகின்றன. அரசர்களுக்குரியது ராஜன்யம். வீரர்களுக்குரியது ஷாத்ரிகம். விலங்குகளுக்குரியது வன்யம். மூன்று அமைச்சர்கள் அம்மூன்றுக்கும் பொறுப்பேற்பர். பிறிதொருவர் மருந்துகளுக்கு பொதுவாக பொறுப்பாவார். இவற்றில் ஷாத்ரசாகை மிகப் பெரிது. நூற்றியெட்டு கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அது. ஒவ்வொரு கண்டத்துக்கும் ஒரு மூத்த மருத்துவர் தலைவராக இருப்பார். அவை ஒவ்வொன்றும் பத்து பத்ரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்ரத்துக்கும் ஏழு முதிர்ந்த மருத்துவர்கள் இருப்பார்கள். நூறு துணைமருத்துவர்களும் நாநூறு மருத்துவ உதவியாளர்களும் நூறு வண்டிகளும் ஆயிரம் மஞ்சங்களும் கொண்டது ஒரு பத்ரம். ஒவ்வொரு பத்ரத்திலும் அதற்குரிய மருந்துகளும் பிற பொருட்களும் தனியாக கருதப்பட்டிருக்கும்.//


 
 
ஒவ்வொரு படை வீரனுக்கும் அடிப்படை முதலுதவி பயிற்சி,குண்டடி படும் தன்னை அல்லது சகவீரனுக்கு செய்யும் மருத்துவப்பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும் .ஒவ்வொரு முகாமிலும் மருத்துவநிலையும் ,மருத்துவர் அல்லாத மருத்துவத்தில் தேர்ந்த பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பார்கள் .தேவையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும் .

 ஐந்து அல்லது ஆறு முகாம்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பெரிய முகாமில்  பயிற்சிப்பெற்ற மருத்துவர் சிலரும் எக்ஸ்ரே ,உயர்சிகிழ்ச்சைக்கான வசதிகளும்,அனைத்து மருந்துகளும் இருக்கும்.
 சுற்றியுள்ள சிறிய முகாம்களில் நோயுறுபவர்கள் அல்லது சிறிய காயம் படுபவர்கள் முதலுதவிக்குபின் பெரிய மருத்துவநிலைக்கு வாகனங்களில் அழைத்துவருவார்கள்.சிறிய முகாம்களிருந்து வராத்தில் இருமுறை மட்டுமே பெரிய மருத்துவநிலைக்கு வாகனம் செல்லும் அதுவும் காலையில் புறப்பட்டு அந்திக்குள் திரும்பிவரும் .தொடர்சிகிழ்ச்சை தேவைபடுபவர்கள் பெரிய மருத்துவ நிலைகளில் அனுமதிக்கப்படுவார்கள் .

 சிறிய முகாம்களில் கை, கால் துண்டாதல் அல்லது குண்டடிபடும் படை வீரனை,உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் விரைவில் பெரிய மருத்துவநிலைக்கு சிகிழ்ச்சைக்கு அனுப்பிவைப்பர்.அவ்வீரனுக்கு உடனடியாக உயர்சிகிழ்ச்சை தேவைப்படுமெனில் உரிய முதலுதவைக்குபின் அருகிலுள்ள நட்பு நாட்டின் மருத்துவமனைக்கு விமானம் அல்லது ஹெலிக்கொப்டரில் அனுப்பி வைப்பர் .

//ஒவ்வொன்றிலும் புண்படுவோரை நோக்கவும் நோயுற்றோரை பேணவும் வெவ்வேறு பகுதிகள் இருக்கும். நஞ்சூட்டப்பட்டோருக்கான பிரிவுகளும் உண்டு” என்றான்.//

மருத்துநிலையில் உள் நோயாளிகள் ,எலும்பு ,கண் போன்ற தனித்தனி பிரிவுகள் உண்டு .


//ஒவ்வொரு அரசகுடியின் மருத்துவக்குழுவும் அந்நாட்டு அரசமுத்திரை பொறிக்கப்பட்ட வெண்கொடியுடன் செயல்படுவார்கள். ஷாத்ரப் பிரிவில் ஒவ்வொரு கண்டத்துக்கும் பத்ரத்துக்கும் தனித்தனியான முத்திரைகள் உண்டு. வெண்கொடியில் வலப்பக்கம் கண்டத்தின் முத்திரையும் இடப்பக்கம் பத்ரத்தின் முத்திரையும் இருக்கும்.”//
 
ஆம் மருத்துவநிலைக்கும் அங்கு பணிபுரிபர்களுக்கும் தனி முத்திரை உண்டு .பச்சையில் நிறத்தில்  கூட்டல் குறியை குறிக்கும் அடையாளம்.

ஷாகுல் ஹமீது